காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, கர்நாடகத்தின் மேக்கேதாட்டு விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத் துறை ஆணையம் திருப்பி அனுப்பி வைத்ததாகத் தெரித்துள்ளது.
திருத்தப்பட்ட திட்ட முன்மொழிவானது அதிகப்படியான நீர் பயன்பாட்டைக் கோருவதாகவும், காலாவதியான தரவுகளைச் சார்ந்திருப்பதாகவும், மேலும் நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு தீர்ப்புக்கு மாறாக உள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையம், ஒரு புதிய விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக எல்லைக்கு சற்று முன்பாக மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்த கர்நாடக அரசு, இப்போது அந்த அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமைப் பொறியாளரிடம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி சமர்ப்பித்துள்ளது.
இந்த அணைக்கு மத்திய அரசின் அனுமதியை எப்படியாவது பெற்றுவிடத் துடிக்கும் கர்நாடக அரசு, அதற்காக அத்திட்டம் பற்றி தவறான தகவல்களை அளித்திருக்கிறது.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வழங்க முடியும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடகம் கூறியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, மேக்கேதாட்டு அணையில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் வழங்குவதற்காக 16.1 டி.எம்.சி தண்ணீர் எடுக்கப்பட இருப்பதாகவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே இந்த தண்ணீர் எடுக்கப்படும் என்றும் கர்நாடகம் கூறியிருக்கிறது. இவை அனைத்தும் மத்திய நீர்வள ஆணையத்தையும், தமிழக அரசையும் ஏமாற்றும் நோக்குடன் அளிக்கப்பட்ட வாக்குறுதி ஆகும். இதை நம்ப முடியாது.
மேக்கேதாட்டுவில் கர்நாடகம் புதிதாக கட்டவுள்ள அணையின் கொள்ளளவு 67.14 டி.எம்.சி. இது கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளையும் விட அதிக கொள்ளளவு கொண்டதாகும்.
இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் காவிரியில் 171.73 டி.எம்.சி நீரை கர்நாடகத்தால் சேமித்து வைக்க முடியும். இது மேட்டூர் அணையின் கொள்ளளவான 93.74 டி.எம்.சியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து சொந்தத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வது தான் கர்நாடகத்தின் நோக்கமாக இருக்குமே தவிர, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருக்காது.
இதற்கு முன் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருந்தபோதெல்லாம், அதைக்காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அதில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை அதன் சொந்த பாசனத் தேவைக்காகவும், குடிநீருக்காகவும் தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஒருபோதும் தண்ணீர் வழங்காது.
தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காகத் தான் புதிய அணை கட்டப்போவதாக மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ள வாக்குறுதி போலியானது; அதை கர்நாடகம் ஒருபோதும் செயல்படுத்தாது என அச்சம் எழுந்ததுடன், தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடமும், காவிரி நதிநீர் ஆணையத்திடமும் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது குறித்து பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த தகவல் உரிமை சட்ட கேள்விக்கு, சர்ச்சைக்குரிய மேக்கேதாட்டுத் திட்டம் தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்துக்கு இடையே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், கர்நாடகம் சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தங்களால் முடிவெடுக்க முடியாது என கர்நாடக அரசு தாக்கல் செய்த அணை திட்ட அறிக்கையை கடந்த மாதமே நிராகரித்த காவிரி நதிநீர் ஆணையம், மத்திய நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த மத்திய நீர் ஆணையம், இத்திட்ட முன்மொழிவானது காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு தீர்ப்புக்கு ஒத்துப்போகவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வசம் உள்ள அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, பயன்பாட்டுத் தேவைக்காகச் சேமிக்கக்கூடிய நீரின் அளவை 2.2 டிஎம்சிக்கு அதிகரிக்க கர்நாடகம் முன்மொழிந்திருந்ததால், தகுந்த மாற்றங்களைச் செய்வதற்காக ஜூன் 29 இல் மத்திய நீர் ஆணையம் அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பியது.
2018 இல் கர்நாடகா முதன்முதலில் மேக்கேதாட்டுத் திட்டத்தை முன்மொழிந்தபோது, அது ஒரு சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கமாக முன்வைக்கப்பட்டது. பெங்களூரு மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகத்திற்காக 4.75 டி.எம்.சி கூடுதல் நீரைப் பயன்படுத்தும் வகையில், சுமார் 23.75 டி.எம்.சி நீரைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர் ஆணையம் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் "கொள்கை அளவில்" ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட முன்மொழிவில், கர்நாடக 'சிவனசமுத்திரம் மின் உற்பத்தி திட்டத்தையும், மேக்கேதாட்டு அணை திட்டமும் இணைக்கும் வகையிலும், முன்மொழியப்பட்ட நீரின் பயன்பாட்டு அளவை 4.75 டி.எம்.சி-யிலிருந்து 6.95 டி.எம்.சி ஆக உயர்த்தியது.
இது 2019-இல் சமர்ப்பிக்கப்பட்ட அசல் விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறாத முக்கிய மாற்றங்கள் இவை என்று மத்திய நீர் ஆணையம் சுட்டிக்காட்டியதுடன், 59.46 டி.எம்.சி நேரடி சேமிப்புத் திறன் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தை அமைப்பதற்கான கர்நாடகத்தின் நியாயப்படுத்தலையும் ஆணையம் கேள்விக்குள்ளாக்கியது.
மேலும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையை அமைப்பதை உள்ளடக்கிய 'சிவனசமுத்திரம் மின் உற்பத்தி திட்ட'த்தையும், மேக்கேதாட்டு அணை திட்டமும் இணைக்கும் வகையில் உள்ளன. காவிரி ஆற்றின் நீரை அதிகயளவில் பயன்படுத்தும் வகையில் மேகேதாட்டு திட்டம் இருப்பதால், 2026 ஏப்ரல் 21 ஆம் தேதி கர்நாடக அரசு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே விரிவான திட்ட அறிக்கை நிராகரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அணை என்று வரும்போது, அதில் தேக்கி வைக்கப்பட வேண்டிய குடிநீர் குறித்த சில நிபந்தைகளையும் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், கர்நாடக அரசின் அறிக்கையில் அப்படியான எந்தவொரு நிபந்தனையும் பின்பற்றப்படுவதாக தெரியவரவில்லை என்று மத்திய நீர் ஆணையம் கூறியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேள்விகள் மூலம் தெரியவந்துள்ளது.
Summary
Karnataka's Mekedatu DPR returned as CWC finds proposal violates Cauvery tribunal award, SC verdict...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








