குறைந்தச் செலவில், ஒரு மலைப் பகுதியின் உச்சிக்குச் சென்று கோடை வெப்பத்தை மறந்து ரம்மியமான இயற்கை சூழலின் 'குளுகுளு' ஏ.சி.யை குடும்பத்துடன் அனுபவிக்க வேண்டும் என்றால், மேகமலை 'பெஸ்ட் சாய்ஸ்'.
தேனியை அடுத்துள்ள மேகமலை கடல் மட்டத்திலிருந்து 1,500 மீ. உயரத்தில் அமைந்துள்ள மலைப் பகுதியாகும். மேகம் மலையில் அடிக்கடி உராய்ந்துகொண்டு நிற்பதால், 'மேகமலை' என்று பெயர் வந்தது. 'மினி ஊட்டி' என்றும் சொல்கிறார்கள்.
மேகமலையை அடைய 18 ஊசி முனை வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அருமையான, அகலமான சாலை. செல்லும் வழியில் குரங்குகள் பாம்புகளைக் காணலாம். அதிர்ஷ்டம் இருந்தால் யானைகளையும் காட்டு எருமைகளையும் மான்களையும் காணலாம்.
இங்கு தேயிலை, ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை அழகுக்கும் பஞ்சமில்லை. மணலாறு, மகாராஜா மெட்டு, தூவானம், தேயிலைத் தோட்டங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்.
மகாராஜா வியூ பாயிண்ட்டிலிருந்து, பார்வையாளர்கள் மேகமலை வரிசை, வைகை அணை, வருஷநாடு மலைகளின் கண்கவர் காட்சிகளை அனுபவிக்க முடியும். மணலாறு, மேல்மணலாறு போன்ற அணைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பசுமை மாறாத வனப்பகுதிகள், அரிதான தாவரங்கள், யானைகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவை மேகமலையில் வாழ்கின்றன.
மேகமலையில் அடிக்கடி மூடுபனி இருக்கும் என்பதால், பச்சை மலை' என்றும் அழைக்கப்படுகிறது. உயர்ந்த மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மேகமலையின் இன்னொரு சிறப்பு. தவிர தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் ஒன்றிரண்டு உள்ளன. சொந்த ஊர்தி அல்லது டாக்சியில் வந்தால் மேகமலையைச் சுற்றி பார்க்க ஒருநாள் போதும். காலையில் வந்து மாலை திரும்பிவிடலாம்.
தேனிக்கும் மேகமலைக்கும் இடையே உள்ள தூரம் 41 கி.மீ. மட்டுமே. பேருந்து வசதிகள் உள்ளன. தேனியில் வசதியான தங்கும், உணவு விடுதிகள் அநேகம். தேனிக்கு அருகில் வைக்க அணைக்கட்டு தென் தமிழ்நாட்டில் பிரபலம்.
மேகமலையின் கீழ், தேனிக்குப் போகும் வழியில் (சிறிய) சுருளி நீர்வீழ்ச்சி உள்ளது. ஆண்கள், பெண்கள் உடை மாற்றிக் கொள்ள தனித்தனி அறை வசதிகள் உண்டு. பன்னீர் திராட்சை தோட்டங்களையும் சுருளிப் பகுதியில் ஏக்கர் கணக்கில் காணலாம். சீசனில் குறைந்த விலையில் திராட்சை பண்ணைகளிலிருந்து வாங்கிச் செல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.