நெஞ்சில் மணக்கும் நினைவுகள்...

டாக்டர் மு. வரதராசன் பிறந்த திருப்பத்தூரில் 2012-ஆம் ஆண்டு மு.வ. நூற்றாண்டை ஒட்டி ஒரு விழா நடைபெற்றது.
நெஞ்சில் மணக்கும் நினைவுகள்...
Updated on
2 min read

திருப்பூர் கிருஷ்ணன்

டாக்டர் மு. வரதராசன் பிறந்த திருப்பத்தூரில் 2012-ஆம் ஆண்டு மு.வ. நூற்றாண்டை ஒட்டி ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நானும் தெ. ஞானசுந்தரமும் கலந்துகொண்டு மு.வ. பற்றிப் பேசினோம்.

அவர் மு.வ.வின் மாணவர். தன் அனுபவங்களை மையமாக வைத்து மு.வ. என்ற அப்பழுக்கற்ற மாமனிதரைக் காற்றில் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டினார். மு.வ.வுக்கு வார்த்தைகளால் நிகழ்த்திய ஓர் ஆராதனை அது.

தெள்ளத் தெளிவான சிந்தனைகள். தங்கு தடையற்ற சொற்பெருக்கு. ஆர்ப்பாட்டமில்லாத நிதானம். அவையை ஈர்க்கும் சொல்லாட்சி. அனைவரும் அவர் பேச்சாற்றலில் கட்டுண்டு கேட்டார்கள்.

ரயிலில் தெ.ஞா.வோடு திரும்பி வரும்போது, அவர் பேச்சு அற்புதம் என்று மனமாரப் பாராட்டினேன். முக்கியமாக அவருடைய அனுபவப் பதிவுகள் மிக அருமை என்றேன். அவர் நன்றி என்றார் ஒரு மெல்லிய முறுவலுடன்.

'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' என நினைக்கும் ரகம் அவர். புகழ்மொழிகளைக் கேட்டு மயங்கிக் கிளுகிளுக்கும் தன்மை அவரிடம் அறவே கிடையாது.

இன்று ஆள்வைத்துப் புகழச் சொல்வார் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்! தெ.ஞா.வின் மனமுதிர்ச்சியும் கம்பீரமும் எல்லோரிடமும் காணக் கிடைப்பதில்லை.

தெ.ஞா. வுடனும் தெ.ஞா.வின் தலைமையிலும் நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். ஒரு சங்கீதம்போல் மெல்ல மெல்லச் சுருதி சேர்த்து வாதங்களின் மூலம் தன் கருத்தை உச்சத்திற்குக் கொண்டுசென்று, பின் அந்தக் கருத்துக்குத் தானே மகுடம் சூட்டுவது போலப் பேசுவார் அவர்.

யாரும் தன் கருத்தை மறுத்துவிட முடியாதபடி, பேசப் பேசத் தன் கருத்துக்கு அரண் கட்டிக் கொண்டே போவார். அவர் பேசி முடித்தபின் 'அடடா, முடித்துவிட்டாரே' என்றிருக்கும். அவர் நிறுவிய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வோம்.

விபீஷணன் ராமபிரானை விட வயதில் மூத்தவன் என்ற கருத்தை அவர் நிறுவும் அழகே அழகு.

அவர் தலைமையில் யார் பேசினாலும் அவர்களைத் தட்டிக் கொடுப்பாரே அல்லாது தவறுகளைப் பொது மேடையில் சுட்டிக்காட்ட மாட்டார். ஆனால், இளம் பேச்சாளர்களைத் தனியே அழைத்துத் தவறுகளைச் சொல்லித் திருத்துவார்.

சில பேச்சாளர்களின் உடல்மொழி நம்மை மிரட்டும். ஏதோ அவரைப் போலப் பேசுபவர்கள் யாருமே தமிழுலகில் இல்லை என்பது போலான பாவனையும் தோரணையும் சிலரிடம் உண்டு.

மாபெரும் அறிஞரான தெ.ஞா.வோ அடக்கமே வடிவாக உரையாற்றுவார். திருத்தமான அந்த முகத்தில் சாந்தத்தைத் தவிர வேறு உணர்ச்சிகளைப் பார்க்க இயலாது.

கருத்துகளின் வலிமையினால் விளைந்த தன்னம்பிக்கை அவரிடம் நிரம்பவே இருந்ததால் எதையும் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டமாகப் பேச வேண்டிய சூழலே அவருக்கு நேர்ந்ததில்லை. திருந்திய உச்சரிப்பில் தெளிவாகப் புரியும் வகையில் பகுத்தும் தொகுத்தும் பேசும் ஆற்றல் அவருடையது.

மருத்துவர் 'நல்ல பழனிசாமி' நிறுவியுள்ள கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் அறங்காவலர்களில் ஒருவர் தெ. ஞானசுந்தரம். ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி எழுத்தாளர்களையும் தமிழறிஞர்களையும் கௌரவித்து வரும் உயர்தர அமைப்பு அது.

அந்த அமைப்பில் விருதாளர்களைத் தேர்வு செய்யும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் தெ.ஞா. அவருடன் இணைந்து நடுவர் குழுவில் ஒருவனாக நான் செயல்பட்ட காலங்களில், விருப்பு வெறுப்பின்றி தகுதியை மட்டுமே கருத்தில் கொண்டு அவர் செயல்பட்ட முறையைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

இப்படிப்பட்டவர்கள் அல்லவோ எல்லா இலக்கிய அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.

கடைசியாக நானும் அவரும் இணைந்து பகிர்ந்துகொண்ட மேடை, ரம்யா வாசுதேவன் எழுதிய 'அரங்கனோடு பொழுதுகள்' நூல் வெளியீட்டு விழா. திருவரங்கம் பற்றிய ஏராளமான செய்திகளைத் தாங்கிய அந்த நூலை முழுமையாகப் படித்துவிட்டு வந்து மனமாரப் பாராட்டிப் பேசினார் வைணவ இலக்கிய அறிஞரான தெ.ஞா.

அந்தக் கூட்டத்துக்குப் பார்வையாளராக வந்திருந்த சிவசங்கரியைப் பற்றிச் சொல்லும்போது தற்கால இலக்கிய 'மகாராணி' என அவர் குறிப்பிட்டது, சிவசங்கரிக்குத் தற்போது கிடைத்துள்ள பத்மஸ்ரீ விருதுக்கு இணையான பெருமை உடையது. பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால் பட்ட ஒரு தமிழ்ச் சான்றோரல்லவா அந்தப் பட்டத்தை வழங்கியிருக்கிறார்?

தெ.ஞா.வின் நினைவுகள், பெருமாளுக்கு ஏற்றி வைத்த ஊதுபத்தியின் நறுமணமாய், காலமெல்லாம் என் மனத்தில் மணம் வீசிக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com