சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தை அடுத்த உமையாள்புரம் கிராமத்தின் அடையாளமாகக் கருதி, 150 ஆண்டு முதிர்ந்த ஆலமரத்துக்கு மண் திட்டு அமைத்து வேர்களைப் பலப்படுத்தி, கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
விவசாயமே பிரதானமாகக் கொண்ட இந்தத் கிராமத்தில் அரசுப் பள்ளி, அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ள பொது இடத்தின் அருகே அரை ஏக்கர் பரப்பளவுக்கு இந்தப் பழமையான ஆலமரம் காணப்படுகிறது. மரநிழலில் இந்தப் பகுதியில் எந்த நேரமும் குளிர்ந்த காற்று வீசுகிறது.
திருவிழாக்கள் கொண்டாடும்போதும், பொது பிரச்னைகளுக்கு ஒன்று கூடும் போதும் இந்த ஆலமரத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காலை, மாலை வேளைகளில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கும், கிராம மக்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த மரத்தின் நிழலும் குளிர்ந்த காற்றும் பிரதானமாக இருந்து வருகிறது.
ஆலமரப் பட்டையில் இருந்து கிடைக்கும் பாலை எலும்பு முறிவுவை சீராக்கும் மருந்தாக, 'பாட்டி வைத்தியம்' முறையில் கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதுமட்டுமின்றி மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்த மரத்துக்கு அருகிலேயே அருகி வரும் இச்சிலி, அரச மரங்களையும் வைத்து கிராம மக்கள் வளர்த்து வருகின்றனர்.
இந்த மரங்களின் நிழலில் கூட்டுறவு வங்கி, வேளாண் அலுவலகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மூதாட்டி அன்னபூரணி கூறியதாவது:
'150 ஆண்டுக்கு முன் எங்களது வம்சாவளியைச் சேர்ந்த முப்பாட்டனார், இந்த ஆலமரத்தை நட்டு வளர்த்தாக எனது பெற்றோர் தெரிவித்தனர். ஆலமரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தால் மன அமைதி கிடைக்கிறது.
குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கும், பெரியவர்கள் பொழுதுபோக்குவதற்கும் வசதியாக இருக்கிறது. மரங்களின் அருகே கிராம மக்கள் வணங்கும் குல தெய்வ கோயில்களும் உருவாகி விட்டன' என்கிறார் அன்னபூரணி.
பெ.பெரியார்மன்னன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.