மகனே...

அந்த ஊர் கும்பகோணம் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பெரிய ஊர்.
மகனே...
Published on
Updated on
7 min read

பரிதி

அந்த ஊர் கும்பகோணம் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பெரிய ஊர். 'கிழக்கு திசையில் சூரியன் உதிக்கலாமா?' என்று யோசித்திருக்கும் நேரம். அந்த ஊரின் சிவன் சந்நிதித் தெருவில் கம்பீரமாய் எழுந்து நின்றது சிவகாமி இல்லம். உள்ளே படுக்கை அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் ராஜசேகரும் அவரது மகன் அசோக்கும். சரியாய் ஐந்து முப்பதுக்கு அலாரம் அடிக்கவும் இருவரும் எழுந்தனர்.

காலை மணி ஏழு. குளித்து முடித்து, பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு பள்ளிப் பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தான் அசோக். ஆயா சமையற்கட்டில் காலை உணவைத் தயாரித்துகொண்டிருந்தார். பூஜை அறையில் வழிபட்டுவிட்டு ஹாலில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் தன் மனைவி சிவகாமியின் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, சில நிமிடங்கள் நின்ற ராஜசேகரின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் தரையில் விழுந்து சிதறின.

ஆயா அப்போது, 'தம்பி எனக்கு உடம்பு முன்ன மாதிரி நல்லா இல்லை. நான் ரொம்ப காலம் இருக்க மாட்டேன். நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கோ' என்றாள்.

'அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. யாரோ ஒரு லேடிய அம்மான்னு கூப்டுறது எனக்குப் பிடிக்காது. எனக்கு நீயும் அப்பாவும் போதும் ஆயா' என்று கோபத்துடன் சொன்னான் அசோக். இதற்கு ராஜ சேகரோ, 'அசோக்.. எனக்கு நீதான் முக்கியம். உனது விருப்பத்துக்கு மாறா எதுவும் பண்ண மாட்டேன். நீ கவலைப்படாதே' என்றார்.

அதே ஊரின் பக்கத்துத் தெருவில் வசிக்கும் சிவராமன், தனியார் வங்கியின் மேலாளராய் பணிபுரிகிறார். இவருக்கு மனைவி மங்களம், 10-ஆம் வகுப்பு படிக்கும் மகன் கோபாலும்,

7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் கோமதியும் இருக்கின்றனர். சிவராமனும் ராஜசேகரும் இளம்வயது முதலே நெருங்கிய நண்பர்கள்.

சிவராமன் வீட்டு மாடியில் குடியிருப்பவர் சியாமளா. கணித ஆசிரியை. தனது தாய், தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் வசிக்கிறாள். பள்ளிக்குப் புறப்பட்ட சியாமளா, தன் குழந்தை நளினியை கொஞ்சிவிட்டு தாய்க்கு 'பை' சொல்லிவிட்டு கீழிறங்கி வந்து தனது ஸ்கூட்டரை இயக்கினாள். பள்ளியில் குழந்தைகளை வகுப்பு அறைகளில் விட்டுவிட்டு பேசிக் கொண்டே ராஜசேகரும் சிவராமனும் வெளியே வரும்போது சியாமளா உள்ளே நுழைகிறாள்.

'சியாமளா ஒரு நிமிஷம்' என்று சிவராமன் அழைக்கவும், 'என்ன அண்ணா?' என்றவாறு அவர்கள் அருகில் வந்து 'சொல்லுங்கள்' என்கிறாள் சியாமளா.

'சியாமளா... இவர் என் நெருங்கிய நண்பர் ராஜசேகர். பிஸினஸ்மேன். இவரோட மனைவி ஐந்து வருஷத்துக்கு முந்தி இறந்துபோயிட்டாங்க? இவரது மகன் அசோக். கோபாலுடன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ராஜசேகர்... இவங்க கோயம்புத்தூரைச் சேர்ந்தவங்க.. சென்ற வாரம்தான் கணித டீச்சராக வேலையில் சேர்ந்தாங்க. இவங்க கணவர் துபையில் என்ஜீனியராக இருக்கிறாங்க.. நம் வீட்டு மாடியில்தான் குடியிருக்கிறாங்க' என்று சிவராமன் சொன்னதும் ராஜசேகரும் சியாமளாவும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். பின்னர், மூவரும் தங்கள் வழிகளில் செல்கின்றனர்.

