அன்புள்ள அப்பா!
விஜி சம்பத்
ஜீப்பிலிருந்து இறங்கிய அரசு உயர் அதிகாரி செல்வராஜ், டிரைவர் வைத்த சல்யூட்டை தலையசைப்பிலேயே ஏற்றுகொண்டவராக வீட்டினுள் நுழைந்தார். வீடு அமைதியாக இருக்க அவர் மனைவி கனகா சமையல் அறையிலிருந்து ஒரு கையில் காஃபியோடும் இன்னொரு கையில் சில கடிதங்களோடும் வந்து, அவற்றை டீப்பாயில் வைத்து விட்டு, அமைதியாக சமையலறைக்குள் சென்று விட்டார்.
ஒரு கையால் காஃபியை குடித்தவாறே கடிதங்களைப் புரட்டினார். ஒன்று அவர் அப்பாவிடமிருந்து வந்த கடிதம். அதில், 'அவர் என்ன எழுதியிருப்பார்' என்று தெரியும் என்பதால் அதைப் பிரிக்காமலே வைத்துவிட்டார். ஒரு திருமண அழைப்பிதழ். அட! இதென்ன ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் ஒரு கடிதம் ? ஒரு வேளை கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஸ்டாம்ப்புக்கான தொகையை வாங்கிச் சென்றிருப்பார் தபால்காரர் என்று எண்ணமிட்டவராக?
'யாரது.. ஸ்டாம்ப் ஒட்டாமல் கடிதம் அனுப்பியது? தபால் முத்திரையும் இல்லை, அனுப்பியவர் விலாசமும் இல்லையே ! ம்ம்...' என்று காஃபியை குடித்து விட்டுத் தபால் உறையைக் கிழித்து , உள்ளிருந்த தாளைப் பிரிக்க, முத்து முத்தான கையெழுத்தில் கடிதம் பேசிய வரிகளின் மீது அவர் விழிகள் பரபரவென்று ஓடின.
'அன்புள்ள அப்பாவுக்கு! இல்லையில்லை..அன்பையே காட்டாத அப்பாவுக்கு,
உங்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் துணிச்சல் இல்லாத மகன் அரவிந்தனின் அடக்கி வைக்கப்பட்ட உள்ளத்து உணர்வுகள் கடிதமாக! ஒரே வீட்டில் இருந்துகொண்டு கடிதம் எழுத என்ன துணிச்சல் என்று உங்கள் புருவம் நெற்றிக்கு மேலே ஏறி இருக்கும். ஆமாம்ப்பா..! என்ன செய்வது? இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்கு உங்கள் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியம் வரப் போவதில்லை. என்னைப் பொருத்தவரை நீங்கள் எப்போதும் டெர்ரராகவே இருந்திருக்கிறீர்கள்.
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து உங்களிடமிருந்து எனக்கு ஒரு பாராட்டு கூட கிடைத்ததில்லை. அத்தனை ஏன் ? என்னைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிந்ததாகக் கூட எனக்கு நினைவில் இல்லை. முதல் வகுப்பிலிருந்தே படிப்பில் நான் சராசரிக்கும் கீழான மாணவன்தான். அது எனக்கே தெரியும். ஆனால் அதை நீங்கள் தினமும் காலையில் எழுந்ததுமே எல்லோர் காதுகளிலும் விழும்படி பிரகடனப்படுத்துவது எனக்கு எத்தனை வேதனையைத் தரும் என்பதை நீங்கள் ஒரு நொடியாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
'எங்கே அந்தத் தடிமாடு?' , 'இன்னும் படிக்க உக்காரலையா?', 'இதெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு!' (மாடே எப்படி மாடு மேய்க்கும்?)என்று நீங்கள் எனக்கு செய்யும் அர்ச்சனைகளைக் கேட்டு அண்ணனும், தங்கையும் நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறு என்னைப் பார்ப்பார்கள்.
அம்மாதான் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் அம்மாவுக்கும் உங்களிடம் பேசுவதற்கு பயம். என்னைப் போலவே ! அதற்கான காரணம் எனக்குத் தெரிய வந்தபோது, உங்களிடமிருந்து நான் இன்னும் சில அடிகள் விலகி வந்து விட்டதைப் போல உணர்ந்தேன்.
