விதி

தினமும் அதிகாலையில் ராமநாதைய்யர் வீட்டு வாசலில் வந்து கால்களை மடக்கி, ஜாக்கிரதையாக அமர்ந்துவிடுவேன்.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
3 min read

தினமும் அதிகாலையில் ராமநாதைய்யர் வீட்டு வாசலில் வந்து கால்களை மடக்கி, ஜாக்கிரதையாக அமர்ந்துவிடுவேன். இங்கேதான் காலையில கொஞ்சம் நேரம் நிழலா இருக்கும்.

முன்னே மாதிரி இல்லே, இப்போ எல்லாம் நல்லா குறட்டையோட தூக்கம் வருது. வயிறு ஒரு பக்கமா பெரிசாவுது. மடி சுரக்குதுபோல, வீக்கமா இருக்குது. மாத்தி மாத்தி குட்டிங்களும் உள்ளே உதைக்குது.

முதல் நாள் காலையில் கதவைத் திறந்தவர், 'மரகதம், நம்ம வீட்டு வாசல்ல ஒரு ஆடு வந்து படுத்துண்டிருக்குப் பாரு' என்றபடி வாசற்படி இறங்கி வந்தார் அய்யர்.

'என்ன இப்பொ, ஆடுதானே. ஏதோ சிங்கம் வந்துட்டா மாதிரி அலர்றேளே' என்றவாறு கையில் காப்பியுடன் வந்தாள் மரகதம் மாமி. இரண்டு நிமிடம் என்னைப் பார்த்தபடி நின்றிருந்த மாமியின் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர்.

'பாவம்னா, 'சினை போல இருக்கு. புள்ளத்தாச்சி வயிறு பெரிசா ஒதுங்கியிருக்கு. போங்கோ, கொல்லையிலேர்ந்து கொஞ்சம் இலை, தழைகளைக் கொண்டு வந்து போடுங்கோ. புள்ளதாச்சி ஆடு, மாடெல்லாம் நிறைய சுத்தமான தண்ணி குடிக்குமாம். அந்த பிளாஸ்டிக் 'டப்' புல தண்ணி புடிச்சிண்டு வாங்கோ, குடிக்கட்டும்' என்று குரலில் அன்பு ஒழுகியது.

ராமநாதன் கை நிறையத் தழையும், வாளி நிறையத் தண்ணீரும் கொண்டு வந்து என் முன் வைத்தார். நாக்கால் துழாவித் தழையைத் தின்றேன். தண்ணீர் குடித்தேன். அருகில் வந்து தன் கைகளால் கழுத்து, முதுகை எல்லாம் தடவிக் கொடுத்தார் ராமநாதன். குழந்தைகளில்லாத தம்பதிகள். கருவில் குட்டிகளுடன் இருக்கும் என் மேல் பாசத்தைப் பொழிந்தார்கள்!

'இன்னா அய்யரே, வூட்டு வாசல்ல வந்து அசிங்கம் பண்ணிருச்சா?' கேட்டபடி வந்தான்' - எதிர்வீட்டு முனியன். என் எஜமானன்.

'அதெல்லாம் ஒண்னுமில்லேப்பா; அதும்பாட்டுக்கும் 'தேமே'ன்னு படுத்துண்டிருக்கு, பாவம்' என்று தண்ணீர் குடித்து கொண்டிருந்த என்னைப் பார்த்துச் சொன்னார் ராமநாதன்.

'ஏம்பா, இந்த ஆட்டுக்கு என்ன ஆகாரம் குடுப்பெ?' என்று மரகதம் மாமி கேட்டாள்.

'இலை, தழைங்கதாம்மா. கொஞ்சம் கொண்டை கடலை, பருப்பு எல்லாம் அரைச்சு விழுதாவும் குடுப்பேன். நம்ம ஊர்ல மனுஷன் நிக்கவே இடம் இல்லெ, ஆடு மேயப் புல்வெலிக்கு எங்கே போவர்து? கெடைச்சா, எப்பொவாவது புல்லு வாங்கியாந்து போடறதுதான்..'