ஒரு நாள் மதியம் 2 மணி இருக்கும். சிவராமன், வங்கிப் பணியில் தீவிரமாக இருந்தார். அப்போது அவரது அறைக்கு வந்த ஊழியர், 'சார்.. உங்களைப் பார்க்க கோயம்புத்தூரில் ஒரு பெண் வந்துருக்காங்க' என்றார். 'சரி வரச் சொல்லுங்க' என்றார் சிவராமன்.

சில நொடிகளில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் உள்ளே வந்து, 'சார்... நான் சியாமளாவோட நெருங்கிய தோழி ரம்யா. நானும் டீச்சராதான் இருக்கன். அவளோட கணவர் துபாயில இருக்குறதா அவ சொன்னது பொய். நாலு வருஷத்துக்கு முன்ன அவளுக்கும் பேராசிரியர் ஒருவருக்கும் கல்யாணம் ஆச்சி. அவ உண்டானா. சில மாசங்களில் அப்ப ஒரு நாள் அவர் தனியா பைக்கில போறப்ப ஒரு லாரிகாரன் மோதி ஸ்பாட்லயே இறந்துட்டார்' என்று ரம்யா சொன்னதும் சிவராமன் அதிர்ந்தார்.

'நிஜமாவா சொல்றீங்க?' என்று சிவராமன் கேட்க, ரம்யாவோ, 'ஆமா சார்.. நிஜம்தான். இப்ப அவளுக்கு இருபத்து எட்டு வயசுதான் ஆவுது. அவ மறுமணம் செய்துக்க மாட்டேன்னு ரொம்ப உறுதியா இருக்கா. இப்ப என்ன பிரச்னைன்னா பெரிய மனுஷன் ஒருத்தர் தன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சியாமளாவை வற்புறுத்துறாரு.. அவ முடியாதுன்னா தூக்கிக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பேன்னு மிரட்டுறார். அவ பயந்துபோய் யாருகிட்டயும் சொல்லாம இங்க வந்துட்டா.' என்றாள்.

'எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. கேக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. சரி, இப்ப நான் என்ன செய்ய வேண்டும்?'

'சார்.. இவ எங்க இருக்கான்னு அந்த பெரிய மனுஷன் கண்டுபிடிச்சி மறுபடியும் பிரச்னை பண்றதுக்குள்ள அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும். எங்க தோழிகள் எல்லாம் வரன் பாத்துகிட்டு இருக்கோம். அது நல்லபடியா முடியற வரைக்கும் அவளை பத்திரமா பாத்துக்குங்க, நீங்களும் முடிஞ்சா வரன் பாருங்க. நான் உங்கள வந்து பாத்தது அவளுக்குத் தெரிய வேண்டாம்' என்றாள்.

மனமும் குரலும் உடைந்த நிலையில் சிவராமனும், 'கண்டிப்பா பத்திரமா பாத்துக்குறோம்' என்றார்.

மதியம் மூன்று மணி. பள்ளியில் சியாமளா வகுப்பில் கணிதப் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். அசோக்கை கவனித்தாள். அவன் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் சென்ற சியாமளா, 'அசோக்' என்றாள். அவன், 'நெஞ்சு வலிக்குது. மயக்கமா இருக்கு' என்றான். சியாமளா சற்று அதிர்ந்து, அசோக்கின் நாடி பிடித்துப் பார்த்தாள். சற்று குறைவாய் இருப்பதைப் போல் உணர்ந்த சியாமளா, உடனடியாய் அசோக்கை பள்ளி வாகனத்தில் பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். பரிசோதித்த மருத்துவர், 'மதியம் சாப்டியா?' என்று கேட்க, அசோக்கோ 'இல்லை. எங்கஅம்மா ஞாபகமா இருந்துச்சி.. சாப்பிடலை' என்றான்.

'உங்க அம்மா எங்க?'

