தேசிய அளவிலான யோகா போட்டிகளில் அசத்தி வருகிறார் பள்ளி மாணவி கீர்த்தனா நாகராஜன்.
உலக யோகா நாளை முன்னிட்,டு, இந்தோனேசியா பாலியில் 2025 மே 25இல் நடைபெற்ற காமன்வெல்த் ஓபன் யோகா போட்டியில் 12 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் தங்கப் பதக்கத்தையும், அதே நாளில் நடைபெற்ற கலை தனிப் பாடல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் கீர்த்தனா பெற்றுள்ளார்.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் வசிக்கும் இவர் பி.வி.எம். குளோபல் மாணவியாவார். அவரிடம் பேசியபோது:
'எனது சிறுவயதிலேயே உடல் வளைந்து கொடுக்கும் திறனைப் பார்த்து அம்மா அஸ்விதலெட்சுமி வியந்துள்ளார். இதனால் எனது ஐந்தாம் வயதில் விக்டர் குழந்தைராஜிடம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் சேர்க்கப்பட்டேன். அங்கே சேர்ந்த சில நாள்களிலேயே மாவட்ட அளவில் நடக்கும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கங்களையும் வென்றேன்.
கரோனா காலம் வந்தபோது, பயிற்சியாளர் ராஜசேகரன் வழிகாட்டுதலில் எனது குடும்பத்தினர் யோகா பயிற்சிகளை மேற்கொண்டோம். பின்னர் பி ஃபிட் அறக்கட்டளை யோகா பயிற்சியாளர் பரமேஸ்வரனிடம் பயிற்சியைத் தொடங்கினேன்.
2024 ஜூன் மாதம் முதல் ஈரோடு விஜயமங்கலம் கெளதம் யோகாலயாவின் பயிற்சியாளர் கெளதம் தங்கராசுவிடம் பல்வேறு ஆசனங்களைக் கற்றேன். அதற்குப் பிறகு, பயிற்சியாளர் பாக்யராஜிடம் கை, கால் பலத்துக்குத் தேவையான வளைதல், நெளிவு போன்றவற்றையும், கடைசி சுற்றில் என்னால் முழு ஃபிட்னஸ் கொடுப்பதற்கான பயிற்சியையும் கொடுத்தார்.
இதனால், மாரத்தானில் முழுமையாக என்னால் பங்கேற்க முடிந்தது. அவரிடம் சேர்ந்த பிறகு பலம், பலவீனம் இரண்டையும் சரியான விதத்தில் அறிந்தேன்.
காலையில் யோகா முடித்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறேன். பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை அங்கேயே எழுதி முடித்துவிட்டே வீட்டுக்கு வருகிறேன். இப்படி நேரங்களை வீணடிக்காமல் இருப்பதால் முழுநேர யோகா, தடகளப் பயிற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.
2019இல் மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக் அகாதெமி நடத்திய மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதலிடத்தையும், 2023இல் திருச்சி யோகாசன விளையாட்டு மேம்பாட்டு சங்கம் நடத்திய தென் மண்டல அளவிலான சிறப்பு தனிநபர் பிரிவில் முதலிடத்தையும், 2024இல் கோவையில் அப்துல் கலாம் நினைவு யோகா கோப்பைக்கான மாநில அளவிலானப் போட்டியில் இரண்டாமிடத்தையும்,
2024இல் இந்தியன் யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தெலங்கானாவில் நடைபெற்ற 2ஆவது தேசிய யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் மூன்றாமிடத்தையும், தமிழ்நாடு யோகா பெடரேஷன் சார்பில் நடைபெற்ற 7ஆவது மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 12வயதிற்குள்பட்ட போட்டியில் முதலிடத்தையும் பெற்றுள்ளேன். இந்தப் போட்டிகள் மறக்க முடியாதவை.
இவைத் தவிர பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்கள், இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், பத்துக்கும் மேற்பட்ட நினைவு கேடயங்களைப் பெற்றுள்ளேன். நான் பதக்கங்கள் வெல்வதற்கு முழு காரணம் பெற்றோர்தான். அவர்கள் என் மேல் வைத்திருக்கும் பாசமும், நம்பிக்கையும்தான் என்னை உயரச் செய்கிறது. கேலோ, ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்' என்கிறார் கீர்த்தனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.