அம்மா அதிகம் படிக்கவில்லை என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டீர்களாம். தாத்தா அவருடைய தங்கைக்கு .. அதுதான் அம்மாவின் அம்மாவுக்கு இறப்பதற்கு முன் வாக்கு கொடுத்து விட்டார் என்பதற்காகக் கட்டாயப்படுத்தி, அம்மாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்களாமே!
படிப்பு மட்டுமே ஒருவரை எடை போடுவதற்கான தகுதி ஆகிவிடுமா அப்பா? அம்மா பள்ளியிறுதி தாண்டவில்லைதான். ஆனால் அம்மாவின் தனித்திறமைகள் பற்றி அறிந்துகொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? தன்னுடைய ஆசைகள், எண்ணங்களை வெளிக்காட்ட முடியாமல்,மனதுக்குள்ளே அடக்கி வைத்து... அடக்கி வைத்து அந்த மன அழுத்தத்தில்தான் அம்மாவுக்கு அடிக்கடி வீசிங் தொல்லை ஏற்படுகிறது.
எங்களுக்கு நல்ல அம்மாவாக, உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு அடிமை மனைவியாகத்தானே இருக்கிறார்கள்? அண்ணனோ, தங்கையோ அம்மாவுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. கேட்டால் எங்களுக்குப் படிக்கிற வேலையே நிறைய இருக்கு என நிர்த்தாட்சண்யமாய் மறுத்து விடுகிறார்கள். ஆனால் அம்மாவுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து விட்டுத்தான் நான் படிக்கவே உட்காருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
என்ன செய்வது? அரசு உயர் அதிகாரியான நீங்கள்.. கஞ்சி போட்டு இஸ்திரி போட்ட உங்கள் உங்களது உடுப்பு போல் விறைத்துகொண்டுதான் இருப்பீர்கள் வீட்டிலும்.
தவறு செய்யும் அலுவலர்களைப் பார்க்கும் தோரணையில்தான் என்னையும் அம்மாவையும் பார்ப்பீர்கள். ஆனால் அண்ணனிடமும், தங்கையிடமும் நீங்கள் காட்டும் பாசமும் பரிவும் வேற லெவல்.
'நீயும் அவங்களை மாதிரி நல்லாப் படிச்சா அப்பா உங்கிட்டயும் பாசமா இருப்பார்' என்று அம்மா சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அப்பாவுக்கும் மகனுக்குமான பாசத்துக்குப் படிப்பு ஒரு தடைக்கல்லாக இருக்க முடியுமா என்ன? உங்களுக்கு வேண்டுமானால் படிப்பு வராத முட்டாள் மகனான என் மீது பாசம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் எனக்கு உங்கள் மடியில் அமர்ந்து, உங்கள் முறுக்கு மீசையைத் திருக வேண்டும், நீங்கள் என்னைக் கட்டி அணைத்துக் கொஞ்ச வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் இருக்கும் என்பதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டாப்பா? ஆனால் அவையெல்லாம் நிறைவேற வேண்டுமானால் நான் வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும். முடியவில்லையே. என்னால் முடிந்தளவுதானே என்னால் படிக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் என்னுடைய மார்க் ஷீட் வரும்போதெல்லாம் என் மேல் உள்ள கோபத்தில் அம்மாவை வசை பாடுவீர்கள். 'எனக்கு செல்லம் கொடுத்து அம்மாதான் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்' என்று திட்டுவீர்கள். 'தாயைப் போல பிள்ளை, அம்மாவைப் போலவே படிப்பு வராத மரமண்டை' என்று ஏளனம் செய்வீர்கள். உங்களுக்குத் தெரியுமா அப்பா?
அம்மாவுக்குப் படிப்பில் எவ்வளவு ஆர்வம் இருந்ததென்று? அம்மம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாலதான் அம்மாவின் படிப்பை நிறுத்தி விட்டார்களாம். கல்யாணத்துக்குப் பிறகு அஞ்சல் வழியில் படிக்க ஆர்வமாக இருந்தார்களாம். ஆனால் நீங்கள்தான் அம்மா சொல்வதையே காதில் வாங்க மாட்டீர்களாமே! இதெல்லாம் அம்மாவின் 'சொல்ல பயந்த கதை'.