'அவுங்க எனக்கு பத்து வயசாவுறப்ப இறந்துபோயிட்டாங்க?' என்று சொல்லும்போதே அசோக்கின் கண்கள் கலங்கின.

'சாரிப்பா...வெரி சாரி.. உனக்கு களைப்பைப் போக்க ரெண்டு இன்ஜக்ஷன் போடுறேன். கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. மேடம்.. இந்த மாத்திரைகளை ஒரு வாரத்துக்குக் கொடுங்க? ரெண்டு நாள் ஸ்கூலுக்குப் போக வேண்டாம். ரெஸ்ட்டுல இருக்கட்டும். எதுவும் பிராப்ளம்ன்னா உடனே அழைச்சிகிட்டு வாங்க?' என்றார் மருத்துவர்.

மருத்துவமனையில் இருந்து பள்ளிக்கு வந்து அசோக்கை தனது ஸ்கூட்டரில் அழைத்துகொண்டு அவனது இல்லம் வந்தாள் சியாமளா. ராஜசேகருக்கு ஃபோன் செய்து விவரத்தை சொன்னாள். அடுத்த பத்தாவது நிமிடம் பதறியவாறு இல்லம் வந்து சேர்ந்தார் ராஜசேகர். 'அசோக்' என்று அழைத்து அவனை கட்டிக் கொண்டு, 'என்ன ஆச்சு அசோக்' என்று கேட்டார்.

'ஒன்னுமில்லப்பா... மதியம் அம்மா ஞாபகத்துல சாப்டுல..அதான் லேசா மயக்கம் வந்துடுச்சி. இப்ப நல்லாயிட்டம்பா' என்று சொல்லியவாறு சிரித்தான். ராஜசேகரும் நிம்மதி அடைந்து, 'ரொம்ப நன்றி மேடம்' என்றார். 'ரெண்டு நாள் ஓய்வெடுத்தா சரியாகிடுமுன்னு டாக்டர் சொன்னாங்க' என்று கூறிவிட்டு, சியாமளா புறப்பட்டாள்.

வழக்கமாய் மாலை ஆறு மணியளவில் அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பும் சிவராமன் அன்று ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிட்டார். வந்தவர் மங்களத்திடம் எதுவும் பேசவில்லை.

'என்ன, எதுவும் பேசாமல் அமைதியா இருக்கீங்க?' என்று கேட்டவாறு காப்பி டம்ளரை சிவராமனிடம் நீட்டினாள். டம்ளரை வாங்காமல் மங்களத்தின் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்த சிவராமன், 'தெரியுமா சியாமளா ஒரு விதவை' என்றார்.

'என்னங்க சொல்றீங்க? நிஜமாவா?' என்று மங்களம் கேட்க, சிவராமனும் ரம்யா வந்ததையும் சொன்னதையும் மெதுவாய் சொன்னார்.

'ஐயோ! என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே.. இறைவனே! நீ படைத்த உயிர்களை இப்படியெல்லாம் நீ சோதிக்கலாமா?' என்று அழுது புலம்பினாள் மங்களம்.

அப்போது, 'அண்ணா' என்று அழைத்தவாறு உள்ளே நுழைந்தாள் சியாமளா. சிவராமனும் மங்களமும் அவசர, அவசரமாய் கண்களைத் துடைத்துகொண்டனர்.

'அண்ணா! கோபால் உங்களிடம் எதுவும் சொன்னானா?'

'ஒன்றும் சொல்லவில்லையே..'

'இன்று மதியம் பள்ளியில் ராஜசேகர் சாரின் மகன் அசோக்குக்கு சற்று உடல்நலம் சரியில்லை...' என்று துவங்கி நடந்ததைச் சொன்னாள் சியாமளா. மங்களம் காப்பி கொண்டு வந்து சியாமளாவுக்குக் கொடுத்தாள்.

'சியாமளா! உன் கணவர் எப்போது துபாயிலிருந்து வருவார்' என்று கேட்டாள் மங்களம். சியாமளாவும் சிரித்தவாறு, 'இப்போதுதான் ஒரு மாத லீவில் வந்துவிட்டுச் சென்றார். மீண்டும் வர இன்னும் ஒரு வருடமாகும்' என்று சொல்லிவிட்டு, 'சரி, நான் வருகிறேன்' என்று புறப்பட்டுச் சென்றாள்.

