நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

முடியாத விவாதங்கள்

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் ஆகின்றன. பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய இந்தப் பாடல் வங்க மொழியில் அமைந்திருந்தபோதிலும், இந்திய விடுதலை வீரர்களின் உணர்வுக்கு உரமாக அமைந்தது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 7:18 pm IST

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் ஆகின்றன. பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய இந்தப் பாடல் வங்க மொழியில் அமைந்திருந்தபோதிலும், இந்திய விடுதலை வீரர்களின் உணர்வுக்கு உரமாக அமைந்தது. ஆனால், இப்போது இந்தப் பாடல் சிலருடைய ஆட்சேபணைக்கு உள்ளாகியுள்ளது.

முதல்வர் சி.ஜோசப் விஜய் பதவியேற்பின்போது, தேசிய கீதம், வந்தே மாதரம் ஆகிய இரண்டும் பாடப்பட்டன. வந்தே மாதரம் பாடல் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சியில் முதல்முறையாக முழுமையாகப் பாடப்பட்டது.

முதல்வராக அண்ணா இருந்தவரை, பாரதியாரின் வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர் வாழிய மணித்திருநாடு.. வந்தே மாதரம்.. வந்தே மாதரம்....' பாடல்கள்தான் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்துக்கு முன்பாக இசைக்கப்பட்டன. பின்னர்,

அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து முதல்வரான கருணாநிதி, தமிழ்த் தாய் வாழ்த்தில் திராவிடம் இடம்பெற வேண்டும் என்பதற்காக, நீராரும் கடலுடுத்த...' பாடலைப் பாடும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். ஆகவே, வந்தே மாதரம் என்ற வார்த்தையும் இல்லாமல் போனது.

இப்போது மீண்டும் வந்தே மாதரம் பாடல் தமிழ்நாட்டில் ஒலிப்பதால் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த எதிர்ப்பு பல்கலைக்கழகங்களிலும், பட்டமளிப்பு விழாக்களிலும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இப்போது மட்டுமல்ல, வந்தே மாதரம் பாடலுக்கான எதிர்ப்பு இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்திலும் காணப்பட்டது .

வந்தே மாதரம் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு, எதிர்ப்பு குறித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், வந்தே மாதரம் வரலாறு' என்ற நூலை 1977-இல் எழுதினார். வந்தே மாதரத்துக்கு ஏன் எதிர்ப்பு எழுந்தது, அரசியல் நிர்ணய சபை என்ன முடிவு எடுத்தது என்பதை ம.பொ.சி. மிக எளிமையாக, இன்றைய இளைஞர்களுக்கும் புரிந்துகொள்ளும் விதமாக எழுதியுள்ளார். முல்லை பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ள அந்த நூலின் முக்கிய பகுதியை இங்கே இன்றைய இளைய சமுதாயத்துக்காக வழங்குகிறோம்.

வந்தே மாதரம்' பாடலுக்கு ஆதரவளிக்கும் ஒரு சாரார் இருந்தனர். அவர்கள், அந்தக் கீதத்தின் அமைப்பைக் குறைப்பதையும் மாற்றுவதையும் வெறுத்தனர். அதுபோல, இஸ்லாமிய மத உணர்வு காரணமாக வந்தே மாதரம் கீதத்தையும் முஸ்லிம்களில் சிலர் எதிர்த்தனர். இந்தக் கருத்து வேறுபாட்டிலே பாரதத்தின் பெருந்தலைவர்களும் கலந்திருந்தனர்.

தேசிய விழாக்களில் வந்தே மாதரம்' கீதத்தைப் பாடிய பின்னரே நிகழ்ச்சி தொடங்குவது ஒரு புனிதமான சடங்காக இருந்தது. அப்போது அவையிலுள்ளோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை காட்டும் மரபும் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், வந்தே மாதரம்' மிகவும் பெரியதாக இருப்பதால், அதிக நேரம் அவையினர் நிற்க வேண்டியிருந்தது. இதனைத் தவிர்ப்பதற்காக, காங்கிரஸ் காரியக் கமிட்டி 1937-இல் கூடி, தேசிய விழாக்களில் மட்டும் தேசிய கீதத்தின் முதல் ஆறு வரிகளைப் பாடினால் போதும்' என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இதை வங்க மாநிலத்தில் தேச பக்தர்களிலே பலர் எதிர்த்தனர். வந்தே மாதரம் வங்க மொழியில் இருப்பதும், வங்கப் பிரிவினை எதிர்ப்புக் கிளர்ச்சியிலிருந்து இந்தக் கீதத்துக்குப் பெருமதிப்பு பிறந்ததும் உலகறிந்தவை. இதனால், வந்தே மாதரம்' பாடலைச் சுருக்குவதானது வங்க மொழிக்கும், வங்காளியருக்கும் இழைக்கும் அவமானம் என்று வங்கத் தலைவர்களிலே சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

