தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காலத்தைக் கடந்து நிற்கும் கண்ணற்ற கவியரசரின் காவியங்கள்...

இலக்கியச் செல்வத்தின் வாயிலாக, இங்கிலாந்து நாட்டுக்கு உலகப் புகழ் தேடிக் கொடுத்தவர்களில் தலைசிறந்தவர் மில்டன். அந்த சம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்திகளும், மகாராணிகளும் சரித்திரத்தில் இடம்பெற்றது உண்டு.

News image

மில்டன்

Updated On :6 அக்டோபர் 2024, 9:21 am

டி.எம். இரத்தினவேல்

இலக்கியச் செல்வத்தின் வாயிலாக, இங்கிலாந்து நாட்டுக்கு உலகப் புகழ் தேடிக் கொடுத்தவர்களில் தலைசிறந்தவர் மில்டன். அந்த சம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்திகளும், மகாராணிகளும் சரித்திரத்தில் இடம்பெற்றது உண்டு. காணாமல் போனவர்களும் உண்டு. ஆனால், இளைய தலைமுறையினருக்கு அந்தச் சக்ரவர்த்திகளின் பெயர்கள் தெரியாது. நானூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் மில்டனின் பெயரும் புகழும் பரவி வளர்ந்துவருகிறது.

மில்டன் இன்றும்கூட கவிச்சக்ரவர்த்தியாக, கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இடம்பெற்றிருக்கிறார்.

'காலத்தால் அழியாத காப்பியங்களைப் படைத்ததோடு, பொருள் ஆழமும், சொல்வன்மையும் கொண்ட கவிநயம் மிக்க நடையழகா? ,

கவிநயம் மாறாமல் சொல்ல வந்ததைச் சற்றே கோடிட்டு காட்டும் நிறுத்தும் முறையா? , அழகு, தூய்மை, பண்பு போன்ற உயர்சால் குணங்களை ஆராதிக்கும் தன்மை, மலைபோல் இடர்வந்த காலத்திலும் நிலை குலையாமல் நின்று காத்த தெய்வீக உணர்வு, தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடித்த ஒழுக்கம்..' போன்றவை தனது எழுத்தில் பிரதிபலிக்கும் ஆளுமை போன்ற பல சிறப்பு

களுமே ஆகும்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும், 'இறைவன் வழி காட்டுவான்!' எனும் தத்துவமே கண்ணற்ற கவியரசர் மில்டனுடைய காவியங்களுக்கும் அவருடைய வாழ்க்கைக்குமே ஜீவ நாடியாகத் திகழ்ந்துள்ளன.

இசை, இலக்கியத் துறைகளில் தேர்ந்த பண்பு நிறைந்த பெற்றோர்களில் வளர்க்கப்பட்ட மில்டன் உலக மகா கவிஞனாய் உருவெடுத்ததில் வியப்பேதுமில்லை.

கல்லூரியில் பயிலும் போதும், தனது அழகிய உருவத்தாலும் தூய்மையான நடத்தையாலும் அனைவரையும் கவர்ந்தார் என்றாலும், மில்டனுடைய வாழ்வில் சோகமே சூழ்ந்தது.

சோகத்தில் முடியும் துன்பியல் நாடகத்தில் தலைசிறந்த கிரேக்கக் கவிஞர்களான சோஃபக்ளிஸ், ஈஸ்கைலஸ், யூரிபிடிஷ் ஆகியோரை உதாரணமாகக் கூறுவதுண்டு.

அந்தக் கவிஞர்களின் வழித்தோன்றல் என்பதைக் காட்டிலும், இந்த முப்பெரும் கவிஞர்களின் மொத்த உருவமே மில்டன் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடைய படைப்புகளில் துன்பமும், துயரமும், சோகமும் வழிவதைக் காணலாம்.

கவியரசு மில்டனுடைய சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது. அவரே பலவிதச் சூழ்நிலைகளால் வஞ்சிக்கப்பட்டவர். பல தீர்க்கத்தரிசிகளுக்கு வாய்த்த மனைவிகள் அவர்களைக் கொடுமைப்படுத்தியதைப் போல், மில்டனும் தனது முதல் மனைவியால் பெருந்துன்பங்களுக்கு ஆளானார். அவருடைய முதல் மனைவி ஆடம்பரத்தில் மோகம் கொண்டவள். பகட்டும் பளபளப்பும் நிரம்பிய நவீன நாகரிக வாழ்க்கைக்குப் பழகிப் போனவள். மணவாழ்க்கையில் முதலில் சில ஆண்டுகள் வாழ்ந்துப் பிடிக்காமல் போய், சில காலம் பிரிந்தவுடன் மீண்டும் மில்டனுன் சேர்ந்து வாழ்ந்தாள்.

