ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா- 125

சென்னையின் பழமையான கோயில்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை பல்லவ மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி கட்டினார்.
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா- 125
Published on
Updated on
2 min read

சென்னையின் பழமையான கோயில்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை பல்லவ மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி கட்டினார்.

கோயில் கட்டப்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், 1896-இல் கலை, கலாசார, பண்பாட்டு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, 'ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா' எனும் பொது நல அமைப்பு உருவானது. 1900-இல் முறைப்படி சபாவாகப் பதிவு செய்யப்பட்டு, 124 ஆண்டுகளைக் கடந்து, 125-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சபாவின் நினைவுகள் குறித்து அதன் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் கூறியது:

'தென்னிந்தியாவிலேய மிகவும் பழைமையான சபா 'ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா' எனலாம். 1896-இல் இதனைத் துவக்கியவர் திருமலாச்சாரியார். அன்றைய சென்னையின் முக்கியமான பிரமுகர்களில் ஒருவர். ஆரம்பக் காலத்தில், சபா நிகழ்ச்சிகளுக்கென்று தனி அரங்கம் கிடையாது. அவருடைய வீட்டில்தான் நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஜி.என். பி. என்று பிரபலமாக அறியப்பட்ட கர்நாடக சங்கீத வித்வான் ஜி.என். பாலசுப்ரமணியத்தின் அப்பா நாராயணசாமி ஐயர் சபாவின் செயலராக, பல ஆண்டுகள் இருந்தார்.

நிர்வாகக் குழுவில் மைசூரு, திருவாங்கூர் சமஸ்தானங்களின் திவான்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இருந்தனர். பிற்காலத்தில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., , ஜெயலலிதா ஆகியோரும் சபா உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோதும், சபாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றன.

ஹரிகதை விற்பன்னர்களான கிருஷ்ண பாகவதர், பஞ்சாபகேச சாஸ்திரிகள், மாங்குடி சிதம்பர பாகவதர், முத்தையா பாகவதர் போன்றோர் இங்கே நிறைய ஹரிகதை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். பேராசிரியர் ரங்காச்சாரியாரின் பகவத் கீதை தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏராளமானவர்கள் திரளாக வந்துள்ளனர்.

மகா வைத்யநாத ஐயர், கோனேரிராஜபுரம் வைத்யநாத ஐயர், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார், பிடாரம் கிருஷ்ணப்பா, டைகர் வரதாச்சாரியார், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சுப்ரமணிய ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர் என்று வாய்ப்பாட்டு ஜாம்பவான்கள் இங்கே கச்சேரிகள் செய்திருக்கின்றனர். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் இங்கே நூறு கச்சேரிகளுக்கு மேல் செய்திருக்கிறார்.

வாத்திய இசைக் கலைஞர்களான திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர், கோவிந்தசாமிப் பிள்ளை, கரூர் சின்னசாமி ஐயர், வீணை சேஷண்ணா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூரு செளடையா, திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை.. என்று இங்கே கச்சேரி செய்யாத ஜாம்பவான்களே கிடையாது.

1960-களில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகளும், திரையுலக நட்சத்திரங்களான வைஜயந்தி மாலா, ஹேமமாலினி, திருவாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரது நாட்டிய நாடகங்களும் சபாவின் நிதி சேர்ப்புக்கு மிகவும் உதவின.

இசை, நாட்டியம், இதர நிகழ்ச்சிகளோடு முதலில் பிப்ரவரி மாதங்களிலும், அதன் பிற்காலத்தில் டிசம்பர் மாதங்களிலும் இசைவிழாவைக் கொண்டாடும் பழக்கமும் பல்லாண்டுகளாகத் தொடர்கிறது. அப்போது கச்சேரிகளோடு 'லெக்சர் டெமான்ஸ்டிரேஷன்' என்ற பெயரில் கர்நாடக இசையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து செயல் விளக்க நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நம் பாரம்பரிய கலை, கலாசாரத்தை கற்றுக் கொடுக்கும் வகையில் இசை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை, சியாமா சாஸ்திரி, அன்னமாச்சார்யா, புரந்தரதாசர் திருவிழாக்கள் நடத்துவதோடு, முத்துசுவாமி தீட்சிதருக்கு மரியாதை செய்யும் வகையில் 'சங்கீதாஞ்சலி' விழாவையும் நடத்துகிறோம். அந்த விழாவை எட்டயபுரம் முத்துசுவாமி தீட்சிதர் நினைவு மண்டபத்திலும் நடத்துகிறோம். அதற்கு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று பல்வேறு ஊர்களில் இருந்தும் வித்வான்கள் எட்டயபுரத்துக்கு வந்து ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி, முத்துசுவாமி தீட்சிதரின் கிருதிகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்துவர்.

ஆண்டுதோறும் டிசம்பர் சீசனில், ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா சார்பில் கர்நாடக இசைக் கலைஞருக்கான 'சங்கீத கலா சாரதி' விருது, நடனக் கலைஞருக்கு 'நாட்டிய கலாசாரதி' விருது, நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 'நாடக கலாசாரதி', சிறந்த குருக்களை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் 'ஆச்சார்ய கலாசாரதி' ஆகிய விருதுகளை அளிக்கிறோம்.

2000-இல் சபாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினோம். அதற்கு முன்பாக, மியூசிக் அகாதெமியில் ஒரு கச்சேரியை செய்துவிட்டு, 'இதுதான் என் கடைசி கச்சேரி! எனக்கு வயதகிவிட்டது.

இனி கச்சேரி செய்யப்போவதில்லை'' என்று சொல்லிவிட்டார் செம்மங்குடி . அவரிடம் நான், 'இப்படி சொல்லிவிட்டால் எப்படி? அடுத்து எங்கள் சபாவின் நூற்றாண்டு விழா வருகிறது. அதில் நீங்கள் கட்டாயம் கச்சேரி செய்ய வேண்டும்' என்றேன். அவரும் சம்மதித்து, தனது 92 வயதிலும் செம்மங்குடி இரண்டரை மணி நேரத்துக்குக் கச்சேரி செய்து அசத்தினார்.

ஆண்டு முழுவதுமாக நூறு நிகழ்ச்சிகளை வழங்கி, சிறப்பான முறையில் நூற்றாண்டு விழாவை நடத்தி முடித்தோம். அடுத்து 2025-இல் சபாவுக்கு 125-ஆவது ஆண்டு. அதையும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், திட்டங்களையும், பணிகளையும் விரைவில் துவங்குவோம்'' என்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.