
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு, உணர்வின்றி இருந்த என் உறவினர் நீண்டதொரு சிகிச்சைக்குப் பின்னர் படுக்கையிலேயே கிடக்கிறார். இருந்தாலும், அவர் தன் உறவினர் ஓரிருவரை மட்டும் பார்த்து அழைக்கக் கூடிய முன்னேற்றம் அடைந்துள்ளார். அதைத் தவிர வேறு முன்னேற்றம் ஏதுமில்லை. அவர் குணம் அடைய ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்
சாலை விபத்தில் தலையில் அடிபடும்போது, மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு, வீக்கம், பிராண வாயு குறைதல் மற்றும் நரம்புகளில் ஏற்படும் திறன் குறைபாடு ஆகியவற்றால் செயல்திறன் மேம்பாடு என்பது தாமதப்படலாம். மூளையைச் சார்ந்த பிராண வாயு, சாதக பித்தம், தர்பக கபம் எனும் மூவகை தோஷங்களில் ஆதிக்யத்தால்தான் செயல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுதல் அல்லது தாமதப்படுதல் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன.
பிராண வாயுவின் சீர்கேட்டால் மூளை, உடல் சார்ந்த செய்தித் தொடர்பானது அறுந்துவிடுகிறது. உடல் போஷணையானது துண்டிக்கப்படுகிறது. நரம்புகளின் தொய்வினால், உணர்வு மங்கிவிடுகிறது. அவற்றின் ஊடே செயல்படும் உள் மற்றும் வெளிவரும் செய்தித் தொகுப்புகளை ஒருங்கே இணைத்து அறியப்பட வேண்டிய விஷயங்களின் அறிவு தடுமாற்றமாகிறது.
அவருக்கு நரம்புகளில் ஊட்டம் அளித்து, உற்சாகப்படுத்தக் கூடிய மூலிகைகளில் வல்லாரைக் கீரை சிறந்தது. அதை வதக்கிப் பிழிந்தெடுத்த நீரை, சிறிது தேனுடன் கலந்து, காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடக் கொடுக்கலாம். ஞாபகச் சக்தியைத் தூண்டிவிட்டு, மனதை அமைதியுறச் செய்தும் சங்கபுஷ்பியை அவர் பயன்படுத்தலாம்.
தற்சமயம் விற்பனையிலுள்ள சங்கபுஷ்பி சிரப், 15 மில்லி இரவு உணவுக்குப் பிறகு அருந்துவதற்காகப் பயன்படுத்தலாம். 'அஸ்வகந்தா' எனும் சூரண மருந்தை ஐந்து கிராம் எடுத்து, நூற்றி ஐம்பது மில்லி சூடான பாலுடன் நன்கு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சிறிது, சிறிதாகப் பருக வைக்கலாம். இதன்மூலம் மூளை புத்துயிர் பெறவும், பிராண வாயுவின் சீர்கேட்டை சரிசெய்யவும் உதவும்.
மேற்குறிப்பிட்ட மருந்துகளின் சில நாள்களின் பயன்பாட்டினால் ஏற்படும் முன்னேற்றத்தை நன்கு அறிந்த பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி, மூக்கினுள் மருந்துவிடும் சிகிச்சை முறையான 'நஸ்யம்', தலையில் இளம்சூடாகப் பொத்தி வைக்கப்படும் 'மூர்த்த தைலம்', தலையில் வெதுவெதுப்பாக ஊற்றப்படும் 'சிரோதரா' எனும் தைல முறை போன்றவை அவருக்கு நன்மையை ஏற்படுத்தித் தரும்.
செரிமானக் கோளாறு ஏதுமில்லாமல், உணவை நன்றாகச் செரிக்கக் கூடிய நிலையில் அவர் இருந்தால், பிராம்ஹீக்ருதம், அஸ்வகந்தா க்ருதம் போன்ற ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளை நீராவியில் உருக்கி, சிறிய அளவில் பல தடவை ஒரு நாளில் சாப்பிடக் கொடுக்கலாம். இந்த மருந்துகளைச் சாப்பிட்டவுடன் வென்னீர் குடிப்பதற்குத் தரலாம். இதனால் நெய் மருந்து விரைவில் செரிக்கும்.
க்ஷீரபலா 101, மஹாராஸ்னாதி கஷாயம், சாரஸ்வதாரிஷ்டம் போன்ற ஆயுர்வேத மூலிகை மருந்துகளின் தொடர் உபயோகத்தால், மூளையின் வேலைத்திறன் நன்கு அதிகரித்து, பேச்சாற்றலை வளர்த்துத் தரும்.
உணவின் பங்கும் இந்த விஷயத்தில் முக்கியமானதாகும். எளிதில் செரிக்கக் கூடியதும், இளஞ்சூடாகவும், மென்மையானதும், ஊட்டம் தரக் கூடியதுமான அரிசி வகைகளையே அவர் சாப்பிட வேண்டும்.
அரிசி கஞ்சியில் முன்குறிப்பிட்ட மூலிகை நெய் மருந்துகளைக் கலந்து, சிறிது உப்பு சேர்த்து காலை உணவாகப் பருகலாம். மாலையில் பசும்பாலுடன் (இளம்சூடாக) இந்த மூலிகை நெய் மருந்துகளைச் சாப்பிடலாம். வாதுமைப் பருப்பு, வென்னீரில் ஊறவைத்து எடுத்த உலர்திராட்சை நீர் பருகுதல், பயத்தம் பருப்பு கிச்சடி, கேரட் பீட்ரூட், கீரை சேர்த்து வேகவைத்த கறிகாய் சூப், இளநீர், பழச்சாறுகளாகிய ஆப்பிள் பழம், மாதுளம் பழம், திராட்சைப் பழம் போன்றவை சாப்பிட உகந்தவை.
மூளைக்கும் புத்துணர்ச்சி ஊட்டக் கூடியவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.