கே.பி. சுந்தராம்பாள்! - நான் சந்தித்த பிரபலங்கள் - 12

கே.பி. சுந்தராம்பாள் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
கே.பி. சுந்தராம்பாள்
கே.பி. சுந்தராம்பாள்
Published on
Updated on
2 min read

கடவுளைப் பாடிய அந்தக் கணீர் குரலுக்கு ஒரு காவல் தெய்வம். அந்தக் குரலுக்கு இணையாக இன்னொரு குரலைக் கேட்க முடியாது. குடும்பச் சூழ்நிலை கருதி சிறு வயதிலேயே நாடகங்களில் நடித்தார். சில சமயங்களில் ரயிலில் பாடியும் பணம் சேர்த்தார். நாடகங்களில் மைக் இல்லாமல் கூட பாடி நடித்தார்.

1926இல் நாடகத்தில் நடித்தபோது எஸ்.ஜி. கிட்டப்பாவைச் சந்தித்தார். அவர் பாடும் எட்டுக் கட்டை சுதிக்கு ஈடாகப் பாடினார். கிட்டப்பாவையே மணந்தார். அவர் இளம் வயதிலேயே இறந்தார். குழந்தையும் இறந்து விதவையான இவர், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் நட்பால், ராஜாஜியின் அனுமதியுடன் மேடையில் சுதந்திரப் பாடல்களைப் பாடினார்.

கிட்டப்பாவின் மறைவிற்குப் பின் இன்னொரு ஆண் மகனுடன் நடிக்க மாட்டேன் என்று வைராக்கியத்துடன் இருந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் 'ஒளவையார்' நாடகத்தை திரைப்படமாக எடுக்க ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன் விரும்பினார்.

ஒளவையராக நடிக்க கே.பி.சுந்தராம்பாளை அணுகினார். கே.பி.சுந்தராம்பாள் திரைப்படத்தை தவிர்க்கும் எண்ணத்துடன் வேண்டுமென்றே லட்சம் ரூபாய் சன்மானம் கேட்டார். எஸ்.எஸ்.வாசனும் லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு தொகையை சேர்த்து, 1950களில் கே.பி.சுந்தராம்பாளை நடிக்க வைத்தது இன்று வரைக்கும் திரைப்பட வரலாறு.

தேசப்பற்று மிகுந்த இவர் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய 'காந்தியோ பரம ஏழை' என்ற பாடலைக் கேட்ட காந்தி ' ஹம்மோ சந்யாசி பனாமா' என்று சிரித்தபடி கேட்டாராம்.

காந்தியை அழைத்துத் தன் வீட்டில் தங்கத்தட்டில் விருந்து கொடுத்தபோது, 'விருந்தோடு சரியா தங்கத்தட்டு இல்லையா?' என்று வேடிக்கையாக கேட்க, காந்தியிடம் அந்த தங்க தட்டையே தந்து விட்டார். அவரும் அதை ஏலம் விட்டு நிதியில் சேர்த்தார்.

மேல் சபையின் முதல் பெண்மணியாக உறுப்பினரானார் கே.பி.எஸ்.

இவர் பிறந்த கொடுமுடியில் கட்டிய திரை அரங்கை எம்.ஜி.ஆர். திறந்து வைக்க, கருணாநிதி, ஜெயலலிதா கலந்து கொண்டு பாராட்டிப் பேசினார்கள்.

தீவிர முருக பக்தை. 'பூம்புகார்' திரைப்படத்தில் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க கவுந்தி அடிகளாக நடித்தவர். யார் வந்தாலும் திருநீறு தந்து ஆசீர்வதிப்பார். 1970இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவரை, நான் எழுதி இயக்க விரும்பிய 'சன்னிதானம்' படத்தில் இவரும் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இவரிடம் சம்மதம் கேட்க 1964இல் ஆழ்வார்பேட்டை வீட்டுக்குச் சென்றேன்.

எனக்கு யாரும் சிபாரிசு செய்யவில்லை. அறிமுகமும் இல்லை. அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் என்னை அன்புடன் உபசரித்து விவரம் கேட்டார்கள். 'வா ராஜா வா' படத்தில் நடித்து மிகவும் பிரபலமாக இருந்த மாஸ்டர் பிரபாகர், சுமதி என்ற குழந்தை நட்சத்திரங்கள் எடுக்கும் படம்' என்றேன்.

'குழந்தைகள் படம் எடுக்கும் அளவு நம் தமிழ் சினிமா வந்து விட்டதா' என்று சிரித்தபடி கேட்டார். 'அந்தக் குழந்தைகளின் தாய் மாமா தயாரிக்கிறார். நான் கதை, வசனம் எழுதி இயக்குகிறேன்' என்றேன்.

அவர் அவசரமாக ரயிலுக்கு போகும் சூழ்நிலையில் பணியாளர்கள் இருப்பதைப் பார்த்தேன். 'இந்தப் படத்தில் விஜயகுமாரி நடித்து இரண்டு நாள்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது' என்றேன். அந்தப் புகைப்படங்களையும் அவரிடம் காட்டினேன். 'என்னுடன் பூம்புகார் படத்தில் நடித்த விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்தார்' என்று பாராட்டினார்.

'நான் 'சன்னிதானம்' கதையை சொல்கிறேன். அதில் நீங்கள் பாட்டியாக நடிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டேன். 'உங்கள் தலைப்பு தெய்வாம்சமாக இருக்கிறது. ஆனால் நான் வெறும் பொழுதுபோக்கான படங்களில் நடிக்க விரும்பவில்லை' என்று உறுதியாகச் சொன்னார்.

நான் என்ன எஸ்.எஸ்.வாசனா அவரை சம்மதிக்க வைக்க? அன்று எந்த விலாசமும் இல்லாத சாதாரண ஒரு உதவி இயக்குநர், நாடகாசிரியர்தானே.

அவர் வீட்டில் ஒரு ரப்பர் தட்டில் கொஞ்சம் புளியோதரை தந்தார்கள். 'உங்கள் சன்னிதானம் படத்திற்கு என் பிரசாதமும் வாழ்த்துகளும் ஆசீர்வாதமும்' என்று கூறித் திருநீறு தந்தார். பூசிக் கொண்டேன்.

காந்திக்கு தங்கத் தட்டு. எனக்கு ரப்பர் தட்டு. எப்படியோ அவர் நடிக்காவிட்டாலும் அவரின் ஆசீர்வாதம் கிடைத்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com