'பொய் சொல்கிறான்' என்று நினைத்துகொண்டேன். பாவம், அவனது குடும்பத்துக்கே அவன் வருமானம் போதவில்லை, எனக்கெங்கேர்ந்து புல்லுக்கட்டு?

'எப்பொ குட்டி போடும்?'

'நாலு மாசத்திலேர்ந்து அஞ்சு மாசத்துக்குள்ளாற போட்டுடும். மொத பிரசவம்ன்னா ஒண்ணோ ரெண்டோ போடும். ரெண்டாவது பிரசவம்ன்னா மூணு, நாலு குட்டி கூட போடும்..' என்று சொல்லிவிட்டு, என்னை இழுத்துகொண்டு வீட்டுக்குப் போனான்.

எனக்கு முனியனோடு போக விருப்பமில்லை. என்னைப் பார்த்தபடி ராமநாதய்யரும் மரகதம் மாமியும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் கண்களில் ஓர் ஏக்கமும், முகத்தில் வருத்தமும் தெரிந்தன. அவர்களை எனக்கு இப்போது மிகவும் பிடித்து விட்டது.

அடுத்த நாள் காலை, கட்டுப் புல்லும், பக்கெட்டில் தண்ணீரும், ஊற வைத்த கொண்டைக் கடலை, பருப்பும் ராமநாதய்யர் வீட்டில் எனக்குக் காத்துகொண்டிருந்தன. நிழலில் தூங்கி விழித்த எனக்கு நல்ல பசி. மாமி வைத்திருந்த உணவை வயிறாறத் தின்றேன்.

'இன்னைக்கெல்லாம் இருந்தா, பேரனோ, பேத்தியோ ஐந்து வயது ஆகியிருக்கும். தெய்வம் ரெண்டு உசிரையும் எடுத்துண்டு போயிடுத்தே' என்று மரகதம் புலம்ப, ராமநாதய்யர் அவளை அணைத்து ஆறுதல் சொல்வதுபோல, தலையைத் தடவிக்கொடுத்தார். எனக்கு கண்ணில் நீர் வழிந்தது.

முனியன்- அஞ்சலை தம்பதியருக்கு ஐந்தும் பெண் குழந்தைகள். அவர்களுக்கு இரண்டு வேளை சோறு போடவே முனியனுக்கு வருமானம் போதாது. கிராமத்தில் வயலில் நின்று கொண்டிருந்த என்னை இரவோடு இரவாகத் தன் வண்டியில் ஏற்றிக் கொண்டுவந்துவிட்டான். கையில் கிடைத்த இலை, தழைதான் என் ஆகாரம்.

என்றாவது ஒருநாள், ஒரு அவசரத்துக்கு கசாப்புக் கடை பாயிடமோ, சந்தையிலோ என்னை விற்றுக் காசாக்கிவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அதற்குள் நான் செனையானதில் அவனுக்கு மகிழ்ச்சிதான் - வரும்படி ஏறுதில்லை?

மூணு குட்டிங்களும் உதைத்தபடி உள்ளே வளைய வந்தன. ஒரு நாள் ஒரே வலி. கருப்பை சுருங்கி, வாய் பிளந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குட்டிகள் - கருப்பாக ஒன்று, கருப்பும் வெள்ளையுமாய் ஒன்று, கருப்பும் சாம்பலுமாய் ஒன்று - பூமியில் வந்து விழுந்தன.

வழுக்கி, வழுக்கி எழுந்து நிற்க, மீண்டும் மீண்டும் கீழே விழுந்தன. நாக்கால் நக்கிக் கொடுத்தேன். முகத்தால் மெதுவாக முட்டி முட்டி நிற்க வைத்தேன். தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்தன குட்டிகள்.

நான் படுத்துக்கிடந்தபோது, முட்டி முட்டிப் பால் குடித்தன. முன்னங்கால்களைத் தூக்கி நின்று, கீழே விழுந்து, எழுந்தன.

