அங்கும் இங்கும்..

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் ஊக்கு.
அங்கும் இங்கும்..
Published on
Updated on
3 min read

பென்சில் கிராமம்

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் ஊக்கு. பென்சில் தயாரிக்கப் பயன்படும் ஸ்லேட்டுகள் இங்கு உருவாக்கப்படுவதால், 'பென்சில் கிராமம்' என அழைக்கப்படுகிறது. ஸ்லேட் தயாரிக்கும் மூன்று தொழிலகங்கள் இங்குள்ளன.

இந்தியாவில் பென்சில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்துஸ்தான் பென்சில் நிறுவனம் முன்பு பென்சில், சிலேட்டுக்கு , வெளிநாடுகளை நம்பியிருந்த நிலை மாறி இன்று இந்தக் கிராமத்தை நம்பியுள்ளது.

பென்சில் தயாரிப்பில் ஸ்லேட் தயாரிக்கப்பட்டால் 50 சதவீத வேலை முடிந்து விட்டதாக அர்த்தம்.

இந்தக் கிராமம் ஜீலம் நதிக் கரையில் உள்ளது. ஸ்லேட் என்பது கச்சிதமாக வெட்டப்பட்ட மரத் தொகுதி. 78.77 மி.மீ. பரிமாணத்தையும் 5.2 மி.மீ. தடிமனும் கொண்டது.

இந்த ஸ்லேட் பாப்லர் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உள்ளுர் வகை மற்றொன்று பல்கேரிய ரஷிய பாப்லர் மரம்.

தற்போது ரஷிய பாப்லர் மரமும் இங்கேயே பயிரிடப் படுகிறது. இதுபோன்ற மரங்களில் நல்ல ஈரப்பதம் உள்ளதால், ஸ்லேட்டுகளை மென்மையாக்குகிறது. ஸ்லேட்டுகள் வெயிலில் நன்கு காய மூன்று நாள்கள் ஆகும். தற்போது உலர்த்தும் இயந்திரங்களும் வந்துவிட்டன.

ஒரு ஸ்லேட்டிலிருந்து 4 பென்சில்களைத் தயாரிக்க முடியும். காய்ந்தவற்றை ஒரு பையில் அடுக்க வேண்டும். ஒரு பையில் 800 ஸ்லேட்டுகளை அடுக்கமுடியும். இப்படியாக ஆண்டுக்கு 10 லட்சம் பைகள் உருவாக்கி அனுப்பப்படுன்றன.

முன்பு சீனா, ஜெர்மனி நாடுகளில் ஸ்லேட்டுகள் பெறப்பட்ட நிலையில், இன்று இந்தக் கிராமமே தயாரித்து அனுப்புகிறது. நாட்டின் இன்றைய தேவையில் 90 சதவீதம் ஸ்லேட்டுகள் காஷ்மீர் பள்ளதாக்கிலிருந்து செல்கிறது.

பச்சைத் தங்கம்...

மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாட் நகரில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் உயரமான டெண்டு மரங்கள் அதிகம். இதன் இலைகள், பழங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிப்பதால், இதனை 'பச்சைத் தங்கம்' என அழைக்கின்றனர்.

கோடையில் பழங்குடியினர் அதிகாலையில் வனப் பகுதிக்குள் சென்று டெண்டு இலைகளைச் சேகரித்து, பிற்பகலில் வீடு திரும்புகின்றனர். இந்த இலைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடுக்கப்பட்டு கட்டப் படுகின்றன. சிறு வன உற்பத்தி குழுக்களின் மூலம் இவை விற்கப்படுகின்றன.

பாலகாட் சந்தையில் 100 டெண்டு இலை 400 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. பழுத்த மஞ்சள் பழங்கள் ஊட்டச்சத்து, ஆயுர்வேதப் பண்புகளை கொண்டவை. நல்ல செரிமானம், எலும்புகளுக்கு வலு, பார்வையை மேம்படுத்துகிறது.

இதன் இலைகள் பீடி இலைகளாகவும் பயன்படுகின்றன. இலைகளில் உள்ள ஃபிளாவோன்கள் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன.

பழத்தை மரத்தின் அடியில் அடிப்பார்களாம். இப்படி அடித்து அடித்து ஓட்டையே ஏற்பட்டு விடுமாம்.இந்த மரத்தின் தடிமனான குச்சிகளை சூடேற்றி ஹாக்கி குச்சியின் வளைவுகளை உருவாக்குகின்றனர்.

துலாரே
துலாரே

பேய் ஏரி...

கலிபோர்னியாவின் சான் ஜோவாக்கின் பள்ளத்தாக்கில் 1800-களில் இருந்த ஒரு நல்ல நீர் ஏரி 'துலாரே'. மிசி சிப்பிக்கு மேற்கே மிகப் பெரிய ஏரியாக இருந்தது.

