தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

ஆடு தாண்டும் பாறையில் கோடு தாண்டும் கர்நாடகம்

கன்னடத்தில் 'மேக்கே' என்றால் ஆடு. 'தாட்டு' என்றால் தாண்டு. காவிரி மிகவும் குறுகலாக, பாறைகளுக்கு நடுவே ஓடும் இந்தப் பகுதியை 'ஆடு தாண்டும் பாறை' என்கின்றனர் தமிழர்கள்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2026, 9:12 pm IST

தி.த.சண்முக வடிவேல்

கன்னடத்தில் 'மேக்கே' என்றால் ஆடு. 'தாட்டு' என்றால் தாண்டு. காவிரி மிகவும் குறுகலாக, பாறைகளுக்கு நடுவே ஓடும் இந்தப் பகுதியை 'ஆடு தாண்டும் பாறை' என்கின்றனர் தமிழர்கள். ஒகேனக்கல் அருவியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கர்நாடகத்தில் உள்ள இந்த மேக்கேதாட்டு பகுதியில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் அதிகபட்சம் 67 டி.எம்.சி.

கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டத் திட்டமிடுகிறது கர்நாடக அரசு. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்- பெங்களூரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவே இந்த அணை.

பற்றாக்குறைக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு சீரான அளவில் தொடர்ந்து தண்ணீர் கொடுப்பதை சாத்தியப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும், கர்நாடகம் சொல்கிறது. ஆனால், அது அப்படியாக இல்லை.

கர்நாடகத்தின் நோக்கம் பெங்களூரு குடிநீர்த் தேவை மட்டுமல்ல; மேலும் விவசாய நிலப்பரப்பை அதிகரிப்பதே அதன் நோக்கம். மேக்கேதாட்டு அணை காவிரி நீரை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எடுத்துக் கொண்டு, போனால் போகட்டும் என, தவிர்க்க முடியாத மிகைநீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு வழங்குவது என்பதை உறுதிப்படுத்தும் திட்டமாக இருக்கிறது.

காவிரி நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகத்தின் பாசனப் பரப்பாக தெரிவிக்கப்பட்ட 11.20 லட்சம் ஏக்கர், இப்போது 22 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக விரிந்துள்ளது. இதற்குத் தேவைப்படும் பாசன நீர் 362 டி.எம்.சி. என கணக்கிடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நதியில் உரிமையுள்ள 270 டி.எம்.சி.யில் மேக்கேதாட்டு அணைத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்றும், தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தண்ணீர் எந்த விதத்திலும் குறையாது என்றும் கர்நாடக அரசு கூறுவது பொய்யான வாதம்.

1960-70 ஆண்டுகளில் ஆண்டுக்கு 350 டி.எம்.சி . தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது.

1990-ஆம் ஆண்டு நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் இது 205 டிஎம்சியாக குறைந்தது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தபோது, 192 டி.எம்.சி.யாக மேலும் சரிந்தது.

நியாயம் கேட்டு மேல்முறையீடு செய்ததில் உச்சநீதிமன்றம், 2018-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் மேலும் 14.75 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குக் குறைத்தது.

அதாவது, 14.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரம் உள்ளிட்ட பிற நகரங்களின் தண்ணீர்த் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று காரணம் கூறி, தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைத்தது.

இப்போது மீண்டும் பெங்களூரின் தண்ணீர்த் தேவைக்காக என்ற காரணத்தைக் காட்டியும், '400 மெகாவாட் புனல் மின் நிலையம்' என்ற பெயரிலும் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கர்நாடகம் கையில் எடுத்து அநியாயச் செயலில் ஈடுபட்டு வருகிறது. 'எங்கள் மாநில எல்லையில், காவிரியில் வரும் நீரை நாங்கள் எப்படியும் பயன்படுத்தலாம். நீதிமன்றத் தீர்ப்பு இதை அனுமதிக்கிறது' என்று கர்நாடக அரசு சொல்லும் வாதம் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

பாசனப் பரப்பை விரிவாக்கிய கர்நாடகம்:

ஏற்கெனவே காவிரியின் துணை நதிகள் அனைத்திலும் அணைகள் கட்டி, தண்ணீரைத் தேக்கி, சாகுபடி பரப்பை விரிவாக்கியுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணை 49.45 டி.எம்.சி. கொள்ளவு கொண்டது. இது நீங்கலாக, துணை நதிகளின் குறுக்கே பல அணைகள். அவை- கபினி அணை 19.5 டி.எம்.சி. கொள்ளளவு, ஹேரங்கி அணை 8.50 டி.எம்.சி. கொள்ளளவு, ஹேமாவதி அணை 37. டி.எம்.சி. கொள்ள்ளவு, யாகாச்சி அணை 3.6 டி.எம்.சி. கொள்ளளவு, சுவர்ணவதி 1.26 டி.எம்.சி. கொள்ளவு கொண்டவை. இந்த அணைகளுக்குக் கீழே பல இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி, நீரைப் பாசனத்துக்குப் பகிர்ந்து வருகிறார்கள்.

