மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
முந்தைய திமுக, அதிமுக அரசுகளின் வரிசையில் தவெக அரசும் காவிரி நதிநீர் உரிமையைத் தக்கவைத்துக் கொள்ள உறுதியுடன் இருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில் திமுகவின் வற்புறுத்தலை ஏற்றுக்கொண்டு மேக்கேதாட்டு பிரச்னைக்குப் புதிதாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானத்தில் இணைத்திருக்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. மேக்கேதாட்டு பிரச்னை தொடர்பாக 13.11.2025-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புதான் புதிய நடுவர் மன்றம் எனும் யோசனைக்கு அடிப்படையாக அமைந்தது.
மேக்கேதாட்டு அணைக்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட வரைவு அறிக்கைக்கு (டிபிஆர்) மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, மேக்கேதாட்டு திட்ட வரைவு அறிக்கை மீது மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், தமிழக அரசு இப்போதே நீதிமன்றத்தை நாடியிருக்கத் தேவையில்லை எனக் கூறி தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 4.3.2026-இல் முந்தைய திமுக அரசின் தமிழக நீர்வளத் துறை அரசுச் செயலர், மத்திய ஜல் சக்தி துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், "கர்நாடக மாநிலத்தின் மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்னை ஒரு புதிய விவாதம் என்பதால், நதிநீர் தாவா சட்டம்-1956-இன் அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
இந்தக் கோரிக்கையைச் சுட்டிக்காட்டி அரசின் தனித் தீர்மானத்தில் இதைச் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு மரியாதை அளிக்கும் விதத்திலும்; ஜனநாயக முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலும்; நிர்வாக ரீதியிலான தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டும், முதல்வர் ஜோசப் விஜய் ஏற்று அந்தப் பரிந்துரையைத் தீர்மானத்தில் சேர்க்க முற்பட்டது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால், அவர் சற்று அவசரப்பட்டு விட்டார் என்பதைச் சுட்டிக்காட்டவும் தோன்றுகிறது. காவிரி விவகாரத்தில் 16.2.2018-இல் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, கீழ்ப்படுகை மாநிலங்களின் (தமிழகம், புதுச்சேரி, கேரளம்) அனுமதி இல்லாமல், மேல்படுகை மாநிலம் (கர்நாடகம்) காவிரி நீரைத் தடுக்கவோ, தேக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக காவிரி நடுவர் மன்றமும் 5.2.2007-இல் இதேபோன்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, மீண்டும் புதிதாக நடுவர் அமைக்கக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது ஏன் என அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சேபம் எழுப்பியதில் நியாயம் இல்லாமல் இல்லை. புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் தமிழகத்துக்கு பாதிப்பு வராது என சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளக்கம் அளித்திருக்கின்றனர். "மேக்கேதாட்டு தொடர்பான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் முற்றிலும் நிராகரிக்கவில்லை.
மாறாக, எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வள ஆணையத்துக்கு அதைத் திருப்பி அனுப்பியுள்ளது. அதேவேளையில் அந்தத் திட்ட அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் தனது தொழில்நுட்பக் கருத்துகளை வழங்கி அடுத்தகட்ட நகர்வுக்கு வழிவகுத்துள்ளதால் புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது மிகச்சிறந்த அணுகுமுறைதான் என்பது தவெக அரசின் விளக்கம்.
2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தடையின்றி வழங்க வேண்டும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகம் புதிய அணைகள் கட்டக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரின் அளவு தொடர்பான வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் தனது முந்தைய தீர்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே, புதிய நடுவர் மன்றம் என்ற யோசனைக்கு இடையே, காவிரி நீருக்கான தமிழகத்தின் உரிமைக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள சட்டப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்துவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
***
தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.
திருக்குறள் (எண் 462) அதிகாரம்: தெரிந்து செயல்வகை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்!

மேக்கேதாட்டு: நடுவா் மன்றம் கோருவது தமிழகத்தின் உரிமையை பறிபோகச் செய்யும்! - பி.ஆா். பாண்டியன் கண்டனம்