இரவு எட்டு மணி. அசோக்குக்கு பால் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தார் ராஜசேகர். அப்போது சிவராமனும் மங்களமும் சியாமளாவும் அசோக்கைப் பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அசோக் சந்தோஷமுடன், 'ஹலோ.. வாங்க மாமா, மாமி... வாங்க மிஸ்' என்றான்.

'ஹாய் அசோக்' என்ற சிவராமன் செல்லமாய் அவன் கன்னத்தில் தட்டி, 'இப்ப எப்டி இருக்கே?' என்று கேட்டார்.

'சூப்பராய் இருக்கிறேன்...'

சியாமளா ராஜசேகரிடம், 'சார் என்கிட்ட கொடுங்க.. நான் ஊட்டிவிடுகிறேன்' என்று கிண்ணத்தை வாங்கி அசோக்குக்கு ஊட்டிவிட்டாள். கொஞ்ச நேரம் மகிழ்வுடன் பேசினர். பின்னர் சிவராமன், மங்களம், சியாமளா மூவரும் புறப்பட்டு சென்றனர்.

மறுநாள் மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் அசோக்கை பார்த்து வரலாம் என்று முடிவு செய்து, அவன் வீட்டுக்குச் சென்றாள் சியாமளா. அன்போடு வரவேற்றார் ராஜசேகர்.

அசோக் டி.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துகொண்டிருந்தான். சியாமளாவுக்கு ஆயா காராப்பூந்தியும், காப்பியும் கொண்டு வந்து கொடுத்தாள். சியாமளா அசோக்கின் அருகே அமர்ந்து சந்தோஷமாய் பேசிவிட்டு, புறப்பட்டு சென்றாள். பின்னர் ராஜசேகரிடம் அசோக், 'அப்பா.. எனக்கு சியாமளா மிஸ்ஸை ரொம்ப பிடிக்குது' என்றான்.

இரவு ஏழு மணி. சிவராமன் ராஜசேகருக்கு போன் செய்தார்.

'ராஜசேகர்... அசோக் எப்படி இருக்கான்?'

' நல்லாருக்கான்.'

'சரி, நீ ஃப்ரீயாதானே இருக்கே.. பதினைந்து நிமிஷம் பேசலாமா?'

'தாராளமா பேசலாம்' என்று ராஜசேகர் சொல்ல, சிவராமனும் சியாமளாவின் நிலையை விளக்கினார்.

'சரிங்க சிவராமன்... அதுக்கு நான் என்ன செய்யனும்..'

'உனக்கு 45 வயசுதான் ஆவுது. நீ ஏன் சியாமளாவை கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?'

'என்னடா முட்டாள்தனமா பேசுற?' அசோக் நிச்சயமா இதை ஏத்துக்கமாட்டான்னு தெரிஞ்சும் இப்படி பேசுறே..?'

'ராஜசேகர்.. அசோக் இன்னமும் ஒரு குழந்தைதான் நீ ஏன் அவனை சமாதானம் பண்ணக் கூடாது?'

'சிவராமா! அசோக் மனசுல என்னை மிக உயர்வா மதிக்கிறான். நான் கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொன்னா அவன் உள்ளத்துல என்னைப் பத்தி ஒரு கறை உருவாயிடும். என் மீது அவன் வச்சிருக்குற பாசமும் மரியாதையும் கொறஞ்சிடும். விஷ பரீட்சை வேண்டாம். வேணும்ன்னா அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்போம்.'

'வேண்டாடம்டா.. அவளுக்கு மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கு. நீதான் அவளுக்கு பொருத்தம். தயவுசெய்து நல்லா யோசி.. நான் மறுபடி வந்து உன்னை பாக்குறன்' என்றார் சிவராமன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணி. ஆயா மயங்கி முதல் மாடியிலிருந்து தரைதளத்தில் விழுந்து தலையில் பலத்த அடிபட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். செய்தி அறிந்து சிவராமனும் ராஜசேகரின் துணைக்குச் சென்றிருந்தார். நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது. ஆயாவின் ரத்த வகை அரிய வகையான ஏ1 நெகட்டிவ்.