இதுபற்றி ஜவாஹர்லால் நேருவுக்கு 18.11.37-இல் தாம் எழுதிய கடிதத்தில் காந்தியடிகள் குறிப்பிட்டிருப்பதாவது:

வந்தே மாதரத்தைப் பற்றிய வாக்குவாதம் இன்னும் முடிந்தபாடில்லை. காரியக் கமிட்டியின் தீர்மானத்தைப் பற்றிப் பல வங்காளிகளுக்கு ஏற்பட்டுள்ள மனவேதனையும் இன்னும் தீர்ந்தபாடில்லை. அமைதியான நிலைமை ஏற்படும்படி செய்ய முயற்சித்து வருவதாக சுபாஷ் (சந்திரபோஸ்) என்னிடம் கூறினார். (கா.நூ.தொ.14, பக்கம் 191-193) காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முடிவுக்கு வங்கத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு நாளடைவில் சமாளிக்கப்பட்டுவிட்டது.

காரியக் கமிட்டியின் தீர்மானம் தேசம் முழுவதிலும் நடைமுறைக்கு வந்தது. இப்போதும் அகில இந்திய வானொலியில் நாள்தோறும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலே பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம்' பாடல் முழுவதும் பாடப்படுவதில்லை. கீழ்வரும் பகுதி மட்டுமே பாடப்படுகிறது:

ஸூஜலாம், ஸூபலாம் மலயஜ ஸீதலாம்

ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம் (வந்தே)

ஸூப்ர ஜ்யோத்ஸ்நா புலகித யாமிநீம்

புல்ல குஸூமித த்ரும தள úஸôபிநீம்

ஸூஹாஸிநீம், ஸூமதுர பாஷீணீம்

ஸூகதாம், வரதாம், மாதரம். (வந்தே)

ஆகிய ஆறு வரிகள் மட்டுமே இடம்பெறுகின்றன.

ஜனாப் ஜின்னாவின் எதிர்ப்பு: 1905-ஆம் ஆண்டு முதல் 1912 வரை வங்கப் பிரிவினை எதிர்ப்புக் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தபோது தேசம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் எந்தவிதமான முணுமுணுப்புமின்றி இந்து சகோதரர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் கீதத்தையும் கோஷத்தையும் போற்றினர்.

ஆனால், ஜனாப் ஜின்னா அவர்கள் முஸ்லிம் லீக்கின் தலைவரான பின்னர் - குறிப்பாக, பாகிஸ்தான் கோரிக்கை பிறந்ததன் பிறகு நிலைமை மாறியது. தேசத்தை ஒரு தெய்வம் போலக் கருதுவதும், கீதமிசைத்து வணங்குவதும், கோஷம் எழுப்பி வாழ்த்துவதும் இஸ்லாமியர் கடைப்பிடிக்கும் அருவரீதியிலான ஏக தெய்வ வழிபாட்டுக்கு எதிரானதாகும் என்ற கருத்து பிறந்தது. முஸ்லிம் லீக்கின் தலைவர் ஜனாப் ஜின்னா அவர்கள் வந்தே மாதரம்' கீதத்துக்கு எதிர்ப்பு காட்டினார்.

1938-இல், அப்போது அகில இந்திய காங்கிரஸ் மகாசபைத் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸூம், காந்தியடிகளும் ஜனாப் ஜின்னாவுடன் நாட்டின் விடுதலை விஷயத்தில் சமரசம் பேச விரும்பினர். காங்கிரஸ் - லீக் உடன்படிக்கையின் அவசியத்தை அவர்கள் உணர்ந்தனர்.

அதனால், 20.5.1938-இல் அவர்கள் இருவரும் ஜனாப் ஜின்னாவைச் சந்தித்துத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். ஆனால், அவர்களுடன் சமரசம் பேசுவதற்கு லீக் தலைவர் மூன்று நிபந்தனைகள் விதித்தார். அவற்றுள் ஒன்று, வந்தே மாதர கீதம் காங்கிரசால் தேசிய கீதமாகப் பயன்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டுமென்பதாகும். காந்தியடிகளும், சுபாசும் இதற்கு இணங்க மறுத்தனர்.

