மாற்றாந்தாய்!

பொங்கும் பகல், மங்கும் இரவுக்கு விடை கொடுத்து வழி அனுப்பும் விடியற்காலை நேரம்.
மாற்றாந்தாய்!
Published on
Updated on
5 min read

பொங்கும் பகல், மங்கும் இரவுக்கு விடை கொடுத்து வழி அனுப்பும் விடியற்காலை நேரம். காகத்தின் கரைதலைக் கேட்டு, தூக்கத்துக்கு விடை கொடுத்து, குயிலி ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். ஜன்னலுக்கு வெளியே, பூத்துக் குலுங்கிய வேப்ப மரத்துக் கிளைகள், காற்றில் அசைந்தாடி, மெல்ல மலரும் ஒளிக்கு வரவேற்பு அளித்துகொண்டிருந்தன.

ஒளிக் கற்றைகளைக் கண்டதும், புதியதோர் நாளுக்கான திரை விலகியது போல், மரத்திலிருந்த பறவைகள், பல்வேறு ஒலிகளை எழுப்பி, விடியலுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தன. தீவிர 'பறவை ஆர்வலர்' இல்லையென்றாலும், பறவைகளுக்கென்று அவள் மனதில் ஒரு தனி இடம் உண்டு.

காக்கை முதல் குயில் வரையில் பல பறவைகளின் வாழ்க்கை முறைகளை அறிந்து வைத்திருந்தாள். தன் பெண் இணையின் விருப்பத்துக்கேற்ப கூட்டை அமைக்கும் ஆண் தூக்கணாங்குருவியின் புரிதல் போன்ற நுண்ணிய விவரங்கள் அவளை அசர வைத்திருக்கின்றன. அதுபோன்ற புரிதல், அனைத்து ஆண்களுக்கும் இருந்துவிட்டால், பெண்களின் வாழ்க்கையில் உணர்வு போராட்டங்கள் குறைந்துவிடும் என்ற கற்பனையையும் மனதில் ஓட விட்டிருக்கிறாள்.

பறவைகள் எழுப்பும் ஒலியை அவ்வப்போது உள்வாங்கி ரசிப்பாள். காலைப்பொழுதில் அந்த ஒலி அலைகள், மனதில் சந்தோஷத்தை விதைக்கும் ஆற்றல் படைத்தவை என்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும் என்று நினைத்து கொள்வாள். அதுபோன்ற ஒலி அலைகள், தற்போது அவள் சுமந்துகொண்டிருக்கும் மனச் சோர்வுக்கு மருந்தாக அமைந்துவிட்டது.

அவளுடைய மனச் சோர்வுக்கான காரணம், காதலித்து கைப்பிடித்த கோகிலன் மாறுபட்ட நடவடிக்கைகள்தான். மனிதாபிமானத்துடன் கூடிய மனைவியின் செயல்பாடுகளில் அவனுக்கு நாட்டம் இல்லாததால், மண வாழ்க்கையில், 'பிரிவு' என்ற அஸ்திரத்தை பிரயோகிக்க ஆரம்பித்தான். அதில், நன்றி மறந்து, சுயநலம் என்ற சாயம் பூசப்பட்டதை, அவளால், எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

'பிரிந்து விடலாம்' என்று அவன் ஒரு முறை சொன்னபோது, 'இதை சொல்ல நா கூசவில்லையா? ஜாதி போர்வையை விரிச்சு, எங்க வீட்டில் நம்மிடையே மலர்ந்து வளர்ந்த காதலை நசுக்க பார்த்தாங்க? அவுங்க உணர்வுகளை மிதிச்சு, உங்களை மதிச்சு, வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஆனால், மண வாழ்க்கையில், குறுகிய காலத்திலேயே என்னை பிரியணும்னு தோணிடுச்சு. இந்த எண்ணங்களில் சுய நலம் மட்டுமே வியாபித்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. பிரிவை மனதார ஏற்கிறேன். ஆனால், அதற்கான காரணத்தை என்னால் துளியும்கூட ஏற்க முடியாது'' என்று அவனுக்கு பதில் சொன்னது, குயிலியின் நினைவுக்கு வந்தது.

கடும் எதிர்ப்புகளிடையே மலர்ந்த திருமணத்துக்குத் துணை நின்ற, கோகிலனுடைய நெருங்கிய நண்பனான ஆதவனும் அவனுடைய மனைவியும், குயிலியின் வாழ்க்கையில் முக்கியமானவர்கள். ஆதவன் தன் பெயருக்கேற்ப, உதவி என்ற ஒளியை தாராளமாகப் பகிர்ந்தான். கணவனும், மனைவியும் ஜாதி பிரச்னையால், சுற்றம் சூழலைவிட்டு பிரிந்ததால், அதன் வலியை உணர்ந்தவர்கள். அதனால், குயிலி தம்பதி சந்தித்த எதிர்ப்புப் போராட்டங்களில், தோள் கொடுத்து, 'நண்பேண்டா' என்று நிரூபித்து காட்டிய நல்ல உள்ளம் படைத்தவர்கள்.