'இன்னும் 1 மணி நேரத்தில் குறைந்தது அரை லிட்டர் ரத்தமாவது தேவை' என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

ரத்த வங்கிகளில் ரத்தம் இருப்பு இல்லை. ராஜசேகரும் சிவராமனும் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தவாறு இருந்தனர். அசோக்கும் ஆயாவை நினைத்து அழுதுகொண்டிருந்தான்.

சியாளாவிடம் சிவராமன் போன் செய்து விசாரித்தபோது அவளோ, 'தன்னுடையது ஏ1 நெகட்டிவ் ரத்த வகை' என்றாள். உடனே மருத்துவமனைக்கு வந்து ரத்தம் கொடுக்க, ஆயா காப்பாற்றப்பட்டார். அசோக்கின் உள்ளத்தில் சியாமளா மீது பாசம் பல மடங்கு அதிகரித்தது.

அன்று இரவு அசோக் சியாமளாவுக்கு போன் செய்து, 'மிஸ்.. எனக்கு உங்களை மிஸ் என்று அழைப்பது பிடிக்கவில்லை. அம்மா என்று அழைக்கட்டுமா?' என்றான்.

'பாவம், தாயில்லா பிள்ளை. அம்மாவுக்காக ஏங்குகிறான்' என நினைத்து ' சரி, அம்மா என்றே இனி கூப்பிடு' என்றாள். இதற்கு அசோக் சந்தோஷமாய் சிரிக்க, சியாமளாவும் சிரித்தாள்.

ஒருநாள் அசோக் இரவு உணவின்போது ராஜசேகரிடம் பேசினான்.

'அப்பா! உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.'

'என்ன?'

'எனக்கு அம்மா வேண்டும்..'

'ஏன்?'

'அப்பா! இப்போதெல்லாம் அம்மாவை நினைக்கையில் எனக்கு அம்மா முகமும் சியாமளா மிஸ்ஸின் முகமும் மாறிமாறி தோன்றுகின்றன. நீங்கள் சியாமிளா மிஸ்ஸை கல்யாணம் செய்துக்க வேண்டும்.'

'அது சரியா வராதுப்பா' என்று ராஜசேகர் சொல்ல, அசோக்கின் முகம் வாடிப் போனது.

இரண்டு நாள்கள் வரை அசோக், ராஜசேகரிடம் சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை. மூன்றாவது நாள் ராஜசேகரும் அசோக்கின் பக்கத்தில் வந்து அமர்ந்து சிவராமனுக்கு போன் செய்து, 'நான் சியாமளாவை திருமணம் செய்கிறேன். நீ அவரை கேட்டுச் சொல்' என்றான். இதைக் கேட்ட அசோக்கும் ராஜசேகரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு , 'தேங்க்ஸ் அப்பா' என்று சந்தோஷமுடன் கத்தினான்.

ஞாயிற்றுக் கிழமை காலை எட்டு மணி. மங்களம் கொண்டு வந்து கொடுத்த காப்பியை ருசித்துக் குடித்துவிட்டு, 'சியாமளாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று மாடிக்குச் சென்றார் சிவராமன்.

'சியாமளா..'

'அண்ணா! உட்காருங்கள்..'

'சியாமளா! நீயும் உட்கார்.. நீ உத்தமமான பெண் . நானும் மங்களமும் உனக்கு அண்ணனும் அண்ணியும் போன்றவர்கள். நீ உன் கடந்தகால நினைவுகளிலேயே வாழ்வதை விட்டுவிட்டு உன் எதிர்கால வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்று சிவராமன் சொல்லச் சொல்ல, சியாமளாவின் முகம் வெளிறியது.

ஓவென்று அழுதாள். அழுகையினூடே, 'எப்படி என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும்?' என்று கேட்டாள். சிவராமனும் ரம்யா சொன்னதைச் சொன்னாள்.

'நான் என் கணவரை இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது நினைவுகள் இன்றுவரை அப்படியே பசுமையாய் என் உள்ளத்தில் இருக்கும்போது நான் எப்படி இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள முடியும்? வாய்ப்பே இல்லை..'

