ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிளாஸ்டிக் துகள்களால் ஆண்மை குறைவா?

பிளாஸ்டிக் துகள்கள் ஆணினுடைய விந்தணுக்கள் வரை கண்டறியப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளன.
பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்
Published on
Updated on
2 min read

பிளாஸ்டிக் துகள்கள் ஆணினுடைய விந்தணுக்கள் வரை கண்டறியப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளன. இதை எப்படி நீக்குவது என்ற குழப்ப நிலையில், மருத்துவ உலகம் வியந்திருக்கும் சூழ்நிலையில் ஆயுர்வேதத்தில் பங்கு இதில் எப்படி உதவிக்கரமாய் இருக்கும்.

-சாரங்கன், திண்டுக்கல்.

காலையில் பற்பசையை பிளாஸ்டிக் நைலான் தூரிகையின் மீது தடவி பல் துலக்கும் நேரம் தொடங்கி இரவு உணவை பிளாஸ்டிக் தட்டில் போட்டு சாப்பிடுவதும், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என நாம் அன்றாடம் சந்திக்க வேண்டிய வாழ்க்கை முறையில் சிந்திக்க வேண்டிய ஒரு வினாவை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள்.

உடல் உட்புறம் நுழைந்துவிடும் நுண்ணியப் பொருள்களை நெய், மஜ்ஜை , மாமிசக் கொழுப்பு, தாவர எண்ணெய் ஆகியவற்றை உடல் தன்மைக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து உள்ளுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இவற்றில் நிறைந்துள்ள கனம், குளிர்ச்சி, பரவும் தன்மை, நெய்ப்பு, மந்தம், நுண்ணிய நுழைவு, மிருது, நீர்த்த நிலை போன்ற குணங்களால் ஒட்டிக் கொள்ளச் செய்து இந்தக் குணங்களுக்கு நேர்எதிரான வியர்வை சிகிச்சை மூலம் உருக்கிவிட வேண்டும்.

நெய்ப்பு, வியர்வை சிகிச்சையினால் நுண்ணிய பிளாஸ்டிக் பொருள்கள் உடலில் எங்கு தங்கியிருந்தாலும் உருகிய நிலையில் குடலுக்குள் வந்துவிடும். அவ்வாறு வந்து சேர்ந்துள்ள நிலையில் காலதாமதமின்றி வாந்தி, பேதி, எனிமா குடலைச் சுத்தப்படுத்தும் சிகிச்சை முறையால் வெளியேற்றிவிட வேண்டும்.

வெறும் குடலை சுத்தப்படுத்தும் சிகிச்சை முறைகளில் இவை. அதனுடன் சேர்த்து பல நன்மைகளையும் அவை ஏற்படுத்தித் தருகின்றன. நெய்ப்பு எனும் திரவ மருந்துகளாகிய நெய் முதல் தைலம் வரை சரியான வகையில் அருந்துவதால், வயிற்றில் பசியின் தன்மை சீராக எடுத்தல், குடல் முழுவதும் சுத்தமடைதல், ஏழு தாதுக்களாகிய உணவின் சாரம், ரத்தம், மாம்ஸம், கொழுப்பு, எலும்பு , மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை

மறுமலர்ச்சி அடைதல், உடல் பலம் மற்றும் நிறம் வலுப்படுதல், புலன்களின் திறன் வளருதல், கிழத்தன்மை தாமதப்படுதல், நூறாண்டுகள் வாழ்தல் ஆகிய நன்மைகளையும் பெறுகிறோம்.

வியர்வைச் சிகிச்சையினால் குடல், ஏழு தாதுக்கள், உட்புறக் குழாய்கள், தோல் மற்றும் எலும்புகளில் நுண்ணிய வடிவில் சேர்த்திருக்கக் கூடிய பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிற அழுக்குகள் உருகி குடலுக்குள் வந்து சேர்வதால் உடல் உட்புற சுத்தத்தின் மேன்மையை அடைகிறோம்.

வாந்தி, பேதி மற்றும் எனிமா சிகிச்சைகளைச் சரியாகச் செய்வதன் மூலமாகத் தெளிந்த அறிவு, புலன் வலு, தாதுக்கள் ஸ்திரத்தன்மை, சீரான பசி, மூப்பு தள்ளிப் போதல் ஆகிய நன்மைகளை அடைய முடியும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்களின் கெடுதிகள், அவற்றின் நுண்ணிய நுழைவுகளால் நாம் சந்தித்திருக்கக் கூடிய ஆபத்துகள், வருங்காலச் சந்ததியினர் கஷ்டப்படப் போகும் நிலை, அவற்றில் ஆயுர்வேதத்தின் சிறந்த பங்கு மூலம் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள், நம்முடைய பாரம்பரியமான உணவு, வாழ்வியல் முறைகள் போன்ற விழிப்புணர்வுக் கருத்துரைகள் மிகவும் அவசியமாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com