'ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்'

'ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்'

இந்தோனேசியாவில் ஜகார்தா நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வர்த்தகம் மற்றும் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனோ சஃபைன்.
Published on

இந்தோனேசியாவில் ஜகார்தா நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வர்த்தகம் மற்றும் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனோ சஃபைன். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியக் குடியுரிமைத் தேர்வு எழுதி, வெற்றி பெற்று, இந்திய வெளியுறவுத்துறையில் பணி நியமனம் ஆன 100 % பார்வைத் திறன் இல்லாத முதல் பெண்மணி இவரே. அண்மையில் சென்னை வந்திருந்த பெனோ சஃபைன் அழகிரியைச் சந்தித்தபோது வெகு உற்சாகமாகப் பேசினார்:

"என் அப்பா லூக் அந்தோணி சார்லஸ் இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா மேரி பத்மஜா குடும்பத் தலைவி. அண்ணன் கனடாவில் இருக்கிறார். பிறக்கும்போதே எனக்குப் பார்வைக் குறைபாடு இருந்தது. ஆனாலும், என்னுடைய அப்பா, அம்மா, அத்தை, மாமா என்று எல்லோருமே என்னுடைய சிறு வயதில் இருந்தே எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி வளர்த்தார்கள்.

குறிப்பாக நான் சிறு சிறு தவறுகள் செய்தாலும் கூட என்னுடைய அப்பா என்னை ஒரு போதும் கோபித்துக் கொண்டதோ, என் மனம் நோகும்படி ஒரு வார்த்தைச் சொன்னதோ கிடையாது. ஒரு காரியத்தை நான் செய்து முடிக்கத் திணறினால், என்னுடைய அப்பா, அதை எப்படி வெற்றிகரமாகச் செய்து முடிப்பது என்று சொல்லிக் கொடுப்பார். இவை எல்லாம், பிறவியிலேயே கண் பார்வை இல்லாது போனாலும், அதை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவத்தை எனக்கு ஏற்படுத்தின.

இதற்காக நாம் சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால், அதன் மூலமாக நமக்கு எந்தப் பயனும் இல்லை. இதை அப்படியே ஏற்றுக் கொண்டு, நமக்கென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அந்த லட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்; அந்த இலக்கினை அடைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். எனக்குள்ளாகவே ஒரு உறுதி எடுத்துக் கொண்டு, எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள ஒரு வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்டேன்.

பெனோ சஃபைன்
பெனோ சஃபைன்

பார்வைத் திறன், செவித் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான சென்னை லிட்டில் ஃபிளவர் பள்ளியில் நான் படித்தேன். பள்ளிக் கூடத்தில், யாராவது திறந்த தண்ணீர்க் குழாயை மூடாவிட்டால், நான் "குழாயை மூடுங்கள்! தண்ணீர் வீணாகிறது!' என்று சொல்லுவேன். உடனே என் சக மாணவியர், "ஆமாம்! இவள் பெரிய ஐ.ஏ.எஸ். தண்ணியை வீணாக்கக்கூடாதுன்னு உத்தரவு போடுறா!' என்று கேலி செய்வார்கள். அப்போதே எனக்குள் குடியுரிமைத் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். பணியில் சேரவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

மேலும், எனக்கு சிறு வயது முதலே சமூகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளிக்கூட நாட்களில் இருந்தே எனக்கு மேடைப்பேச்சு மிகவும் பிடிக்கும். பள்ளி நிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேடையேறிப் பேசுவேன். புற்று நோய், சுற்றுச் சூழல், பருவநிலை மாறுபாடு, வன விலங்குப் பாதுகாப்பு என்று சமூக நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து நான் பேசி, பரிசுகள் வாங்கி இருக்கிறேன். 2006-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பில் 93% மதிப்பெண் வாங்கினேன். பார்வைக் குறைபாடு உடைய மாணவ, மாணவிகளில் நான் மாநிலத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றேன்.

பார்வைத் திறன் கொண்ட மாணவர்களில் மாநில முதல் இடம் பெற்றவர்களுக்கு ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆனால், அதே பாடத்திட்டத்தில் படித்து, மாநிலத்தில் முதலிடம் பெற்ற பார்வை இல்லாத மாணவியின் சாதனையைக் கண்டுகொள்வதில்லையே என்ற வருத்தம் எனக்கு ஏற்பட்டது.

என் வருத்தத்தை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் மனுவாக அளித்தேன். அதன் அடிப்படையில், பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் தமிழ் வழி கற்கும் பார்வைக் குறைபாடு கொண்ட மாணவ, மாணவியருக்கு அரசு உதவித்தொகை வழங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

12-ஆம் வகுப்பில் படிக்கும்போது அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய இளம் தலைவர்கள் மாநாட்டுக்குச் செல்ல நான் தேர்வு செய்யப்பட்டேன். அந்த சர்வதேசப் பயணம் எனக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை அளித்தது; எனது தன்னம்பிக்கையை அதிகரித்தது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பும், லயோலா கல்லூரியில் பட்ட மேற்படிப்பும் முடித்தேன். எனது மேடைப்பேச்சுகளை அந்தக் கல்லூரிகளும் மிகவும் ஊக்குவித்தன.