அப்பா...! நான் எழுதியிருப்பதை தயவு செய்து கோபப்படாமல் படியுங்கள்.
நீங்கள் எப்போதும் என்னை தடிமாடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை. எனக்கு மெய்யாகவே மாடுகள் மீது ஒரு ஈர்ப்பு. விடுமுறை நாள்களில் உங்களிடம் அடி வாங்கிக் கொண்டாவது தாத்தாவின் கிராமத்துக்கு ஓடுவேனே... அதற்கு கூட எனக்கு நம் மாட்டுப் பண்ணையில் இருக்கும் மாடுகள் மீதுள்ள அன்பும் பாசமும்தான் காரணம். தாத்தாவுக்குப் பிறகு நம் பண்ணையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்?
அந்தக் காலத்திலேயே.. மாட்டுச் சாணி நாறுது..மூத்திர வீச்சம் குமட்டுதுன்னு.. ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வரவே மறுத்து விடுவீர்களாமே!
உங்கள் ஆசைப்படி.. இல்லையில்லை கட்டாயத்தின்பேரில் அண்ணனை என்ஜினீயராக்கி விட்டீர்கள். ஆனால் அவனுடைய ஆசை என்ன தெரியுமா? ஆடிட்டராக வேண்டும் என்பதுதான்! தங்கையையும் டாக்டராக்கி விடுவீர்கள். பெரிய பாடகியாக வேண்டும் என்ற அவளுடைய இசை ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமலே...!
ஐயோ அப்பா..நான் சொல்ல வந்ததை விட்டு எதையெதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். நாளை பிளஸ் டூ ரிசல்ட். மதிப்பெண்களும் உடனே வந்து விடும்.
அண்ணாவின் பிளஸ் டூ மார்க்குகள் வந்தபோது நம் வீட்டில் எத்தனை கோலாகலம்! ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாயிற்றே அவன்! அதே பள்ளியில் படித்தால் அவனுக்கும் உங்களுக்கும் கெளரவப் பிரச்னை என்றுதானே என்னை வேறு பள்ளியில் சேர்த்தீர்கள். அதுவும் நல்லதாகத்தான் போயிற்று. இல்லாவிட்டால் பள்ளியில் அண்ணனோடு ஒப்பிட்டுப் பேசிப் பேசியே என்னை ஒருவழியாக்கி இருப்பார்கள். ஆனால் கணிதப் பிரிவு வேண்டாம் என்று நான் எத்தனை அழுது அடம்பிடித்தும் கேட்காமல் என்னைக் கணிதப் பிரிவிலேயே சேர்த்தீர்கள்.
என்னோடு படிக்கும் தினேஷ் இருக்கிறானே! அவனுக்கும் இதே பிரச்னைதான். அவனுக்கு அக்ரி படித்து, நவீன முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யத்தான் ஆசையாம். ஆனால் விவசாயியான அவனுடைய அப்பாவோ, அவனைக் கண்டிப்பாக என்ஜினீயராக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.
விவசாயி குடும்பம் என்னும் பெயர் மாறி என்ஜினீயர் குடும்பம் என்ற பெயர் வர வேண்டும் என்பது அவருடைய கனவாம். வயலை விற்றாவது அவனை என்சினீயராக்கி விடுவது என்ற முனைப்பில் இருக்கிறாராம். ஆனால் என்னைப் போலவே கணிதம் அவனுக்கும் கடினமாக இருக்கிறது. அரையாண்டுத் தேர்வில் கணிதத்தில் ஃபெயிலாகி விட்டான்.
'இந்த மார்க்கை அப்பாகிட்ட எப்பிடிடா காமிக்கிறது..? பேசாம செத்துரலாமான்னு தோணுது?' என்று என்னிடம் சொல்லி அழுதவன் ஒருநாள் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு விட்டான். நல்ல வேளையாகத் தக்க சமயத்தில் அவனைக் காப்பாற்ற முடிந்தது. இல்லாவிட்டால் அவனை இழந்த வேதனையில் அவனுடைய பெற்றோர் துடித்துப் போயிருப்பார்கள். இதெல்லாம் என்னப்பா நியாயம்? எங்களால் முடிந்தவரை நாங்களும்தான் படிக்கிறோம். வகுப்பில் ஆசிரியர் நடத்தும்போது கணிதம் ஓரளவு புரிகிறது. ஆனால் திரும்பப் போடும்போது மறந்து விடுகிறது. மனப்பாடம் செய்து எழுதும் திறமையும் எங்களுக்கு இல்லை. நாங்களும் என்னதான் செய்வது?
