

50- ஆவது படத்தை தயாரிக்கும் சிம்பு!
சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படம் தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சிம்பு நடிப்பில் கடைசியாக 2023-இல் 'பத்து தல' திரைப்படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், நடிகர் கமலின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ்' நிறுவனமானது சிம்புவின் 48-ஆவது திரைப்படம் உருவாகவிருக்கிறது என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
அதன் பின்பு டேக் ஆஃப் ஆகாமல் இருந்தது. அந்தத் திரைப்படம் தொடர்பாக எழுந்த வதந்திகளுக்கு தேசிங்கு பெரியசாமி அப்போது விளக்கமும் அளித்திருந்தார். பிறகு, படத் தயாரிப்புப் பணியிலிருந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விலகுவதாகத் தகவல்கள் வந்தன. அதனை உறுதி செய்யும் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருந்தது.
சிம்புவுக்கு தேசிங்கு பெரியசாமியின் கதையில் நடித்தாக வேண்டும் என ஆசை இருப்பதால், அந்தத் திரைப்படத்தைத் தானே தயாரிக்க முன் வந்திருக்கிறார். அதற்காக 'ஆத்மன் சினி ஆர்ட்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.
இதுதொடர்பாகப் பதிவிட்டிருக்கும் சிம்பு, 'இறைவனுக்கு நன்றி! தயாரிப்பாளராகப் புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி. இவை தவிர என்னுடைய 50-ஆவது திரைப்படத்தைத் தொடங்குவதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. எனக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் இது கனவு திரைப்படம். நீங்க இல்லாமல் நான் இல்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுமட்டுமின்றி, அவர் மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இது அவரின் 48-ஆவது திரைப்படம் என்ற இடத்தைப் பிடித்துவிட்டது. ஆதலால், தேசிங்கு பெரியசாமி இயக்கும் திரைப்படம் சிம்புவின் 50-ஆவது படம். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
அவரின் 49-ஆவது படத்தை 'பார்கிங்' படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தை 'இட்லி கடை' , 'பராசக்தி' போன்ற படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராம்குமார் இயக்கும் படத்தில் சிம்பு மாணவராக நடிக்கிறாராம்.
இதுமட்டுமல்ல, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு நடிக்கிறார் என்ற அறிவிப்பும் அண்மையில் வெளியாகியிருந்தது.
'ஜென் சி' வைப்பில் உருவாகும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அநேகமாக இது சிம்புவின் 51-ஆவது திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியை வாங்கிய சமந்தா!
நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் 'கோல்ப்' விளையாட்டின் உலக பிக்கில் பால் லீக்கில் பங்கேற்கும் சென்னை அணியைச் சொந்தமாக வாங்கியிருக்கிறார்.
பிப்ரவரி 1-இல் சமந்தா உலக பிக்கில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் அணியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில், சிட்டாடல் வெப் தொடர் இயக்குநர் ராஜ் நிடிமோருவின் கைகளை சமந்தா பிடித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து சமந்தா, ராஜ் நிதிமோரு டேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். விரைவில் இருவரும் தங்களது புதிய உறவை பற்றி அறிவிப்பார்கள் என்ற வதந்தியும் பாலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து இருவரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இயக்குநர் ராஜ் நிடிமோரு, இயக்குநர் டிகே இணைந்து தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, சிட்டாடல்: ஹனி பன்னி மற்றும் கன்ஸ் & குலாப்ஸ் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கி உள்ளனர். இவற்றில் தி ஃபேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களில் சமந்தா நடித்திருந்தார்.
த.வெ.க. விழாவில் வெற்றிமாறன்?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரையில் த.வெ.க. நிர்வாகிகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டிருக்கிறார். வெற்றிமாறன் பொதுவாக எந்த அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளிலும் பெரிதாகக் கலந்துகொண்டதில்லை.
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தின் முன் தயாரிப்பு வேலை நடக்கிறது. சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலைத் தழுவியே இந்தப் படம் எடுக்கப்படவிருக்கிறது. அந்த நாவல் ஜல்லிக்கட்டை மையப்படுத்தியது. இதற்காக நாட்டு மாடுகள் பற்றியும் ஜல்லிக்கட்டு பற்றியும் தகவல்களை அறிந்துகொள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
இந்த நிலையில்தான், 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வெற்றிமாறன் மதுரை சென்றிருக்கிறார்.
இந்த சமயத்தில்தான் மதுரை வடக்கைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள், இரட்டை மாட்டு வண்டி பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெற்றிமாறன் அந்தத் தேதியில் மதுரையில் இருப்பதை அறிந்து வெற்றிமாறனுக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைத்திருக்கின்றனர். 'வாடிவாசல்' படத்துக்காக நாட்டு மாடுகள் குறித்து
அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருக்கும் வெற்றிமாறனும் த.வெ.க. நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றிருக்கிறார். 'இந்த விஷயம் அரசியல் ஆகிவிடக்கூடாது. மாடுகள் சம்பந்தமாக அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்திலேயே வருகிறேன்' என வெற்றிமாறன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்துதான் வெற்றி மாறன் அந்த நிகழ்வில் கலந்திருக்கிறார். மூன்று ரவுண்ட்களாக போட்டி நடந்திருக்கிறது. அதில் இரு ரவுண்ட்களை மிக ஆர்வமாக கூர்மையாகக் கவனித்துப் பார்த்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார் வெற்றிமாறன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.