19-ஆம் நூற்றாண்டில் 'டாச்சி யோகுட்' என்ற பழங்குடியினர் இங்கு குடியேறினர். பல நீர்பாசன ஏற்பாடுகள் நடந்து ஒரு கட்டத்தில் ஏரியே வற்றியது. குடியேறியவர்கள் வறண்ட பகுதிகளை விளைநிலங்களாக மாற்றினர். பிறகு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செழிப்புற்றது.

2023-இல் கலிபோர்னியா குளிர்காலப் புயல்களால் பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள சியாரா நெவேடா மலைகளிலிருந்து ஒரு பெரிய பனி உருகி, அலையாய் வந்து துலாரே ஏரி படுகையில் புகுந்து பழையபடி துலாரே ஏரி முன்பைவிட பெரியதாக அனைத்து நிலங்களையும் தன்னுள் அடக்கியது.

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் மீண்டும் வயல்கள் மேல் ரொம்ப ஆழமில்லாமல் அதே சமயம் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விழுங்கிவிட்டது. எதிர்பாராத இந்தத் தண்ணீரால் பாதிப்பு அடைந்த மக்கள் இதை 'பேய் வேலை' என்றவர்கள் தற்போது புதிய ஏரியையே 'பேய் ஏரி' என அழைக்கத் துவங்கிவிட்டனர்.

மன்னர் வஜிரலோங் கோர்
மன்னர் வஜிரலோங் கோர்

பணக்கார மன்னர்...

தாய்லாந்து மன்னர் வஜிரலோங் கோர், உலக மன்னர்களில் பெரும் பணக்காரர். இவருக்கு 'பத்தாம் ராமர்' என்ற பட்டமும் உண்டு. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் ராணுவப் பயிற்சியைப் பெற்றவர். ஆஸ்திரேலியாவின் நியூஸ் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ராணுவ படிப்பில் பட்டம் பெற்றவர்.

ஜெட், ஹெலிகாப்டர் விமானி. இவருடைய நிகர மதிப்பு 3.7 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்க டாலரில் தோராயமாக 43 பில்லியன் டாலர். இவரிடம் 38 தனியார் ஜெட் விமானங்கள், 300 கார்கள், 52 தங்கப் படகுகள் உள்ளன. அதிகாரபூர்வமாக நாலு மனைவியர்.

2016-இல் பதவிக்கு வந்த இவர் தன்னுடைய செல்வத்தை முக்கிய நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.இதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய நில உரிமையாளர்களில் ஒருவர். பேங்காக்கில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் உள்ளன.

கொமோடோ டிராகன் பல்லி
கொமோடோ டிராகன் பல்லி

கொமோடோ தேசிய பூங்கா

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தீவு கொமோடா. இது 1965-இல் இயற்கைக் காப்பமாக அறிவிக்கப்பட்டது. 1977-இல் யுனெஸ்கோ உயிர்கோள் இருப்பு நிலையமாகவும், 1991-இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாகவும் அறிவிக்கப்பட்டன. 2005-இல் ஆசிய பராம்பரிய பூங்கா அந்தஸ்து என பல கெளரவங்கள் தேடி வந்தன.

26 தீவுகளை உள்ளடக்கியது இந்தப் பூங்கா. இந்தப் பகுதியே வெப்பமும் வறண்டும் கிடக்கும்.

இங்கு உலகின் மிகப் பெரிய பல்லியான கொமோடோ டிராகன் பல்லி உள்ளது. இதனை பாதுகாக்கவே இந்தத் தேசிய பூங்கா அமைக்கப்பட்டது. கொமோடா டிராகன் பல்லிகளுக்கு பிடித்த சாவன்னா தாவரங்கள் இங்குள்ளன.

இந்தப் பகுதியில் உள்ள சில விரிகுடாக்களில் சதுப்பு நில காடுகள் உள்ளன. தற்போது இந்தப் பூங்காவில் மேலும் பல கடல் உயிரினங்களை பாதுகாக்கவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கொமோடோவின் வட கிழக்கு கடற்கரையில் பெரிய மற்றும் சிக்கலான பவழப் பாறைகள் உள்ளன

இந்தோனேஷியாவின் புளோரஸின் மேற்கு கடற்கரையின் ஒரு பகுதியே கொமோடோ. பதார், ரிங்கா, கிலிமோடோங் தீவுகளும் இந்தப் பூங்காவில் அடக்கம். இந்தோனேஷியாவின் 50 ஆயிரம் ரூபாய் நோட்டின் பின்புறத்தில் கொமோடோ தேசிய பூங்கா இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com