'படிப்பே வராத உங்களால எங்க உயிர்தான் போகுது' என்று ஆசிரியர்களும் எங்கள் மேல் கடுஞ்சினத்தில் இருக்கிறார்கள். அவர்களும் என்ன செய்வார்கள் பாவம். நாங்கள் ஃபெயிலாகிவிட்டால் பள்ளியின் தேர்ச்சி நூறு சதவீதம் என்று பிரபலப்படுத்திக் கொள்ள முடியாதே !
மத்தளம் போல இரு பக்கமும் நாங்கள் அடி வாங்க வேண்டி இருக்கிறது. எங்கள் மனக்குமுறல்களை நாங்கள் எடுத்துச் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க யாரும் தயாராக இல்லை என்பதுதான் உச்சகட்ட சோகம். இந்த மாதிரியான கையறு நிலையில்தான் மனதிடமில்லாத சில மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க நேரிடுகிறது.
எனக்கும் கூட உங்கள் கனலடிக்கும் பார்வையும் அனலடிக்கும் வார்த்தைகளும் மூச்சு முட்ட வைக்கிறது. அப்பாவென்று கூப்பிடக்கூட நாக்குழறுகிறது. எனக்குமே அவ்வப்போது தற்கொலை எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அம்மாவின் அன்பு முகம் அந்த எண்ணத்தை மழுங்கடித்து விடுகிறது. என்னுடைய எதிர்காலம் என்பது கல்லூரியில் நான் சேர்ந்து படிக்கும் படிப்பின் மூலமாக மட்டுமே உருவாகும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதை நீங்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் அப்பா.
நீங்கள் படிக்கும் காலத்தில் தாத்தா அக்ரி படிக்கச் சொன்னபோது அதை மறுத்து, உங்களுக்குப் பிடித்த பாடப் பிரிவைத்தான் எடுத்துப் படித்தீர்களாமே! சொல்லிக் காட்டுவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு நினைவூட்டல்தான்.
தயவு செய்து எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வெளியுலகத்தில் பெருமையும்,கெளரவமும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்காதீர்கள். உங்களிடம் நிறைய பணம் இருக்கலாம். அதைக் கொண்டு என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் வாங்க முடியும். ஆனால்.
கட்டாயப்படுத்தி என்னை என்ஜினீயரிங் சேர்த்தால்..! கண்டிப்பாக என்னால் அங்கே பொருந்திப் படிக்க முடியாது அப்பா. எனக்கு விருப்பமான தொழிலைத் தாத்தாவுடன் சேர்ந்து செய்ய என்னை அனுமதியுங்கள். பால் பண்ணை தொழில் தொடர்பாக நிறைய விஷயங்களை நான் இணைய வாயிலாகவும், பத்திரிகைகளைப் படித்தும் தெரிந்து வைத்திருக்கிறேன். அதுதொடர்பான படிப்பில் என்னைச் சேர்த்து விட்டால் நான் கண்டிப்பாக ஆர்வமுடன் படிப்பேன்.
இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, கண்கள் சிவக்க, மீசை துடிக்க நீங்கள் வராண்டாவில் புலி போல நடை பழகிக் கொண்டிருப்பீர்கள். என்னை எதிர்பார்த்துக் கொண்டு ! மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா. நீங்கள் என்னை எத்தனை அடித்தாலும், மிரட்டினாலும் என் நிலைப்பாடு இதுதான். நான் நம் வீட்டில் மொட்டை மாடியில்தான் இருக்கிறேன். நல்லதொரு முடிவை உங்களிடமிருந்து எதிர்பார்த்துகொண்டு !
உங்கள் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உங்கள் மகன் அரவிந்த்.' என்று கடிதம் இருந்தது.
கல் மனது கரைய, கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரை வெளியே வராமல் அணை போட்ட உயர்அலுவலர் செல்வராஜ், இல்லையில்லை.. அரவிந்தனின் அன்பான அப்பா செல்வராஜ் மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் வேகமாக ஏறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.