கர்நாடகத்தில் உள்ள இந்த அணைகள் மூலம் 130 டி.எம்.சி. தண்ணீரை எப்போதும் தேக்கி வைத்துக்கொள்ள முடியும். இந்த அணைகள் மூலம் பாசன நீர் பாய்ந்துகொண்டே இருக்கும். பலத்த மழை பெய்து, அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, அணைகள் நிரம்பி வழியும்போது மட்டும், அதாவது தேக்கி வைத்தால் அணைக்கு ஆபத்து என்பதால், அதை திறந்து விடுவார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது. உபரிநீர் மட்டுமே தமிழ்நாட்டுக்குத் தரப்பட்டு வருகிறது. தள்ளிவிடப்படுகிறது.

பற்றாக்குறைக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஆணையம் உத்தரவிட்டாலும், அதை கர்நாடகம் ஏற்க மறுப்பதும், நீதிமன்றத்தை நாடுவதும் வழக்கமாகிவிட்டது. பிறகு மழை பொழிந்தவுடன் தண்ணீர் தானாக வந்து சேர்வதும், வழக்கு அர்த்தம் இழப்பதும்தான் நடைபெற்று வருகிறது.

கபினி நதிக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கேரள மாநிலத்தில் உள்ளன. கேரளத்தில் மழை பொழிந்து வரும் தண்ணீர் கபினி வழியாக டி.நரசிபுரா அருகே காவிரியில் சேர்கிறது. இப்போது கபினி அணை திறக்கப்பட்டு வரும் நீரும் உத்தேச மேக்கேதாட்டு அணையில் தடுக்கப்பட்டுவிடும்.

மேக்கேதாட்டு அணை- தமிழ்நாட்டுக்கான காவிரி நீருக்கு கடைசிப் பூட்டு:

2018-ஆம் ஆண்டு மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு விரிவான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க காவிரி நீர் ஆணையத்திடம் கர்நாடகம் அனுமதி கேட்டபோது, பெங்களூருக்கு 4.75 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக இத்திட்டம் என்று தெரிவித்தது. இப்போது இந்த ஆய்வறிக்கையில் சிவனசமுத்திரம் புனல் மின் திட்டம், பெங்களூருக்கு 6.95 டி.எம்.சி. குடிநீர் என்று குறிப்பிட்டுள்ளது.

காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீரை பெங்களூருக்கு தற்போது பயன்படுத்துகிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டது. ஆகவே கர்நாடகத்தில் இந்த விரிவான திட்ட அறிக்கையை காவிர் நீர் ஆணையம் திருப்பி அனுப்பி விட்டது

இந்த நிலையிலும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சூளுரைக்கிறார். 'மேக்கேதாட்டு அணை கட்டியே தீருவோம்' என்கிறார்.

ஒரு குடும்ப நிறுவனத்தைத் தலைமை ஏற்று நடத்தும் மூத்த சகோதரன், நிறுவனத்தின் லாபம் அனைத்தையும் ஆங்காங்கே வேறு தொழில்களில் முதலீடு செய்துவிட்டு, மற்ற சகோதரர்களிடம் லாபம் இல்லை என்று பொய்க்கணக்கு காட்டினால், அது அப்பட்டமான மோசடி. தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

ஆனால், காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அணைகளைக் கட்டி, தடுப்பணைகளைக் கட்டி, தண்ணீர் முழுவதையும் தானே எடுத்துக் கொண்டு, 'மழை இல்லை . ஆகவே காவிரியில் தண்ணீர்விட இயலாது' என்று சொல்லும் ஒரு மாநில அரசை 'நீ ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று மத்திய அரசும் சொல்லாது. நீதிமன்றங்களும் சொல்வது மிகமிக அரிது.

'நடந்தாய் வாழி காவேரி' என்று பாடிய சிலப்பதிகார காலகட்டம் இதுவல்ல; 'முடங்கினாய் பாவம் காவேரி' என்று சொல்லவேண்டிய அவல நிலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.