ரஷியா- உக்ரைனைச் சேர்ந்த காதலர்கள் கேரள மாநிலத்துக்கு உள்பட்ட அம்ருதபுரியில் உள்ள அம்மா ஆசிரமத்தில் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர், கரோனா தொற்று காரணமாக நான்கு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த ஜோடி தற்போது திருமண வாழ்வில் இணைந்திருக்கிறது.
உக்ரைனின் கீவ் பகுதியைச் சேர்ந்த மணமகன் சாஷா ஆஸ்ட்ரோவிக், ரஷியாவின் மாஸ்கோவைச் சேர்ந்த மணமகள் ஒல்யா ஆஸ்ட்ரோவிக் (நீ உசோவா) ஆகிய இருவரும்தான் காதல் தம்பதியினர்.
2019-இல் சாஷா முதல்முறையாக அம்ருதபுரி வருகையின்போது, இருவரும் சந்தித்தபோது காதல் மலர்ந்தது. பின்னர், சாஷா மாஸ்கோவில் ஒரு வேலையைப் பெற்றார். அங்கு அவரும் ஒல்யாவும் மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
2020-இல் கரோனா தொற்று இருவரையும் பிரித்தது. சாஷா தனது குடும்பத்தைப் பார்க்க கியேவில் இருந்தார். இரு நாடுகளிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு விரிசலை உருவாக்கியது.
2022-இல் சாஷா அம்ருதபுரிக்குத் திரும்பி, அம்ருதா பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கினார். துயரக் காலங்களில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்களுக்கு ஆதரவளிக்க ஆன்லைன் தலையீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சியுடன், சாஷா அம்ருதா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற பயின்றுவருகிறார்.
ஒல்யாவோ ரஷியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இணைய வழியில் உளவியல் படித்து வருகிறார்.
ரஷியா- உக்ரைன் போர் காரணமாக, இருவரும் சந்திக்காமல் இருந்தனர். 2024 டிசம்பரில் ஒல்யா இறுதியாக அம்ருதபுரிக்கு வந்தடைந்தார்.
2025 ஜனவரி 20-இல் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான ஆசீர்வாதங்களுக்காக, அம்ருதா பல்கலைக்கழக வேந்தர் சுவாமி மாதா அமிர்தானந்தமயியை அணுகினர்.
எல்லைகளைத் தாண்டிய அன்பை எப்போதும் வலியுறுத்திய சுவாமி மாதா அமிர்தானந்தமயி, இருவரின் திருமணத்தை நடத்திவைக்க ஒப்புக் கொண்டார்.
அப்போது, 'இரு நாடுகளுக்காகவும் பிரார்த்தனை செய்யும்படி, கூடியிருந்த பக்தர்களை மாதா அமிர்தானந்தமயி கேட்டுக் கொண்டார். இது ஒலியாவை ஆழமாக நெகிழச் செய்து கண் கலங்கினார். தொடர்ந்து, ஜனவரி 23-இல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
'சுவாமியின் உபதேசங்கள் அழகான பிரதிபலிப்பாகும். காதல் உலகளாவியது. அனைத்து எல்லைகளையும் தாண்டியது. எங்கள் திருமணம் பெரும்பாலும் வேறுபாடுகளால் பிளவுபட்ட உலகில் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகும்.
இரு நாடுகளுக்கு இடையிலான போர் நமது உறவை வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய கடினமான காலங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் உறுதியுடன் இருப்பது மிகவும் இன்றியமையாததாகும்' என்கிறார் சாஷா.
'ரஷியா- உக்ரைன் போரால் பதற்றம், மனச்சோர்வு பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதே எனது வாழ்க்கையின் நோக்கம்' என்கிறார் ஒல்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.