குயிலி-கோகிலன் ஆகிய இருவரின் நலிந்து போன மனநிலை புரிந்த ஆதவன், அவனுக்கு இருந்த சில பிரத்யேக குடும்பப் பொறுப்புகளையும் மீறி, எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், அந்தத் தம்பதியின் மன நிலையை மேம்படுத்த அயராது பாடுபட்டான். குயிலி அவனை தன்னலமற்ற, அக்கறையுள்ள சகோதரனாகப் பாவித்தாள். பிரத்யேகப் பொறுப்பு என்பது, ஆட்டிசப் பாதிப்புக்கு உள்ளான ஆதவனின் நான்கு வயது பெண் குழந்தை பற்றியதுதான். ஆதவனின் மனைவி, தன் வேலையைத் துறந்து, குழந்தை மீது முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.

கல்லூரிப் படிப்பில், சமூக சேவை வட்டத்துக்குள் புகுந்தபோது, ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளோடு பழகி, அவர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு குயிலிக்கு கிட்டியது. அந்தத் துறையில் அனுபவம் பெற்ற பலரிடம் கலந்துரையாடியதில், அந்தக் குழந்தைகளை பற்றிய பல தகவல்களை அவளால் அறிந்து, புரிந்துகொள்ள முடிந்தது. அவளுடைய ஆழ்ந்த புரிதலில் சேகரித்த, 'ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு. குழந்தைகளின் வளர்ச்சியில், ஆட்டிசக் குறைபாடுகளின் அறிகுறிகள், பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன. அவற்றில், பல குறைபாடுகள், தகுந்த சிகிச்சை முறையால், குணப்படுத்த கூடியவைதான்' போன்ற தகவல்கள் அவள் மனதில் பதிந்திருந்தன. ஆதவன் தம்பதியின் குழந்தையோடு, தன் நேரத்தை செலவிடுவதை குயிலி வழக்கமாக்கிக் கொண்டாள்.

'இதுபோன்ற குழந்தைகளுக்கு கூடுதலான அன்பும் அரவணைப்பும் தேவை. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும், சில பிரத்யேகத் திறமை ஒளிந்து கொண்டிருக்கும். ஆட்டிச குழந்தைகளில் சிலர், நினைவாற்றல், கணிதம், இசை அல்லது கலை போன்ற ஒரு பகுதியில் அசாதாரணத் திறனைக் கொண்டிருக்கலாம். அத்தகைய குழந்தைகள் 'ஆட்டிஸ்டிக் சாவன்ட்ஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். முறையான பயிற்சிகளின் மூலம், அந்தத் திறன்களை வெளியே கொண்டு வந்தால், மற்ற குழந்தைகளைப் போல், இந்தக் குழந்தைகளும் செயல்பட முடியும். நம் அனைவரது கூட்டு முயற்சியால், இந்தக் குழந்தையை ஒரு 'ஆட்டிஸ்டிக் சாவன்ட்ஸாக' மாற்றுவோம். ஆட்டிசக் குறைபாடுள்ள ஒரு குழந்தை, தன் பதினோறாவது வயதில் பட்டம் பெற்று சாதனை படைத்த தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. குழந்தைக்கு, செவித்திறன் ஓரளவுதான் குறைந்திருப்பதால், நம் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது...'' என்ற குயிலியின் ஊக்க வார்த்தைகள், ஆதவன் தம்பதியின் மனத் தளர்ச்சிக்கு மருந்தாக அமைந்தது.

பறவைகளின் குரல் ஒலிகளை எழுப்புவதன் மூலம், சோதனை அடிப்படையில், அந்தக் குழந்தைக்கு, அன்றாட செயல்பாடுகளுக்கான சில சமிக்ஞைகளை கற்று தந்தாள். பசியைத் தெரிவிக்க காகம் போல கரைவதற்கும், 'ரெஸ்ட் ரூம்' போக கிளி போல் 'கீ..கீ..' என்று கத்துவதற்கும், வீடியோ- ஆடியோ சாதனங்களைப் பயன்படுத்தி, பயிற்சி அளித்தாள். நாளடைவில், அந்தக் குழந்தைக்கும் குயிலிக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது.

குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு, வெளியே செல்ல தயங்கிய பெற்றோருக்கு அந்த நெருக்கம் சற்று ஆறுதல் அளித்தது. குழந்தையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, அவசர வேலையாக ஆதவன் தம்பதி ஸ்கூட்டரில் பயணித்த அந்த நாள், அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு கரிநாளாக அமைந்தது. எதிரே வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர்கள் உயிரை குடித்த துக்கச்செய்தியில், குயிலி தம்பதி குடும்பத்தினர் நிலைகுலைந்தனர்.

ஏதும் அறியாத குழந்தையை அழைத்துப் போக, ஆதவன் தம்பதியின் பெற்றோர் உறுதியாக மறுத்துவிட்ட நிலையில், மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், அனைவரும் திகைத்து நின்றனர்.

'இதுபோன்ற குழந்தையை கவனிச்சுக்கறது ரொம்ப கஷ்டம். அதனால், பேசாம அநாதை இல்லத்தில் சேர்த்துடுங்க...?'' என்று உற்ற நண்பர்களை இழந்த துக்கம் கரைவதற்கு முன், பலரும் இதே யோசனையை வழங்கி, ஒதுங்கினார்கள். எறும்பூர கல்லும் தேய்ந்தது. நண்பனை இழந்த துக்கத்திலிருந்து வெளியே வந்த கோகிலன் அந்த யோசனையை முழுவதும் ஏற்றுக் கொண்டது போல், 'அநாதை இல்லம்' என்ற திசையை நோக்கி செயல்பட தொடங்கினான்.

குயிலியின் சிந்தனை முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததை உணர்ந்ததும், கோகிலன் கோபப்பட ஆரம்பித்தான். அதில்தான், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றி, வேகமாக வளர ஆரம்பித்தது.

'நாம புதுசா கல்யாணம் ஆனவங்க. நமக்குன்னு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. நீயும் ஒரு குழந்தைக்குத் தாயாகி, அந்த பாச உணர்வுகளில் நாம் இருவரும் மூழ்கி மகிழ வேண்டும். இப்பதான், என் குடும்பத்தினர், நம்மை ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு இறங்கி வந்திருப்பது போல் தெரிகிறது. உன்னுடைய பிடிவாதம், அதற்கு ஒரு தடைக்கல்லாக இருந்துவிடக் கூடாது. இந்த வாய்ப்பை நழுவவிட நான் விரும்பவில்லை. அது நிறைவேறிவிட்டால், நமக்கு ஒரு வசதியான வாழ்க்கை காத்திருக்கிறது. உன் புரட்சிக்கரமான எண்ணங்களை நான் ஏத்துக்கிட்டாலும், அவுங்க ஒரு போதும் அதை ஏத்துக்க மாட்டாங்க? இந்தச் சமயத்தில், இப்படி மடத்தனமா சிந்திக்கறதை நிறுத்திடு...'' என்று இடைவெளிவிடாமல், அவன் திரும்பத் திரும்ப இப்படி பேசியதை குயிலி பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதனால், அவர்களிடையே இடைவெளி அதிகரித்தது.

தன் முயற்சியைக் கைவிடாமல், காதுக்கு இனிமையாக பாடும் குயில்கள், தங்கள் குஞ்சுகளையும்கூட இருந்து நேரடியாகப் பராமரிப்பது இல்லை. இந்தக் குழந்தையும் அப்படித்தான். அவள் மனதுக்கு நெருக்கமான பறவைகளின் செயல்பாடுகள் பற்றிய மேற்கோள்களுடன், கோகிலன், குயிலியை சமாதானப்படுத்த முயன்றான்.

அவன் பேசியது, அவளுடைய மனதில் முள்ளாக தைத்தது.

'தன் கூட்டில் முட்டையிடும் குயிலின் குஞ்சுகளை பராமரிக்கும் காக்கையாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன். பிரத்யேகமான கவனம் தேவைப்படும் குழந்தை இது. அந்தக் குழந்தையை தத்து எடுத்து, நம் குழந்தையாக வளர்ப்போம். உன் நண்பனுக்கு செய்யும் நன்றி கடன் அதுவாகத்தான் இருக்கும். தயவு செய்து சம்மதி..'' குயிலியும் என்று கோகிலனிடம் கெஞ்சினாள்.

அவளுடைய கெஞ்சல்கள் அவனுடைய மாறுபட்ட எண்ணங்களை ஒரு துளியும் கரைக்கவில்லை. எண்ணங்களால் பிரிந்தவன், தன் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டான்.

பொங்கி வரும் பாலில் தண்ணீர் தெளித்தது போல், பல திசைகளிலும் பட்டமாகப் பறந்த குயிலியின் நினைவலைகள் அடங்கி நின்றன.

