1995 அக்டோபர் 20-இல் வெளியான 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' எனும் ஹிந்தி திரைப்படமானது, எந்தத் திரைப்படமும் சாதிக்காத உலக சாதனையைப் புரிந்துள்ளது. ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் ஆகியோர் நடித்துள்ளனர். கஜோல் அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான்.
மும்பையில் 1952- ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட 'மராத்தா மந்திர்' திரையரங்கமானது 1,107 இருக்கைகளைக் கொண்டது. 'முகல்-ஏ-ஆசம்', 'பாகீசா' உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன.
'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' 1995 அக்டோபர் 20-இல் வெளியானதிலிருந்து இன்றுவரை தினமும் காலை 11.30 மணிக்குத் திரையிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரையில் ஏறக்குறைய நூறு பார்வையாளர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 300 பேரும் வருகை தருகிறார்கள்.
நுழைவுக் கட்டணம் பால்கனிக்கு ரூ.50; சாதாரண இருக்கைக்கு ரூ.30.
ஆயிரம் வாரங்களுக்குப் பின்னர் 'படம் திரையிடப்படுவதை நிறுத்துகிறோம்' என்று திரையரங்கம் முன்பு அறிவிப்புப் பலகையை வைத்தபோது, பல ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே வந்தனர். பலர் ஜோடிகளாக வந்து, 'வேண்டாம்... படம் திரையிடுவதைத் தொடருங்கள்' என்று அழாதக் குறையாகக் கூறினர். இதனால், படம் தொடர்ந்து திரையிடப்படுகிறது. 'மராத்தா மந்திரில்' ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் முன் நின்று ரசிகர்கள் சுய படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.
2025 தீபாவளிக்கு 'மராத்தா மந்திர்' திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தின் 30-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்கள். இந்தத் திரைப்படம் காலத்தால் அழியாத காதல் கதையாகவும் கலாசார நிகழ்வாகவும் மாறியுள்ளது. பல ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை மீண்டும் மீண்டும் காண வருகை தருகிறார்கள். பலர், நினைவுச் சின்னமாக திரையரங்கு நுழைவுச் சீட்டுகளைச் சேகரித்து வருகின்றனர்.
நாயகனும், நாயகியும்...
'படம் வெளியாகி 30 ஆண்டுகளாகிவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. 'ராஜ்' வேடத்தில் நடித்த என்னை உலக நாடுகள் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தது. இந்தப் படம் உலகளவில் மக்களின் இதயங்களில் நெருக்கமான இடத்தைப் பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை'' என்கிறார் கதாநாயகன் ஷாருக்கான்.
நாயகியான கஜோல், 'இந்தப் படம் போல, உலகெங்கிலும் உள்ள யாராலும், எந்த நாட்டிலும் அல்லது எந்த மொழியிலும், ஒருபோதும் படம் தயாரிக்கப்படவில்லை. தயாரிக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். இந்தத் திரைப்படம், இந்திய வீடுகள், மரபுகள், வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. என் குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். தற்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளும் அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். இது தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடப்படும் தேசிய பொக்கிஷமாக மாறிவிட்டது'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.