பறவைகளின் கூ(வீ)டுகள்

மனிதர்கள் வீடு கட்டுவதற்கு முன்பு தங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளோடும் அந்த வீட்டை கட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
தூக்கணாங்குருவி
தூக்கணாங்குருவி
Published on
Updated on
2 min read

மனிதர்கள் வீடு கட்டுவதற்கு முன்பு தங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளோடும் அந்த வீட்டை கட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவ்வாறே பறவைகளும் தங்களது கூ(வீ) டுகளை மிகுந்த தொழில்நுட்பங்களோடும், பாதுகாப்போடும் கட்டுகின்றன. அவ்வாறு சில பறவைகள் வீடுகள் கட்டும் விதங்கள்:

தூக்கணாங்குருவி

உயரமான மரங்களின் கிளைகளின் உச்சியில் ஆண் பறவை மட்டுமே கூடு கட்டும். கட்டும்போதே கூட்டுக்குள் கணவனும், மனைவியும் தங்குவதற்கு ஓர் அறையும், முட்டையிட்டு குஞ்சு பொரித்து, அவற்றைப் பாதுகாக்க ஒரு அறையுமாக இரு அறைகளுடன் கூடு கட்டும்.

பிறகு இரு அறைகளையும் களிமண்ணால் பூசி வைத்துவிட்டு, பெண் தூக்கணாங்குருவியை அழைத்து வந்து அழகாக இருக்கிறதா? என்று கேட்கும். பெண் குருவி சில திருத்தங்கள் சொல்லி, அதையும் ஆண் குருவி செய்து முடித்த பிறகு இருவருமே ஒன்றாக கூட்டிற்குள்(புதுமனை புகுவிழா)செல்வார்கள்.

குஞ்சுகள் பொரித்தவுடன் பெண் பறவை மின்மினிப்பூச்சிகளை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்து கூட்டுக்குள் உள்ள களிமண்ணில் ஒட்டி வைத்து விடும். மின்மினிப்பூச்சிகள் இரவு முழுவதும் கூட்டிற்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

தேன்சிட்டு

சிட்டுக்குருவியைவிட சிறிய பறவை. நீண்ட பெரிய இலைகளை வெகு அழகாக மடக்கி, அதன் ஓரங்களையும், மடக்கித் தைத்து, அதற்குள் இவை முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரிக்கின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய இலைகளை இணைத்தும், நார், பஞ்சு போன்றவற்றை கயிறு போல திரித்தும் கூடு கட்டுகின்றன. இவை இலைகளை தைத்திருக்கும் விதத்தைப் பார்த்தால், தையல்காரர் ஒருவர் துணிகளை தைத்தது போலவே இருக்கும். இதனால் இந்தப் பறவைக்கு 'தையல் சிட்டு' என்று பெயர் வந்ததாம்.

மரங்கொத்தி

கற்றாழையைச் சுரண்டுவதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவை இந்தப் பறவை. பெயருக்கேற்ப தனது உளி போன்ற மிக உறுதியான அலகால் மரத்தைக் கொத்தி, தோண்டி, துளைகளை உண்டாக்கி அவற்றை கூடாக மாற்றிக் கொள்கின்றன.

மரங்களைப் பொந்து போல நன்றாக குடைந்து, அதற்குள் முட்டையிட்டு குஞ்சுகளை வளர்க்கின்றன. மரத்தைக் கொத்தும்போது அதற்குள் இருக்கும் புழுக்கள்,பூச்சிகளைத் தனது நீண்ட பசையுடைய நாக்கால் பற்றி இழுத்து உணவாக உண்ணும். செங்குத்தான மரம், மன்கம்பம் போன்றவற்றை இறுகப் பற்றிக் கொண்டு அதனை தொற்றியபடியை மேல்நோக்கு செல்லும் சக்தி படைத்தவை.

கொண்டைக்குருவி

மைனாவைவிட சிறிய பறவை. இவற்றின் கொண்டை சிறிது உயர்ந்து காணப்படும். உடல் முழுவதும் செதில் போன்ற வடிவங்களில் காணப்படும் இந்தப் பறவைகள் தங்களது கூடுகளைத் தட்டையான கிண்ண வடிவில் அமைத்துகொள்கின்றன.

கட்டடங்கள், புதர்கள், மரங்களின் இடுக்குகளில் கூடு கட்டி, அதில் முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரிக்கின்றன. கூட்டை கட்டி முடித்த பிறகு பெற்றோர் இருவரும் சேர்ந்தே கூட்டைப் பாதுகாத்து, குஞ்சுகளையும் பராமரிக்கிறார்கள். இவை கூடுகளைத் தொங்கும் வகையில் கூம்பு வடிவத்தில் கட்டுகின்றன. நாணல், இலைகள், வைக்கோல், தாவரப் பொருள்களைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சேகரித்து வந்து கூடுகளை உருவாக்குகின்றன.

வானம்பாடி

பெரும்பாலும் திறந்தவெளிகளில் நெல் வயல்களில் காணப்படும் பறவை. மிக அழகான குரல் வளையைக் கொண்ட இந்தப் பறவை பாடினால் மழை வருமாம். இவை பாடும் குரலைக் கேட்டு, முன்னோர்கள் மழை வரப்போகிறது என்று முன்கூட்டியே உணர்ந்துள்ளனர்.

தரையிலேயே இரை தேடி தரையிலேயே கூடு கட்டும் பறவை. சிட்டுக்குருவியை விட சின்னப் பறவையான இவை தரையில் உள்ள சிறுகுழியில் புற்களை ஓரமாக வைத்து, முறைப்படுத்தி,வரிசையாக அடுக்கி, கோப்பை வடிவத்தில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரிக்கின்றன. வானில் பறக்கும்போதும் பாடிக்கொண்டே பறப்பதால் இவற்றுக்கு 'வானம்பாடி' என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இருவாட்சி

வானூர்தியைப் போலவே பறக்கவும், அதைப் போலவே ஒலியும் எழுப்பும் பறவை. பெண் இனம் பெரிய மரங்களில் உள்ள பொந்துகளில் புகுந்துகொண்டு முட்டையிட்டு அடை காக்கும்.

தனது அலகின் முனையை மட்டும் வெளியே நீட்ட முடிந்த அளவுக்கு இடம் வைத்து தனது எச்சத்தைக் கொண்டு, கூட்டின் சுவரை அடைத்துவிடும். குஞ்சுகள் வளரும் வரை குஞ்சுகளுக்கும் அதன் தாய்க்கும் ஆண் பறவையே சுற்றித் திரிந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும். பெரிய அலகு உடைய இந்தப் பறவைக்கு 'இருவாய்கள்' போன்ற அமைப்பு இருப்பதால் 'இருவாட்சி' என்று பெயர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com