ஓஆர்எஸ் தடைக்குப் பின்னால்...

ஹைதராபாத்தில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது.
ஓஆர்எஸ் தடைக்குப் பின்னால்...
Published on
Updated on
2 min read

ஹைதராபாத்தில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட தரமில்லாத இருமல் மருந்து, அதனைக் குடித்த பல குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கியிருப்பதுதான், ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்போது தரப்படுவதுதான் 'ஓ.ஆர்.எஸ்.' பானம். உடலில் நீர்ச்சத்து இழப்புக்குக் குடிக்கக் கொடுக்கப்படும் இந்தப் பானங்கள் போலியாகவும் கடைகளில் விற்கப்படுகின்றன.

இவற்றைக் குடிக்கும் குழந்தைகளுக்குப் பலவித உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டு சிவரஞ்சனியிடம் சிகிச்சைக்காக வர, 'போலி ஓஆர்எஸ்' பானங்கள்தான் குழந்தைகள் உடல்நலக்குறைவுக்குக் காரணம் என்று தெரிய வந்தது. இது குழந்தைகளுக்கு ஆபத்தாக மாறி இருப்பதை உணர்ந்த சிவரஞ்சனி போர்க்கொடி உயர்த்தினார்.

மருத்துவர் சிவரஞ்சனி சொல்வது:

'தொடர் வயிற்றுப் போக்கு, தொடர் வாந்தி காரணமாக உடலில் 'டீஹைடிரேஷன்' எனப்படும் உடலில் நீர்ச்சத்துக் குறைவு ஏற்படும். அப்போது 'வாய்வழி நீரேற்றல் தீர்வுகள்' (ஓ.ஆர்.எஸ்.) என்ற பெயரில் சந்தையில் விற்கப்படும் பானங்களை அருந்துவதால், குழந்தைகளின் வயிற்றுப்போக்கு இன்னும் அதிகமாகும். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை தரப்படவில்லை என்றால், மரணத்துக்கும்கூட வழிவகுக்கும்.

உண்மையான தரமான 'ஓ.ஆர்.எஸ்.' என்பது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உயிர் காக்கும் மருந்தாகும். அதில் துல்லியமான அளவு குளுக்கோஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு கலந்திருக்கும். இந்தப் பொடியை வாங்கி வந்து தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். திரவ நிலையிலும் குடிக்கும் வகையில் இந்தப் பானங்கள் கிடைக்கின்றன.

இவை, உடல் நீரிழப்பைச் சீராக்க உதவுகிறது. போலியான ஓ.ஆர்.எஸ்.-இல் வெறும் சர்க்கரை மட்டும் இருக்கும். சர்க்கரை கொண்ட பானங்கள் ரத்த ஓட்டத்தில் சேருவதற்குப் பதிலாகக் உடலில் இருக்கும் தண்ணீரை குடலுக்குள் இழுக்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து இழப்பு மேலும் மோசமடையக் கூடும்.

போலி பானங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. அதன் காரணமாக, பெரிய நிறுவனங்கள் எனக்கு எதிராயின. மருத்துவத் தொழில் செய்வதிலும் பலவிதத் தடைகள், இடர்கள் தரப்பட்டன. தொழில்முறை தனிமைப்படுத்தலையும் எதிர்கொள்ள வேண்டிவந்தது. பலரும் என் முதுகுக்குப் பின்னால் பலதும் பேசுவார்கள்.

சில வேளைகளில் என் குடும்பத்தினர்கூட 'இது தேவையா?' என்று கேட்பார்கள். காரணம், நான் எதிர்த்தது வெறும் சர்க்கரை கலந்த போலி மருந்தை மட்டுமல்ல, போலி மருந்துகளைத் தயாரிக்கும் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை.

பணபலமும் செல்வாக்கும் உள்ள நிறுவனங்களை எதிர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. 'போலி ஓ.ஆர்.எஸ்.' தயாரிப்பு குறித்த விரிவான அறிக்கைகளை மாநில, மத்திய சுகாதார அமைச்சகங்களுக்குத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தேன். இறுதியாக சென்ற வாரம் இந்தப் போலி பானங்களைக் கடைகளில் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய தரவுகளின்படி, குழந்தைகள் இறப்புக்கான முக்கியக் காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் சுமார் 13 சதவீதம் மரணங்கள் வயிற்றுப்போக்கினால் நிகழ்கிறது.

குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற சுகவீனங்களுக்கு பல ஆண்டுகளாக 'ஓஆர்எஸ்' பாதுகாப்பாக இருந்து வருகிறது. சர்க்கரை நிறைந்த பானங்களை ஒரிஜினல் போலவே விற்க அனுமதிப்பதன் மூலம், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குழந்தைகளுக்கு அபாயத்தை உருவாக்குகின்றனர்.

ஆபத்துக்கு உதவும் ஒரு மருந்தை போலியாகத் தயாரித்து விற்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது'' என்கிறார் சிவரஞ்சனி.

Summary

The Food Safety Standards Authority of India has banned the sale of 'fake ORS' drinks in the market.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com