சின்னஞ்சிறு வயதிலேயே...
ஓவியக் கலையில் நாட்டம் கொண்ட பதிமூன்று வயது சிறுவன் தர்ஷன் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். சின்னஞ்சிறு வயதிலேயே தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஓவியப் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி சி.பி.எஸ்.இ. பள்ளியில், ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைக்க உள்ள அந்தச் சிறுவன், ஓவியக் கலை மட்டுமல்லாது, யோகா பயிற்சியிலும் அசத்தி வருகிறார். அவர் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் வசிக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் வேல்முருகன்- எம்.சி.ஏ. பட்டதாரி சுகன்யா தம்பதியின் ஒரே மகன்.
சிறுவனின் சாதனை குறித்து, அவரது தந்தை வேல்முருகனிடம் பேசியபோது:
நான் கிரிக்கெட் வீரர். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிலேயே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். வி.எம்.சி.ஏ.' என்ற பெயரில் விளையாட்டு அகாதெமியை நிறுவி, விவேகானந்தா கல்லூரி விளையாட்டரங்கில் விடுமுறை நாள்களில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறேன்.
எனது மகன் தர்ஷன் சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கரோனா காலத்தில் கிடைத்த ஓய்வின்போது, ஓவியம் வரைதலில் முழு கவனமும் செலுத்தினார். எந்த ஓவியப் பயிற்சியிலும் பங்கேற்காமலேயே அற்புதமாக ஓவியம் வரைந்தது எங்களை ஆச்சரியப்படுத்த வைத்தது. இதற்கு நானும், எனது மனைவியும் ஆதரவு அளித்து, ஊக்குவித்தோம்.
சாதாரண வெள்ளை காகிகத்தில், பென்சிலில் அவுட்லைன் வரைவார். பின்னர், அதை டார்க் பென்சிலில் வரைந்துவிட்டு, வண்ணங்களைப் பூசுவார். ஒரு சில மணி நேரங்களிலேயே கண்ணைக் கவரும் வகையில், ஓவியங்களை வரைந்துவிடுவார்.
கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், வீடு, படகு ... என்று தர்ஷன் விதவிதமாக ஓவியங்களை வரைவார். ஆனால், இதற்காக, அவர் எந்த ஓவியத்தையும் பார்க்கவும் மாட்டார். தனது சுயசிந்தனையிலேயே ஓவியங்கள் இருக்கும்.
தர்ஷனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் நல்லவிதமாக வழிகாட்டுகின்றனர். இதனால், மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு ஓவியப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப் போட்டியில், 2-ஆம் இடத்தை தர்ஷன் பெற்று நடனப் பயிற்சியாளர் கலா மாஸ்டரிடம் பரிசு பெற்றார்.
இவரது ஓவியப் பயணம் மேலும் சிறப்பு பெற முயற்சித்தேன். இதற்காக, அவர் வரைந்த ஓவியங்களில் மிகச் சிறந்த 62 ஓவியங்களைத் தேர்வு செய்து, தி வேர்ல்டு த்ரோ மை அனிமி ஐஸ்' என்ற பெயரில் நூலாக்கியுள்ளேன்.
இளம் வயதிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்ததற்காகவும், நூல் வெளியிட்டதற்காகவும் இன்டியா ஸ்டார் பேஷன் அவார்ட் 2025' என்ற சாதனைப்
புத்தகத்திலும் தர்ஷன் இடம்பெற்றுள்ளார். நேஷனல் டேலன்ட் அவார்ட் 2025' உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஓவியத்தைத் தவிர, யோகா பயிற்சியிலும் சிறந்துவிளங்குகிறார். இணையவழியில் யோகா கற்று, அதை நாள்தோறும் பயிற்சி எடுத்து வருகிறார். பள்ளிப் பாடங்களிலும் முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்றுவருகிறார். எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகிறார். அவரது எண்ணங்களுக்கு நாங்கள் எப்போதும் தடையாய் இல்லாமல், படிக்கற்களாய் இருக்கிறோம்.
தர்ஷன் கல்வியிலும், இதரக் கலைகளிலும் சிறந்துவிளங்குவதற்காகவே எனது மனைவி சுகன்யா பணிக்குச் செல்லாமல் உடனிருந்து ஊக்குவித்துவருகிறார் என்கிறார் வேல்முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.