காந்தியடிகள் கருத்து: நாடு சுதந்திரம் பெற்றவுடன் இன்னொரு விதமான எதிர்ப்பும் இந்துக்களிடமிருந்து தோன்றியது. அப்போது, வந்தே மாதரம்' அல்லாஹு அக்பர்' என்ற இரண்டு கோஷங்களையும் ஒருங்கே எழுப்பி வந்தனர் தேசபக்தர்கள். இந்து - இஸ்லாமிய மக்களிடையே நட்புணர்ச்சியை வளர்க்கும் பொருட்டே இந்தக் கூட்டுக் கோஷம் பிறந்தது. வந்தே மாதரம்' கோஷத்துக்கு முஸ்லிம் லீக் எதிர்ப்பு காட்டியதால், அல்லாஹு அக்பர்' கோஷத்துக்கு இந்துக்களில் ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பாளர்களுக்கு சமாதானம் கூறி 7.9.1947 அரிசன்' இதழில் காந்தியடிகள் எழுதியது வருமாறு:

வந்தே மாதரம்' என்பது மத கோஷம் அல்ல; முற்றிலும் அரசியல் கோஷமேயாகும். அதை ஏற்றுக் கொள்ளுமுன் காங்கிரஸ் மகாசபை அதை நன்றாகப் பரிசீலனை செய்து குருதேவரிடமும் அபிப்பிராயம் கேட்டது. காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியின் அங்கத்தினர்களாயிருந்த முஸ்லிம்களும் இந்துக்களும் அந்தக் கீதத்தின் ஆரம்ப வரிகளுக்கு எவ்வித ஆட்சேபணையும் கூற முடியாதென்று முடிவு செய்தார்கள்.

எல்லோரும் சேர்ந்து அதைப் பாட வேண்டும். ஒரு நாளும் அதை முஸ்லிம்களை நிந்திக்கும் கருத்தோடு பாடக்கூடாது. வங்காளத்துக்கு தெம்பூட்டிய கோஷம் அதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதைக் கோஷித்துக் கொண்டு எத்தனையோ வங்காளிகள் அரசியல் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். வந்தே மாதரம்' என்பது இந்தியத் தாயை வணங்கும் கீதம் ஆகும்.

இந்துக்களில் சிலர் அல்லாஹு அக்பர்' என்ற கோஷத்தை ஆட்சேபித்திருக்கிறார்கள். ஆனால், அதைவிட உயர்ந்த கோஷம் ஒன்று இதுவரை உண்டாக்கப்பட்டிருக்கவில்லை என்பது என் திடமான நம்பிக்கை. ஆத்மாவைப் புனிதப்படுத்தும் கோஷம் ஆகும். கடவுளே பெரியவர்' என்பதுதான் அதன் பொருள். அந்தப் பொருளில் மகிமை இருக்கிறது. அரபு மொழியில் அந்தக் கோஷம் இருக்கிறது என்பதற்காக ஆட்சேபிக்கலாமா? (அரிசன், 7.9.1947)

இரண்டாவது உலகப் பெரும் போரின்போது விடுதலை வேட்கை மிகுந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ரகசியமாக இந்தியாவிலிருந்து வெளியேறி, அப்போது ஜப்பானியரின் ஆக்கிரமிப்பிலிருந்த பர்மாவில் தஞ்சம் புகுந்தார். அங்கு இந்திய தேசிய ராணுவம்' (ஐ.என்.ஏ.) என்னும் பெயரில் ஜப்பானியரின் ஆதரவுடன் இந்தியாவில் புகுவதற்கான ராணுவம் ஒன்றைத் திரட்டியதும் நாடறிந்ததாகும். அந்த ராணுவத்துக்கு ஜெய் ஹிந்த்' என்னும் கோஷத்தைக் கொடுத்தார் நேதாஜி. இதன் பொருள் இந்தியா வெல்க' என்பதாகும். உலகம் பெரும் போர் முடிவதற்கு முன்பே நேதாஜி துரதிர்ஷ்டவசமாக ஒருவிதமான விபத்தில் காலமாகி விட்டார்.

உலகப் பெரும்போர் முடிந்ததும் ஐ.என்.ஏ.யைச் சார்ந்த பெரும் தலைவர்களும் முக்கிய வீரர்களும் பிரிட்டிஷாரால் கைதுசெய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர். இங்கு அவர்கள் மீது டெல்லி செங்கோட்டையில் வழக்கு நடைபெற்றது. நேருஜியும் அவர்கள் சார்பில் நின்று வழக்காடினார். பின்னர் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது.

ஐ.என்.ஏ.க்களின் வருகையால் ஜெய் ஹிந்த்' என்னும் கோஷம் இந்தியாவில் செல்வாக்கு பெற்றது. பழைய வந்தே மாதர கோஷம் கொஞ்சம் பின்னுக்குப் போய் விட்டதென்றே சொல்ல வேண்டும். இதனை காந்திஜி, நேருஜி போன்ற பெரும் தலைவர்கள் விரும்பவில்லை. ஆயினும், அவர்கள் மெüனம் சாதித்தனர்.

