

மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் 'ஹாலோவீன்' ஆகும். அன்றைய இரவில் குழந்தைகள் விதவிதமாக, பயமுறுத்தும் வகையில் உடைகளை அணிந்து, அண்டை வீடுகளுக்குச் சென்று இனிப்புகளைச் சேகரிப்பார்கள்.
பிரிட்டன், ஸ்காட்லாண்ட் மற்றும் வடக்கு பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த பகுதிகளில் வாழ்ந்த செல்டிக் மக்கள் 'சாம்ஹைன்' என்ற பெயரில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டாடிய திருவிழாதான், இந்த 'ஹாலோவீன்' பண்டிகைக்கு முன்னோடியாக அமைந்தது.
மேற்கத்திய நாடுகளில், கோடை அறுவடைக் காலம் முடிந்து குளிர்ப்பருவம் துவங்கும் காலமான நவம்பர் முதல் நாள் 'ஆல் செயின்ட்ஸ் டே நாளாக புனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கு முதல்நாள் 'ஆல் ஹலோஸ் டே' என்று இருந்தது. அதுவே 'ஹாலோவீன் டே ஆக மாறியது.
இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாள்கள் (மகாளய பட்சம்), நம் முன்னோர்கள் பூமிக்குத் திரும்பி வந்து நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம் உள்ளது. அதுபோல, மேற்குலகில் இந்த 'ஹாலோவீன்' இரவில், மனிதர்கள் வாழும் பூவுலகுக்கும், முன்னோர்கள் வாழும் வானுலகுக்கும் இடையே உள்ள திரை மிகவும் மெலிந்து விடுவதாகவும், அதை எளிதாகக் கடந்து முன்னோர்கள் பூவுலகிற்கு வருவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
நல்ல ஆவிகள் திரையைத் தாண்டி உள்ளே வரும்பொழுது, சந்தடி சாக்கில் தீய ஆவிகளும் நுழைந்து வந்துவிடும்தானே? அவற்றைத் தடுத்து விரட்ட, அந்தக் காலத்தில் வீட்டு வாசலில் தீ மூட்டுவார்கள். விலங்குகளின் தலைகளைப் போலப் பயமுறுத்தும் ஆடைகளை அணிவார்கள். தீய ஆவியானது வீட்டுக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக வாசலிலேயே உணவும், பானங்களும் படையலாக வைப்பார்கள்.
அந்த வழக்கமே பின்னாளில், 'ஹாலோவீன்' நாளன்று விதவிதமான பயமுறுத்தும் ஆடைகள் அணியும் பழக்கமாக மாறியது. ஆரஞ்சு நிறப் பூசணிக்காய்களுக்கும், 'ஹாலோவீன்' விழாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
வீட்டு வாசலில் விறகுக் கட்டைகள் மூலம் நெருப்பு எரிப்பதற்குப் பதிலாக, பூசணிக்காய்க்குள் இருக்கும் குடற்பகுதிகளை நீக்கிவிட்டு, அதன் வெளிப்புறத்தில் கண், மூக்கு, வாய் செதுக்கி, உள்ளே மெழுகுவர்த்திகள் ஏற்றி விளக்குப் போல வீட்டு வாசலில் வைப்பார்கள். இவை, 'ஜாக் ஓ லாண்டன்' என்று அழைக்கப்படுகின்றன. மெழுகுவர்த்தியானது நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் சின்னமாகக் கருதப்படுகிறது.
'ஹாலோவீன்' தினத்தன்று குழந்தைகள், சூப்பர் ஹீரோஸ், எலும்புக்கூடுகள், பேய்கள், விலங்குகள், கார்ட்டூன் கேரக்டர்கள் எனப் பலவித வேடங்கள் அணிந்து அண்டை வீடுகளுக்குச் சென்று 'ட்ரிக் ஆர் ட்ரீட்?' என்று கேட்பார்கள். அதற்கு அர்த்தம், 'ஏதாவது சேட்டை செய்யணுமா? அல்லது ஏதேனும் வெகுமதி பேசாமல் கொடுக்கிறீர்களா?'' எனும் செல்ல மிரட்டல். வீட்டிலுள்ள பெரியவர்கள் சிரித்துக் கொண்டே, 'நாங்கள் இனிப்புகளையே கொடுத்து விடுகிறோம்' என்று பெரும்பாலும் பணிந்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்குக் கொடுப்பதற்குத் தயாராக சாக்லேட், கேக், டாஃபி, பிஸ்கட், பாப்கார்ன் எனப் பல தின்பண்டங்களைத் தயாராக வைத்திருப்பார்கள்.
குழந்தைகளுக்கு உற்சாகம் தரவும், அக்கம்பக்கத்தினரோடு சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுப்படையான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளியையொட்டி இந்த நாள் வருவதால், மேற்கத்திய நாடுகளிலுள்ள சில இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள், தீபாவளியோடு 'ஹாலோவீன்' பண்டிகையும் சேர்த்து 'தீவோலின்' என்ற பெயரில், அலுவலகத்திற்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டாடுகிறார்கள்.
பள்ளிகளிலும் விதவிதமான காஸ்டியூம்ஸ்களுடன் போட்டிகள், அலங்கார அணிவகுப்புகள் நடைபெறும். குழந்தைகள் மட்டுமன்றி, பெரியவர்களும் வேடிக்கையான காஸ்ட்யூம்கள் அணிந்து கலக்கும் 'நியூயார்க் வில்லேஜ் ஹாலோவீன்' அணிவகுப்பு , யுனிவர்சல் ஸ்டூடியோவின் ஹாரர் இரவுகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடும் பெரு மகிழ்ச்சித் திருவிழாவான இந்தப் பேய்த்திருவிழா அண்மையில் மேற்கத்திய நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.