ராமநாதய்யரும், மாமியும் முனியன் வீட்டுக்கு வந்து என்னையும், குட்டிகளையும் பார்த்தனர். முகத்தில் அவ்வளவு சந்தோஷம். கையிலிருந்த தட்டிலிருந்து மஞ்சள், குங்குமம் எடுத்து என் நெற்றியில் பூசினர். தேங்காய் பூ, பழம், பணம் வைத்து முனியனிடம் கொடுத்து, 'முனியா, குட்டிகளையும், தாயையும் நல்லா பாத்துக்க?' என்று சொல்லிச் சென்றனர். பணத்தை எடுத்துகொண்ட முனியன் என்னையும், குட்டிகளையும் பார்த்த பார்வையில் அன்பு தெரியவில்லை.

'இன்னா அய்யரே, மாட்டுக்குப் பூசை போடுவாங்கோ பாத்துக்கிறேன். நீ இன்னா ஆட்டுக்குப் பூசை போடுற?'

'ஆடானா என்ன, மாடானா என்னய்யா? ஒரு உயிர்தானய்யா. குட்டி போட்டிருக்குது, மனசுலெ என்னமோ தோணித்து. எங்க வீட்டுல ஒரு குழந்தை பொறந்தா, தாய்க்கு சீர் செய்யறதில்லையா?'

முனியனுக்கு என்ன புரிந்ததோ, தட்டில் இருந்த பணம் தெரிந்தது.

நான் மெதுவாக முன்னே நடந்து செல்ல, மூன்று குட்டிகளும் குதித்தவாறு பின்னால் ஓடி வருவதை வீட்டு வாசலிலிருந்து பார்த்தபடி நின்றிருந்தனர் ராமநாதய்யரும், மரகதமும். தெருவில் வீடுகளின் வாசலில் இருந்த சின்னச் சின்னச் செடிகளை மேய்ந்தவாறு நாங்கள் பவனி வருவது பழகிப் போனது.

மாதங்கள் சில சென்றன. குட்டிகள் என் உயரத்துக்கு வளர்ந்துவிட்டன.

நல்ல முகூர்த்த நாள் ஒன்றில், அடுத்த தெருவில் இருக்கும் மாடி வீட்டில் பந்தல் போட்டு ஏதோ விசேஷம். பெரிய ஸ்பீக்கர் செட்டில் சினிமா பாடல்கள் அலறிக் கொண்டிருந்தன. கார்கள், வேன்கள் என ஒரே கூட்டம். முனியனும் அந்த வீட்டுக்குச் சென்று ஏதோ வேலை பார்த்துவந்தான். கவுன்சிலர் வீட்டில் அவர் பெயர்த்திக்குப் பிறந்தநாளாம்.

அன்று இரவு முனியன் வீட்டிலும் ஒரே கொண்டாட்டம். கடையிலிருந்து வீட்டிற்கு மளிகை, குழந்தைகளுக்கு புதுத் துணிகள் என எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். கவுன்சிலர் வீட்டுப் பிரியாணி வாசம் மூக்கைத் துளைத்தது. என் வயிற்றில் உதைத்த குட்டிகளின் வாசம் எனக்குத் தெரியாதா என்ன?

நான் என் விதியை நொந்துகொண்டேன். மடியில் சுரந்த பால் கனத்தது. என் மனதும் அதைவிட கனமாக இருந்தது.

மறுநாள் காலை மாமியின் வீட்டு வாசலில் தூக்கமின்றிப் படுத்துக் கிடந்தேன். எனக்கு உணவு வைத்த மரகதம் மாமியோ, ராமநாதய்யரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

'இதைப் பார்த்தாப் பாவமா இருக்கு. வாயில்லா ஜீவன், சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம எவ்வளவு கஷ்டம் அதுக்கு. மனுஷாளுக்குக் கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா? பாருங்கோ, அதன் கண்ணிலேர்ந்து நீரா வடியறது' என்று புடவைத் தலைப்பில் தன் கண்களைத் துடைத்துகொண்டே என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள் மாமி. ஏங்கும் அன்னையின் மனது.

எனக்கு உணவு பிடிக்கவில்லை. மெதுவாக மடியில் வலியுடன் எழுந்து, ஊர் எல்லையை நோக்கி நடந்தேன். முனியனின் கண்ணில் படுமுன் சென்றுவிட வேண்டும். பிரியாணி வாசம் என்னைத் துரத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.