சுதந்திரம் பெற்ற பின்னும் சில ஆண்டுகள் வரை ஜெய்ஹிந்த்' என்னும் கோஷத்துக்கு மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது.

அ.நி. மன்றத்தின் முடிவு: அரசியல் சட்டத்தைத் தயாரித்தளித்த அரசியல் நிர்ணய மன்றத்திலே, இந்திய தேசிய கீதமாக பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம்' பாடலை ஏற்பதா, தாகூரின் ஜன கண மன' பாடலை ஏற்பதா என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. பேராசிரியர் சாக்சேனா என்பவர் வந்தே மாதரம்' பாடலையே தேசிய கீதமாக ஏற்க வேண்டுமென்ற தீர்மானத்தைப் பிரேரேபித்தார்.

அ. நி. மன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது சேத் கோவிந்ததாஸ் என்ற உறுப்பினர் பேசியதாவது:

1911-ஆம் ஆண்டில் காலஞ்சென்ற 5-ஆம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது ஜன கண மன' இயற்றப்பட்டது. அந்தப் பாட்டு காலஞ்சென்ற மன்னருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றதே தவிர, இந்தியத் தாய்க்கு அல்ல. அப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாம் பாரத் பாக்ய விதாதா'வைக் குறிக்கும். ஜெய் ராஜேஸ்வர்' (மன்னருக்கு ஜே) என்ற சொற்றொடர் யாரைக் குறிப்பிடும் என்பது தெளிவு. ஒரு குடியரசு நாட்டின் தேசிய கீதத்தில் எந்த ஓர் அரசருக்கும் நாம் வாழ்த்து தெரிவிக்க முடியாது என்பது விளங்கும். ஆகவே, வந்தே மாதரம்' ஒன்றே நம்முடைய தேசிய கீதமாகக் கூடும். எனக் குறிப்பிட்டார்.

அடுத்து, விஸ்வம்பர் தயாள் திரிபாதி என்பவர் தெரிவித்த கருத்து வருமாறு:

கடந்த 50 ஆண்டுகளாக நம்முடைய தேசிய கீதமாக விளங்கிய, நம்முடைய சுதந்திரப் போராட்டத்துக்கு ஒளி விளக்காக விளங்கிய வந்தே மாதரம்' நம்முடைய நாட்டில் தேசிய கீதமாக விளங்கும் என்று நான் எண்ணுகிறேன். என்றார்.

இந்த விவாதத்துக்குப் பிறகு வந்தே மாதரம்' பாடலை ஏற்கக் கோரும் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டது.

அரசியல் நிர்ணய மன்றத்தில் 1950 ஜனவரி 24-இல் இந்திய தேசிய கீதம் பற்றி அம்மன்றத்தின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கீழ்வரும் அறிக்கையை வெளியிட்டார்:

தேசிய கீதம் பற்றிய பிரச்னை விவாதிக்கப்படாமல் இருக்கும் ஒரு விஷயமாகும். அந்தப் பொருளை அவை முன் கொணர்ந்து ஒரு தீர்மானம் வாயிலாக இந்த அவையின் முடிவை தெரியப்படுத்தலாம் என்று ஒரு சமயத்தில் எண்ணம் இருந்தது. தீர்மானம் வாயிலாக ஒரு கொள்கை பற்றி முடிவு எடுப்பதைவிட, தேசிய கீதத்தைப் பற்றிய ஓர் அறிக்கையினை நான் அளிப்பதே சிறந்தது என்று பின்னர் கருதப்பட்டது. அதற்கிணங்க நான் இந்த அறிக்கையை அளிக்கிறேன்.

சந்தர்ப்பத்திற்கேற்ப தேவையான சொல் மாற்றங்களுடன் கூடிய ஜன கண மன' என்று வழங்கப்படும் பாட்டு இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வகையில் பங்குபெற்ற வந்தே மாதரம்' பாட்டு அதற்குச் சமமாகப் பெருமைப் படுத்தப்படும். அதற்கு இணையாகக் கருதப்படும். இது உறுப்பினர்களுக்குத் திருப்தியளிக்கும் என்று நம்புகிறேன்.

அ. நி. மன்றம் செய்த முடிவுப்படி கவி. ரவீந்திரநாத் தாகூரின் ஜன கண மன' இந்தியாவின் அதிகாரபூர்வமான தேசிய கீதமாக ஏற்கப்பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.