மில்டனோ லட்சியவாதி. அவருக்கு இந்த மனைவியின் ஆடம்பரப் போக்கு பிடிக்கவில்லை. பிரிந்து மீண்டும் சேர்ந்தவுடன் மில்டனுக்கும் அவரது முதல் மனைவிக்கும் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். பின்னர், முதல் மனைவி மறைந்தாள்.

மில்டன் மீண்டும் மற்றுமொரு பெண்ணை மணந்தார். அவளும் பிள்ளைப் பேற்றின்போது மரணம் அடைந்தாள்.

இல்லற வாழ்வின் நாட்டம் காரணமாக, மில்டன் தனது 55-ஆம் வயதில் மூன்றாவது முறையாக மணம் செய்துகொண்டார். அவள் பெயர் மேரி பவல்.

மில்டனுடைய இல்லற வாழ்வில் புயல் வீசிய வண்ணம் இருந்தது. அவருடைய புதல்வியர், தாயற்ற நிலையில் அநாதைகள் போல் வளர்ந்தனர். தாயற்று வளர்ந்த அந்தப் பெண் குழந்தைகளின் உள்ளத்தில் வெறுப்பும் இகழ்ச்சியும் குடிகொண்டன. அந்தப் பெண்கள் இழிவாக மில்டனை நடத்தினர். தந்தைக்கு துரோகம் செய்தனர்.

இவ்வளவுக்கும் நடுவில் மில்டனுக்கு பேரிடி போல் மற்றுமொரு சோதனை ஏற்பட்டது. அவருடைய கண் பார்வையில் பழுது ஏற்பட்டது. நாளடைவில் மில்டனுடைய கண் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது.

கண்பார்வை இழந்தவுடன் மில்டன் கவிதைகள் எழுதுவதையும் பயணம் செய்வதையும் நிறுத்தவில்லை. தாந்தே, பெட்ரார்க் ஆகிய இரு கவிஞர்கள் கூட பார்வையற்றவர்கள்தான். அவர்கள் பிறந்து வாழ்ந்த இத்தாலி நாட்டில் மில்டன் பயணம் செய்து, தம் கவிதைகளை இயற்றினார்.

பார்வையற்ற நிலையில், மில்டன் ஏனையோர் காண இயலாத அருங்காட்சிகளையெல்லாம் கண்டு கவிதையில் வடித்தார்.

'சுவர்க்க நீக்கம்', 'சுவர்க்க மீட்சி', 'லிஸிடஸ்' , 'சாம்சனின் துயர்' போன்ற அழியாப் படைப்புகளில் காவிய எழிலும், கம்பீர நடையும், விருந்தாகும் சீரிய கருத்துகளும், அவரது வாழ்வில் அனுபவித்தத் துயரின் அத்தனை கொடுமைகளும் கண் பார்வையற்ற காலத்தில் கவிதைகளாக மிளிர்ந்தன.

'சாம்சனின் துயர்' என்ற துன்பியல் நாடகத்தில் மில்டனின் சுயசரிதையின் தாக்கம் எங்கும் காணப்படுகிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள யூதக் கதையைத் தழுவி, கிரேக்கத் துன்பியல் நாடகத் துறையில் எழுதப்பட்டுள்ளது இந்தக் காவியத்தின் கரு.

இது மில்டனுடைய ஆன்மாவின் அடித்தளத்தில் இருந்து வெளிப்பட்ட உணர்ச்சிகளாகும். ஆழ்ந்து நோக்கினால் இந்தக் காவியம் மில்டனுடைய வரலாற்றையே பின்னணியாகக் கொண்டது.

அதேபோன்று, மூன்றாவது மனைவியான மேரி பவலால் மில்டன் கைவிடப்பட்டார். தம் மக்கள் மூவரின் அலட்சியத்துக்கும் ஆளானார். அதனால், சாம்சனின் முடிவையே மில்டனும் கண்டார்.

-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.