'இல்லை சியாமளா... ராஜசேகர் போன்ற ஒரு நல்ல மனிதன் உன்னை ஏற்றுகொள்ள முன்வரும்போது நீ அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது குற்றமல்ல..

உன் வயதையும் உனது சூழ்நிலைகளையும் நினைத்துப் பார்த்து ராஜசேகரை மணந்துகொள், உன் வாழ்வு மீண்டும் மலரும்.'

'நீங்கள் ஆயிரம் சொன்னாலும் நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாரில்லை அண்ணா, என்னை மன்னித்துவிடுங்கள்..'

சிவராமன் கீழிறங்கி வந்து, ரம்யாவுக்கு போன் செய்து விவரங்களை கூறினார்.

அன்று காலை 11 மணி சியாமளாவுக்கு ஒரு போன் வந்தது. எடுத்தாள்.

'என்னடி கும்பகோணத்தில் சென்று பதுங்கிவிட்டாயா? இன்னும் 10 நாள்களில் உன்னை தூக்கி வந்து தாலி கட்டுகிறேன். நான் யார் தெரிகிறதா?' என்று அந்த பெரிய மனுஷன் தனது பெயரை சொல்லிவிட்டு, போனை துண்டித்தார். சியாமளா நடுங்கி, பித்துப் பிடித்தவள் போல் ஆனவள்.

கீழிறங்கி வந்து சிவராமனிடம், 'அண்ணா! நான் ராஜசேகரை திருமணம் செய்து கொள்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் திருமணம் முடிந்தாக வேண்டும்' என்று கண்ணீர்விட்டு அழுதவாறு சொன்னவள் மாடிக்குத் திரும்பினாள்.

சிவராமனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் ராஜசேகரிடம் பேசி, சியாமளாவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, திருமணம் முடிவு செய்யப்பட்டது. ராஜசேகர் - சியாமளா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

ஒருநாள் இரவு பத்து மணி. ராஜசேகருக்கு பக்கத்து அறையிலிருந்து அசோக் போன் செய்தான்.

'அப்பா! உங்ககூட படுத்துக்கனும் போல இருக்கு.. உங்கமேல கால்போட்டு தூங்கனும். என் ரூமுக்கு வாங்கப்பா..'

'ஐயோ என் செல்லமே!... இதோ வர்றேன்டா ராஜா...'

'சியாமளா... நீ நன்றாகத் தூங்கு.. நான் அசோக்குடன் சென்று படுத்துகொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு அசோக்கின் ரூமுக்கு வந்தார் ராஜசேகர். இருவரும் உறங்கினர்.

இரவு பன்னிரண்டு மணி இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராஜசேகர் கனவு ஒன்று கண்டு எழுந்து உட்காருகிறார். அவர் முகம் பேய் அடித்தது போல் இருக்கிறது. சற்றுநேரம் கழித்து, 'கனவு' என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.

படுக்கையில் பார்த்தபோது, அசோக் இல்லை. திடுக்கிட்டவாறு, 'அசோக்! அசோக்!' என அலறிக் கொண்டு ஹாலுக்கு வருகிறார். ஹாலில் ஈஸி சேரில் அசோக் சாய்ந்திருக்கிறான். அவன் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் வழிந்திருக்கிறது. சத்தம் கேட்டு ஆயாவும் சியாமளாவும் ஹாலுக்கு வருகின்றனர்.

ராஜசேகரும் அசோக்கை உலுக்கி எழுப்புகிறார். அவன் இலேசாய் கண் விழித்து, 'அப்பா! எனக்கு நெஞ்சை வலிக்கிறது' என்று முனகுகிறான்.

அடுத்த 10-வது நிமிடம் அசோக்கை மருத்துவமனைக்குள் சேர்க்கிறார்கள். விடிவதற்குள் பலவிதமான பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன.

காலை 7 மணியளவில் ராஜசேகரை தன் அறைக்கு அழைக்கிறார் மருத்துவர்.

