மகளின் பாசம்...
அந்த ஊரின் முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. அப்போது அவரது வீட்டுக்கு ஒருவர் வந்து, 'இவர் எனது நண்பர். எனக்கு பதினைந்து லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். பணம் தந்தால்தான் உடலை எடுக்க அனுமதிப்பேன்' என்றார்.
விவாதம் நடைபெறுகிறது. மூன்று மகன்களும் ஒருசேர, 'நாங்கள் தர மாட்டோம். எங்கள் தந்தை இதுபற்றி கூறவில்லை' என்று மறுத்தனர். விவாதம் தொடர, பதற்றம் அதிகரித்தது.
அப்போது முதியவரின் ஒரே மகள் ஓடி வந்து கதறி அழுதவாறே தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி கொடுத்து, 'இதை வைத்துகொள்ளுங்கள். மீதியை சில மாதங்களில் நான் கொடுத்துவிடுகிறேன்' என்றாள்.
உடனே அந்த நபர், ' மகளே வேண்டாம்... நான் தான் உன் தந்தைக்கு பத்து லட்சம் ரூபாய் தர வேண்டும். உனது தந்தையோ, தான் இறந்துவிட்டால் உண்மையாக நேசிப்பவரிடம் பணம் கொடுக்கச் சொன்னார்' என்றார். உடனே மூன்று மகன்களும் வெட்கி, தலைகுனிந்தனர்.
த.நாகராஜன், சிவகாசி.
மன்னரின் பரிசு...
வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற மன்னர் நின்று, 'மற்றவர்கள் எல்லாம் எங்கே?' என்று கேட்டார். தன்னை விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்தப் பெண், 'அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கச் சென்றுள்ளனர்' என்றார்.
'அப்படியானால் நீ ஏன் செல்லவில்லை..?' என்றார் மன்னர். அதற்கு அந்தப் பெண்ணோ, 'மன்னரைப் பார்ப்பதற்காக, ஒருநாள் கூலியை இழக்கும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. எனக்கு ஐந்து குழந்தைகள். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால் போகவில்லை' என்றார்.
உடனே மன்னர் தனது கையில் இருந்த பொற்காசுகளைக் கொடுத்துவிட்டு, 'உங்கள் சக வேலையாள்களிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கச் சென்றீர்கள். ஆனால், மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று...' எனக் கூறிவிட்டு சென்றதும் அந்தப் பெண் திகைத்து நின்றார்.
எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி ரகசியம்...
தனது ரகசியங்களை நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டார் அந்த மனிதர். 'யாரிடமும் சொல்லாதே' என்று சொல்லியும், சில நாள்களிலேயே பலருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. கோபம் அடைந்த அந்த மனிதர் தனது நண்பரிடம் சண்டைக்குப் போனார்.
ஆனால் நண்பரோ சிரித்துகொண்டே, 'உன்னைப் பற்றிய விஷயங்களை உன்னாலேயே ரகசியமாக வைத்துகொள்ள முடியவில்லை. என்னால் மட்டும் முடியும் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்..' என்றார். உடனே அந்த மனிதர் தலைகுனிந்தவாறு, திரும்பிச் சென்றார்.
ஆர்.அஜிதா, கம்பம்.
இருமல் டாக்டர்....
தொடர் இருமலால் மருத்துவமனைக்கு மருத்துவரைப் பார்க்கச் சென்றார் சுரேஷ். அங்கு நர்ஸ், 'தொடர்ந்து இருமிட்டே இருக்கீங்களே..' என்றார். இதற்கு சுரேஷ், 'நிறைய சிகரெட் பிடிப்பேன்.. அதான்...' என்றார்.
'அப்படீன்னா சீக்கிரமா உள்ளே போய் டாக்டரை பாருங்க..?'
'அதுக்காகதான் காத்துக்கிட்டிருக்கேன்.. ஏற்கெனவே உள்ள ஒருத்தர் அரை மணி நேரமா இருமிக்கிட்டிருக்கார்... '
'அவர் வெளியே வர மாட்டார்...'
'ஏன்?'
'அவர்தான் டாக்டர்...'
இதைக் கேட்டவுடன் சுரேஷுக்கு தலைசுற்றியது.
நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.
முடிவு எடுத்துட்டேன்..
புது மருமகள் வந்தனாவை மாமனார் ரங்கநாதன், மாமியார் உமாதேவி அழைத்து, 'நீ விரும்பினால் இப்போதே தனிக்குடித்தனம் போயிடலாம்...' என்றனர். 'ஏன் மாமா..' என்று கேட்டாள் வந்தனா. 'இந்தத் தலைமுறை பசங்களுக்கு புத்திமதி சொன்னா பிடிக்கவே மாட்டேங்குது.. பெரியவங்கள மதிக்கிற பழக்கமும் குறையுது.
நிறைய வீடுகளில் மாமியார் மருமகள் பிரச்னைகள்தான் அதிகம். இந்தக் குடும்பத்தில் அந்த மாதிரி வேண்டாமுன்னுதான் சொன்னேன்..' என்றார் ரங்கநாதன். 'தொடக்கத்திலேயே இந்த மாதிரி முடிவு எடுத்துட்டா நல்லதுதானே..' என்றாள் உமாதேவி.
இதற்கு வந்தனா, 'அத்தே.. நானும் ஒரு முடிவு எடுத்துட்டேன்.. கடைசி வரை உங்கள் கூடவே இருக்கணும்... மருமகளா இல்லை... மகளா..' என்றாள். இதைக் கேட்டு அவளை இருவரும் அரவணைத்துகொண்டனர்.
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.