குடியுரிமைத் தேர்வுக்கான தயாரிப்புகளை நான் ஸ்டெல்லா மேரிசில் படிக்கும்போதே துவக்கிவிட்டேன். இந்திய குடியுரிமைத் தேர்வு என்பது உலகிலேயே மிக அதிகமானவர்கள் எழுதும் ஒரு போட்டித் தேர்வு; மிகவும் கடினமான ஒரு தேர்வு என்றும் சொல்லலாம். ஆனாலும், ஆண்டுதோறும் பலர் குடியுரிமைப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் இல்லையா? அப்படியென்றால், அந்தத் தேர்வில் வெற்றி பெறுவது என்பது முடியவே முடியாத காரியம் இல்லை அல்லவா? அப்படியெனில், அதற்கு முறையான தயாரிப்பு அவசியம். அது எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நான் அனுபவபூர்வமாகப் புரிந்துகொண்டேன்.

குடியுரிமைத் தேர்வில் ஆங்கில இலக்கியத்தை நான் விருப்பப்பாடமாக எடுத்துக் கொண்டேன். முதல் முறை எழுதியபோது, முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்றாலும், இறுதிக் கட்டத்தில் தேர்வாகவில்லை. ஆனாலும் அது, அடுத்த முறை எழுதினால் நிச்சயம் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்தது. முதல் முறை படித்தவற்றை பலமுறை மீள்பார்வை செய்தேன். இந்த முறை அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்ற 1123 பேரில் நான் 343-ஆவது ரேங்க் பெற்று, தேர்ச்சி அடைந்தேன். அதற்கு முன்பு வரை 100% பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறையில் பணிநியமனம் கொடுத்தது இல்லை. அந்த வகையில் நான் தான் முதல் பெண் என்ற பெருமையும் எனக்குக் கிடைத்தது.

2016-இல், முசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சிக் கல்லூரியில் நான் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றேன். அப்போது, பல்வேறு சுற்றுத் தேர்வுகள் மூலமாக "மிஸ் லபாசனா' விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்கான தேர்வின் ஒரு சுற்றில் நடுவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் என்னிடம், "ஒளியை எப்படி உணர்கிறீர்கள்?' என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

அதற்கு நான், "ஒளியை என்னால் பார்க்க முடியாது என்பதால், ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்' என்று பதில் அளித்தேன். அந்தப் பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளித்தது. திறமையை வெளிப்படுத்தும் சுற்றில் நானே ஒரு பாட்டு எழுதி, அதனைப் பாடிக் காட்டினேன். வகுப்பில் எப்போதும் துடிப்புடன் இருப்பேன். சிறப்பு உரையாற்ற வரும் விருந்தினர்களிடம் நிறைய கேள்விகள் கேட்பேன். முசூரி பயிற்சி நாள்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய கால கட்டம் என்றால் மிகை இல்லை. அதன் பிறகு டெல்லியில் ஆறு மாத காலம் வெளியுறவுத் துறைப் பணிக்கான சிறப்புப் பயிற்சி நடந்தது. அதன் பின் "பாரத தரிசனம்' என்ற அகில இந்திய சுற்றுப் பயணம்.

அதன் பின் பிரான்ஸ் நாட்டில் இந்திய தூதரகத்தில் பணியாற்ற அனுப்பப்பட்டேன். அங்கே இருந்தபோது பிரெயில் வழியில் பிரெஞ்சு மொழி கற்றுக் கொண்டேன். கல்யாண மாலை குழுவினர் பிரான்ஸ் வந்திருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அவர்கள் நடத்திய பட்டி மன்றத்தில், பேசும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அடுத்து டெல்லி வந்து மூன்றாண்டுகள் பணியாற்றினேன். அதன் பின்னர் மலேசியாவில் மூன்றாண்டுகள். அதன் பிறகு, தற்போது இந்தோனேசியா.

இளம் வயதில் என்னுடைய அப்பா என்னை எப்படி ஊக்குவித்து வளர்த்தாரோ அதுபோல இப்போது எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்து, ஆலோசனை வழங்கி வருகிறார் எனது கணவர் அழகிரி. அவர் சென்னையில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறார்.

ஒரு பெண்ணாக, நான் பெண்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான்: பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு சவால்களைப் போலவே வாய்ப்புகளும் உண்டு. அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற முடியும்.

இளைய தலைமுறையினருக்கு எனது ஆலோசனை: இன்று உலகில் தகவல் புரட்சி நடைபெறுகிறது. இளைஞர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். துடிப்பாக இருக்கிறார்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவசியமான விஷயங்களில்தான் அவர்கள் கவனம் குவிந்திருக்க வேண்டும். தேவை இல்லாதவற்றில் கவனத்தைச் சிதறவிடக்கூடாது. புத்தகங்கள், செய்தித் தாள்கள் நிறைய படிக்க வேண்டும். நேரத்துக்கு சரியான உணவைச் சாப்பிடுவதும், தூங்குவதும் கூட மிகவும் அவசியம். இளம் பெற்றோர் தங்கள் குழந்தைகளோடு நிறைய நேரம் செலவிட வேண்டும்'' என்றார் பெனோ சஃபைன்.

-எஸ்.சந்திர மெளலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com