அந்த காலை நேரத்தில், எதிர்பாராத விருந்தினராக, கோகிலன் வந்தான்.

'உனக்கு பிடித்த, லெமன் டீ போடட்டுமா?'' என்றாள் குயிலி.

'உன்னைப் பிரிந்ததிலிருந்து, எனக்கு பிடித்த லெமன் டீ குடிப்பதில்லை. மீண்டும் நான் லெமன் டீ குடிப்பது உன் கையில்தான் இருக்கிறது''.

அவன் வார்த்தைகளில் உண்மையின் கலப்பும் குறைவாக இருந்தது போல் தோன்றியது.

'என்னுடைய விருப்பத்தை ஆமோதித்தால். அது சாத்தியம்தான்.''

'உன் நடவடிக்கைகள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அம்மா என்று அழைக்க, நமக்கென்று ஒரு குழந்தை வேண்டும். பேச முடியாத இந்தக் குழந்தையால், அது சாத்தியமே இல்லை என்பதை நீ உணர்ந்ததாகத் தெரியவில்லை. உன் முடிவை மாற்றிக் கொண்டால், சந்தோஷமான வாழ்க்கை நமக்காக காத்திருக்கிறது. இது என் கடைசி முயற்சி...'' என்று பேசியபோது, அவனுடைய வார்த்தைகள் குளறின.

'இந்தக் குழந்தைதான் நம் குழந்தை. அதை தத்து எடுத்து வளர்ப்போம். தக்கப் பயிற்சியால், அந்தக் குழந்தையின் நாவிலிருந்து, 'அம்மா' என்ற வார்த்தையை வெளிக் கொணர வேண்டியதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறேன். அதைவிட, சந்தோஷம் என் வாழ்க்கையில் வேறொன்றும் இருக்க முடியாது'' என்று தான் கொடுத்த இடைவெளியில் குயிலி கரைந்திருப்பாள் என்ற அவனுடைய எதிர்பார்ப்பு குலைந்து போனது.

'எனக்கு நீ மட்டும்தான் வேண்டும்'' என்ற அவன் வார்த்தைகளில் உறுதி தெரிந்தது.

'அந்தக் குழந்தைக்கு நான் வேண்டும்'' என்று குயிலி அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அறைக்குள்ளிருந்து காகம் கரையும் சப்தம் வெளிப்பட்டது.

'குழந்தை பசிக்குதுன்னு சிக்னல் கொடுக்கறா? அவளுக்கு தேவையானதை கொடுத்துவிட்டு, உன்னிடம் பேசுகிறேன்'' என்று உள்ளே போனாள். அவள் வெளியே வந்ததும், 'இதுதான் உன் இறுதி முடிவென்றால், மண வாழ்க்கையில் நாம் பிரிவதை தவிர, வேறு வழியில்லை'' என்றான்.

குயிலியின் உறுதி நிலையை கோகிலன் விரும்பவில்லை என்பது அவன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு பேசியதிலிருந்து புரிந்தது.

'எனக்கு அதில் ஒன்றும் வருத்தம் இல்லை. நீ சொன்னபடி, நான் தாயாகி மகிழ போகிறேன். குயில் குஞ்சுகளைப் பராமரிக்கும் காக்கை போல், இந்தக் குழந்தைக்கு 'மாற்றாந்தாய்' என்ற பட்டத்துடன் வாழப் போகிறேன். ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை போற்றி பாதுகாக்கும் ஒரு காப்பகத்தையும் துவங்க போகிறேன். காக்கையின் பராமரிப்புக்குப் பின்னர், அதன் கூட்டிலிருந்து, காதுக்கு இனிய நாதத்தைப் பரப்பிக் கொண்டு வெளியேறும் குயில்களைப் போல், அந்த குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை சந்தோஷ பறவைகளாக மாற்றுவதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோள். சமூகத்தால், புறக்கணிக்கப்படுபவர்களை ஆதரிப்பதில்தான் மனித நேயம் வெல்லுகிறது!'' என்ற குயிலியின் உறுதியான நிலைப்பாட்டை கேட்டுக் கொண்டே, கோகிலன் வெளியேறினான்.

வெளியில் கூடியிருந்த, குயிலுக்கு 'மாற்றாந்தாயானகாக்கைகள், குயிலிக்கு ஆதரவு குரல் கொடுப்பது போல், வழக்கத்தைவிட அதிக சத்தத்துடன் கரைந்ததை கேட்டதும், 'கா...கா... என்று ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க..'' என்ற பராசக்தி பட த்தின் பாடலை உறக்க பாடியபடி, அவைகளுக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து, தன் நன்றியை வெளிப்படுத்தினாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com