சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சேர்ந்த மருத்துவர் தாமரை ஹரிபாபு 1973 -இல் மகப்பேறு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரிலேயே அரசு மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். கடந்த 40 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்து சாதனை புரிந்திருக்கிறார்.
தமிழ் ஆர்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்த இவர் ஆன்மிகம், இலக்கியம், வரலாறு எனப் பல்வகையிலும் ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 75 வயது மருத்துவர் தாமரை தனது மகப்பேறு மருத்துவப் பணி அனுபவங்கள் குறித்து நினைவலைகள் குறித்து அவர் கூறியது :
'காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய எங்கள் தந்தை தேசிகனார் சிறு வயது முதலே எங்களுக்கு தமிழ்ப்பால் ஊட்டி வளர்த்தார். நான் மருத்துவப் படிப்பை முடித்து ஒரு மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால், எனக்கோ மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் பெற்றோர்களைப் பிரிந்து மதுரை செல்ல வேண்டுமே என்ற தயக்கம் இருந்தது.
சமூகத்தில் ஒரு மருத்துவருக்கு இருக்கக்கூடிய மதிப்பையும் மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தையும் அவர் எனக்கு எடுத்துக் கூறினார். நானும் அதைப் புரிந்து கொண்டு மதுரையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து, மருத்துவரானேன்.
அதன்பின் எங்கள் ஊரான பள்ளத்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையிலேயே மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றத் துவங்கினேன். இன்று நான் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்கிறபோது எனக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. 2007 -ஆம் ஆண்டில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று அடுத்த 10 ஆண்டுகள் வரையில் பள்ளத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிரசவம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, ஒரு மருத்துவராக ஆலோசனைகள் வழங்குகிறேன்.
ஒரு மகப்பேறு மருத்துவராக நான் பார்த்த முதல் பிரசவத்தை என்னால் மறக்கவே முடியாது. மருத்துவ படிப்பின் போது ஒரு ஹவுஸ் சர்ஜனாக மூத்த மருத்துவர்கள் உடனிருந்து பிரசவங்கள் பார்த்து இருக்கிறேன் என்றாலும், முதல் பிரசவம் என்பதால் எனக்கு சற்று பதட்டமாகவே இருந்தது. நான் மருத்துவப் படிப்பை முடித்து தேர்வு முடிவுகள் வெளியான தினத்தன்று நீல நிறத்தில் ஒரு புடவை அணிந்திருந்தேன்.
தேர்வில் வெற்றி பெற்ற அன்று நான் அணிந்திருந்த அந்த நீல நிறப் புடவை மீது சென்டிமென்ட் ஆக எனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது. அதை எனக்கு மிகவும் ராசியான புடைவை என்று நான் கருதினேன். எனவே முதல்முறையாக மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டிய தினத்தன்று நான் அந்தப் புடவையை தான் கட்டிக்கொண்டு சென்றேன்.
அன்று காலையில் குளித்து முடித்து, சாமி கும்பிட்டேன். மருத்துவமனைக்குச் செல்லும் வழியெல்லாம் ஆழ்வார் பாசுரங்களை என் உதடுகள் முணுமுணுத்தன. ராம நாமம் சொன்னபடியே பிரசவ வார்டுக்குள் நுழைந்தேன். அன்று அந்தப் பெண்மணிக்கு சுகப்பிரசவம் ஆகி, என் மகப்பேறு மருத்துவப் பணி இனிதே துவங்கியது.