'சார்... அசோக்குக்கு அஞ்சு வயசுல ருமாட்டிக் ஃபீவர் வந்துச்சுன்னு சொன்னீங்க. அப்ப மருத்துவரோட கவனக் குறைவால ட்ரீட்மெண்ட் முமுமையாகலை. அதனால படிப்படியா மைட்ரல் வால்வ் பாதிக்கப்பட்டிருக்கு. அதோட மட்டும் நின்னுருந்தா நாம இப்ப மைட்ரல் வால்வ சரி பண்ணிடலாம். ஆனா அசோக்குக்கு இதய தசைகளும் ரொம்ப டேமேஜ் ஆயிருக்கு. சார் நான் இப்ப சொல்லப் போறது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்' என்று அவர் முடிக்கவில்லை. ராஜசேகருக்கு பேச்சு வரவில்லை.

'டாக்டர்... என்ன சொல்றீங்க?' என்று சொல்லி அழுதார்.

' சார்... அழாதீங்க.. காலை 11 மணிக்கு அவன டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அழச்சிகிட்டுப் போங்க.. மாத்திரைகள் தர்றேன். நேரத்துக்குக் கொடுங்க? அவன் கூடவே இருங்க?அவனது கிரிட்டிகல் செய்தியை உங்க மனைவிகிட்ட கூட சொல்லாதீங்க?' என்றார்.

மதியம் 12 மணியளவில் அசோக்கை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இடையிடையே கண்விழிப்பதும், பின் தூங்குவதுமாய் இருந்தான் அசோக். விழிக்கும்போதெல்லாம் ராஜசேகர் தன் அருகில் பெரும் துயரமுடன் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அப்பாவின் முகத்தில் ஏன் இந்த சோகம்? கண்களில் ஏன் கண்ணீர்?

மறுநாள் இரவு 12 மணி. அசோக் கண் விழித்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த ராஜசேகர் தனது ஒரு உள்ளங்கையை அசோக்கின் மார்பின் மீது மென்மையாய் வைத்தவாறு கொஞ்சம் கண் அயர்ந்திருந்தார். அவரது கையை மெதுவாய் நகர்த்தி வைத்துவிட்டு, எழுந்து ஷெல்ஃபிலிருந்து அவரது டைரியை எடுத்து கடந்த நான்கு நாட்களாய் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்தான். 'அப்பா' என்று மெதுவாய் அழைக்க, ராஜசேகர் விழித்துகொண்டார்.

'அசோக்! பசிக்குதா? எதுவும் பழம் சாப்டுறியா?'

'வேண்டாம்பா... பசிக்கல' என்ற அசோக், அரைகுறை தூக்கத்தில் இருந்த சியாமளாவை 'அம்மா' என்று அழைக்க அவளும் எழுந்து உட்கார்ந்தாள். அப்பாவின் மடியில் தலையையும் அம்மாவின் மடியில் கால்களையும் வைத்துகொண்டு படுத்தான்.

' இன்னும் சற்று நேரத்தில் நான் வானத்துக்குப் போகப் போகிறேன். அங்கு ஜாலியாய் ஓடி ஆடி விளையாடுவேன். நட்சத்திரங்களை எண்ணுவேன். நிலவில் நடப்பேன், சிவகாமி அம்மா, தாத்தா, பாட்டி இவர்களுடன் குஷியாய் பேசிக் களித்திருப்பேன். அப்பா! நான் இல்லாவிட்டால் உங்கள் நெஞ்சு வெடித்துச் சிதறிவிடும் என்று எழுதியுள்ளீர்கள். நீங்கள் இதுவரை நான் சொன்னதை எல்லாம் கேட்பீர்கள். இப்போது சொல்கிறேன்- நான் இல்லாதபோதும் நீங்கள் சந்தோஷமாய் அம்மாவையும், பிறக்கப் போகும் குழந்தையையும் பார்த்துகொள்ள வேண்டும். நான் வானத்திலிருந்து உங்களைப் பார்த்துகொண்டே இருப்பேன்' என்றான் அசோக்.

'அப்பா! நெஞ்ச அடைக்குதப்பா... மூச்சு திணறுது...' என்று சொன்ன அசோக்கின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் வழிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com