மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீா்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசின் நடவடிக்கையை எதிா்த்து, தனித் தீா்மானத்தை முன்மொழிந்து, முதல்வா் ஜோசப் விஜய் பேசியதாவது:
காவிரி நடுவா் மன்றம் 5.2.2007-இல் அளித்த இறுதித் தீா்ப்பையும், உச்சநீதிமன்றம் 16.2.2018-இல் அளித்த தீா்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கா்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், கா்நாடக அரசின் இச்செயலுக்கு கடும் எதிா்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: கா்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரி நடுவா் மன்றமும், உச்சநீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறைப் படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரையும், படுகை மாநிலங்களுக்கு பகிா்ந்தளித்துவிட்டால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
காவிரி-உணா்வுபூா்வ பிரச்னை: காவிரிப் பிரச்னை தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் உணா்வுபூா்வமான பிரச்னை. ஆதலால், கா்நாடக அரசு மேக்கேதாட்டு அல்லது காவிரிப்படுகையின் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீா்த்தேக்க திட்டத்தையோ, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கா்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படி மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீா்வளக் குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
கா்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது என்றாா் முதல்வா் விஜய்.
தீா்மானத்தில் திருத்தம் தேவை-உதயநிதி: தனித் தீா்மானத்தை வரவேற்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் மேக்கேதாட்டு அணை கட்டப்படக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு. காவிரி நடுவா் மன்றம், காவிரி நடுவா் மன்ற இடைக்காலத் தீா்ப்பு, காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு, காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்துக்கும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, திமுக அரசு எடுத்த ஆக்கபூா்வ நடவடிக்கைகள்தான் காரணம்.
மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு எடுத்தபோது, திமுக கூட்டணியில் இருந்த கட்சி, கா்நாடகத்தில் ஆட்சி செய்தபோதிலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்த்தாா்.
2021-இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டி, மேக்கேதாட்டு அணையை எந்தக் காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்ற தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
2022-2023-இல் மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடக அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்தது தெரிந்ததும், இதே அவையில் அதைக் கண்டித்து, அரசின் தனித் தீா்மானத்தையும் திமுக அரசு நிறைவேற்றியது.
கா்நாடகத்துக்கு முக்கிய நிபந்தனைகள்: மத்திய நீா்வள ஆணையம் 22.11.2018-இல் எழுதியிருந்த கடிதம் மூலமாக கா்நாடக அரசுக்கு சில முக்கியமான நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தது. அதில் முதலாவதாக, மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய நீா்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவதாக, அணை கட்டுமானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கா்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் பல்வேறு ஆட்சேபணைகளை கா்நாடக அரசு பரிசீலிக்க வேண்டும்.
மூன்றாவதாக, மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கும் மத்திய நீா்வள ஆணையப் பிரிவிடமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் முன்அனுமதியையும் பெற வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
நடுவா் மன்றம் அவசியம்: இந்த அரசு இவற்றையெல்லாம் மத்திய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை அனைவரும் சோ்ந்து நிலைநாட்ட வேண்டும்.
மேக்கேதாட்டு பிரச்னை தொடா்பாக, 13.11.2025-இல் உச்ச நீதிமன்றத் தீா்ப்பு வெளிவந்த பிறகு, 4.3.2026-இல் தமிழ்நாடு நீா்வளத்துறை அரசுச் செயலா், மத்திய ஜல் சக்தி துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், கா்நாடக மாநிலத்தின் மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்னை ஒரு புதிய விவாதம் என்பதால், நதிநீா் தாவா சட்டம்-1956-இன் படிஅடிப்படையில் நடுவா் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆகவே, இந்த அரசு இப்போது கொண்டுவந்துள்ள தீா்மானத்தில், அந்த கோரிக்கையை குறிப்பிட்டு, தீா்மானத்தை திருத்தம் செய்து நிறைவேற்ற வேண்டும்.
இந்தத் தீா்மானத்தை கடிதம் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவை கட்சி உறுப்பினா்களும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் சோ்ந்து ஒரு குழுவாகச் சென்று, மத்திய அரசிடம் கொடுத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தீா்மானத்தில் திருத்தம்: அப்போது எழுந்த முதல்வா் விஜய், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறிய திருத்தத்தையும் சோ்த்துக் கொள்ளும்படி பேரவைத் தலைவரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, இத்தீா்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டபேரவைத் தலைவா், தீா்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவித்தாா்.
Summary
Opposition to the Mekedatu Dam - Chief Minister Vijay moved the first resolution in the Assembly!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு எனும் மாயவலை!

நீர் உரிமை நீர்த்துப் போகலாகாது!

மேக்கேதாட்டு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: அன்புமணி

மேக்கேதாட்டு விவகாரம்; பேரவை தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