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். நான் பிரசவம் பார்த்த மீனா என்ற பெண்மணிக்குப் பிறந்த அந்தக் குழந்தை வளர்ந்து தற்போது அமெரிக்காவில் உயர் பொறுப்பில் இருக்கிறான். அவனுடைய பெயர் திருமேனி. அவன் இப்போதும் ஊருக்கு வரும்போது என்னைச் சந்தித்துப் பேசுவதும் உண்டு.
என்னை மிகவும் நெகிழ வைக்கும் இன்னொரு விஷயம் உண்டு. நான் பிரசவம் பார்த்து பிறந்த பெண் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி திருமணம் முடிந்தபின் தங்களது பிரசவத்துக்காக என்னிடமே வந்தவர்கள் நிறையப் பேர் உண்டு. தலைமுறைத் தாண்டி அந்த குடும்பங்கள் என் மீது இன்றும் பாசத்தைப் பொழிந்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் நான் மிகவும் அதிருஷ்டசாலி. ஜாதி, மத வித்தியாசம் பார்க்காமல், என் மீது அளவில்லா அன்பு காட்டும் ஏராளமான பெண்கள் இந்த வட்டாரத்தில் இருக்கிறார்கள். மருத்துவமனைக்கு மிக அருகிலேயே என்னுடைய வீடு என்பதால், எனக்குப் பணி நேரம் இல்லாத எந்நேரத்திலும், அது பகலானாலும், இரவானாலும் உடனே வந்து பிரசவம் பார்க்க முடிந்தது.
ஒரே நாளில் அதிகப்படியாக 8 பிரசவங்கள் பார்த்திருக்கேன். பொதுவாக ஒரே நாளில் 3 முதல் 4 பிரசவங்கள் சகஜமாகிவிட்டன. விடுமுறை காலங்களில்கூட இது நடைபெறும். அந்தக் காலத்தில் கிராமத்துப் பெண்கள் மகப்பேறு காலத்தில் நல்ல உடல் நலத்துடன் திடகாத்திரமாக இருந்தார்கள். கருவுற்ற காலத்திலும் கல் உரலில் இட்லி, தோசை மாவு அரைப்பது, நெல் குத்துவது போன்ற வீட்டு வேலைகளையும் அவர்களால் செய்ய முடிந்தது. பிரசவத்துக்கு முந்தைய நாள் மற்றும் பிரசவ தினத்தன்று கூட அவர்கள் தங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட்டார்கள். பிரசவ வலி எடுத்ததும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுவார்கள்.
எனவே அந்தக் காலத்தில் சிசேரியன் என்பது வெகு அபூர்வமாகவே இருக்கும். ஒரு கர்ப்பிணி வழக்கம்போல வீட்டுக்கு பொருள்களை வாங்க வாராந்திர சந்தைக்குச் சென்றிருந்தபோது அவருக்குத் திடீரென்று பிரசவ வலி எடுத்து விட்டது. சந்தையிலிருந்து அவர் நேரே மருத்துவமனைக்கு வந்துவிட்டார். உடனடியாக எனக்கு தகவல் வர நான் மருத்துவமனைக்கு விரைந்தேன். அன்று அந்தப் பெண்மணி சிரமம் அதிகம் இல்லாமல் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
சில சமயங்களில் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படும். குழந்தையின் தலைக்குப் பதிலாக கால்கள் முதலில் வெளிவரும். ஒரு முறை உயரம் குறைந்த ஒரு பெண் பிரசவத்துக்கு வந்திருந்தார். குழந்தை நல்ல வளர்த்தியாக இருந்ததால் வெளியே வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. உடனே கார் பிடித்து, கானாடுகாத்தானில் இருந்த அழகம்மை என்ற அனுபவம் மிகுந்த டாக்டரிடம் அந்தப் பெண்மணியை அனுப்பி வைக்க, அவர் தாய், சேய் இருவரையும் காப்பாற்றிவிட்டார். ஒரு மருத்துவர் என்ற முறையிலும், எழுத்தாளர் என்ற முறையிலும் நான் பல பரிசுகளும், விருதுகளும் பெற்றிருக்கிறேன்.'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது: அஜித் குமார் கொலை வழக்கில் ஆஜரான நிகிதா பேட்டி

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

மருத்துவ படிப்பை நிறைவு செய்த ஸ்ரீலீலா!

வாழ்க்கையை நேசிக்கிறேன்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

