
ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் 2021-இல் தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், சாய்பல்லவி அளித்திருக்கும் ஒரு பேட்டியில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். அதில், 'நடிப்பைத் தவிர வேறு எதில் ஆர்வம் அதிகம்? ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்? ' எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, 'ஓய்வு நேரத்தில் எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வேன். சமீபத்தில், நான் தேனீ வளர்ப்பைத் தொடங்கியிருக்கிறேன். நான் இன்னும் அதில் அவ்வளவு திறமைசாலியாகவில்லை. ஓய்வு நேரங்களில் எனக்குத் தனிமை பிடிக்கும்.
அப்போது திரைப்படங்களைப் பார்ப்பேன். நடனமாடுவேன். விரும்பினால் சமைப்பேன். பெரும்பாலும் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவேன். என் தோட்டத்துக்குச் செல்வேன். இப்போது சில விவசாய வேலைகள் நடக்கின்றன. அவர்களுடன் சேர்ந்து கேரட், உருளைக்கிழங்கு போன்றவைகளை அறுவடை செய்வேன். இப்படித்தான் போகும் என் ஓய்வு நேரம்' என்றார்.
சில இயக்குநர்கள் ஏமாற்றிவிட்டார்கள்..
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடாமுயற்சி'. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு நடிகை ரெஜினா அளித்திருக்கும் பேட்டியில், 'பொதுவாக, பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் கொடுக்கப்படுவதில்லை. விடாமுயற்சியில் நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் பணிபுரிந்ததில் எனக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது.
இந்தக் கதாபாத்திரத்தை என்னைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என இயக்குநர் மகிழ் திருமேனி எனக்கு நம்பிக்கையளித்தார். எனக்கு நியாயமளிக்கும் ஒரு கதாபாத்திரத்தையே அவர் எழுதியிருப்பார் என நம்பினேன். ஒரு சிக்கலான கதாபாத்திரத்தை என்னால் நியாயப்படுத்த முடியும் என்று நம்பியதற்காக இயக்குநருக்கு நன்றி.
ஒரு படத்தின் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்தப் படத்தின் கதையையும், அதன் வலிமையையும் உணரலாம். அதனால்தான் நான் என் இயக்குநர்களை நம்புகிறேன். ஆனாலும் சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதனால்தான் என்னிடம் சொல்லப்படும் ஒவ்வொரு கதையிலும், ஒரு தனித்துவத்தை உணர்ந்தால்தான் அதில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன்' என்றார்.
டேட்டிங் குறித்து பார்வதி!
2008-இல் அசர வைக்கும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி 'பூ' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் பார்வதி. பெண் உரிமை, அரசியல், சமத்துவம் என மனதில் பட்டதைத் துணிச்சலுடன் பேசுபவர். தனது சொந்த வாழ்க்கைக் குறித்தும் மனம் திறந்து பேசுபவர்.
சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் பார்வதி மனம் திறந்துப் பேசியதில், 'டேட்டிங் ஆப்பில் அக்கவுன்ட் வைத்திருக்கிறேன். அவ்வப்போது அதில் நல்ல பசங்க இருக்காங்களா எனத் தேடிப் பார்ப்பேன். ஆனால், இதுபோன்ற டேட்டிங் ஆப்பில் காதல் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. ஒருவரையொருவர் சந்தித்துப் பழகி, தானாக நடக்கும் காதல்தான் எனக்குப் பிடிக்கும். என்னுடைய சினிமா துறையிலேயே நல்ல பையன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பையனைக் காதலித்தேன். காதலில் எனக்கு இருக்கும் பிரச்னை முன் கோபம்தான். சின்ன விஷயங்களுக்குக்கூட கடுங்கோபம் வரும். அதனால்தான் என் காதல் உடைந்து போனது. ரொம்ப நாளுக்குப் பிறகு அதே பையனைப் பார்த்துப் பேசி, இப்போ இரண்டுபேரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இனி ஒரு காதலில் விழ வேண்டுமென்றால் அந்த முடிவைச்சரியாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
எனக்கு பொறாமையா?
2010-இல் தமிழில் வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த 'குஷி' படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரியல் ஒன்றில் நடித்திருந்தார். அந்தத் தொடரில் சமந்தா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக, நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா அளித்த பதில் வைரலாகி வருகிறது.
நேர்காணலில் பேசிய சமந்தா, 'திருமணம், குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமே பெண்ணின் முழுமைக்கு அர்த்தம் என்று இந்த சமூகம் கட்டமைத்துள்ளது. ஆனால், தனிமையிலும் மகிழ்ச்சி சாத்தியம்.
பெண்கள் திருமணமாகி, குழந்தைகள் பெற்று இருந்தால்தான் முழுமையானதாக சமூகத்தில் பார்கிறார்கள். என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவில்லை என்றால், நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது தவறு' என்று தெரிவித்திருக்கிறார்
இதனைத்தொடர்ந்து, 'கணவர் வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றபோது அல்லது வேறொரு உறவைத் தழுவியபோது எப்போதாவது 'பொறாமை' அடைந்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த சமந்தா, 'நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமைதான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். மற்ற எல்லாம் பரவாயில்லை, ஆனால் பொறாமை என்பதற்கு மட்டும் என்னிடம் இடமில்லை' என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், பேட்டியும், சமந்தாவின் சமீபத்திய தோற்றமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.