அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

'பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
பட்டு
பட்டு
Updated on
3 min read

சுஜாதா மாலி

'பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம். பருத்தி, பட்டு ஆகிய இரண்டும்தான் இந்தியப் பெண்களின் உடல் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது. சுப நாள்களில் பட்டை உடுத்துவது மங்கள

கரத்தை அதிகரிக்கும். சுக்கிரனின் அருள் பெற்றது பட்டு. ஜரிகையில் உள்ள தங்கம் குருவின் ஆதிக்கம் உடையது. எனவே பட்டு உடுத்தும்போது இவர்களின் அருளுடன் நல்ல அதிர்வுகளை நம் உடலும் மனமும் இயற்கையாகவே அடைந்துவிடும். கோயில்களை வலம் வரும்போது கிடைத்திடும் தெய்வீக ஆற்றலையும் அளிக்கும்.

பட்டு அணியும்போது மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும். பட்டு வீட்டில் இருப்பதே லட்சுமி கடாட்சம்தான். பட்டுப் புடவைகளை மீண்டும் பெண்கள் உடுத்திடத் தொடங்கினாலே இந்த தொழிலானது அழிவிலிருந்து தப்பிக்கும்' என்கிறார் திருப்புவனம் கலைஞர் பட்டு மாளிகையின் உரிமையாளர் எஸ். மணி.

கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல ஊர்கள் பாரம்பரிய கைவினைத் தயாரிப்புகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. அத்தகு ஊர்களில் சிறப்புடையது திருப்புவனம். தஞ்சாவூர் பெரிய கோயில் பாணியில் நெடிதுயர்ந்த விமானத்தைக் கொண்ட கோயில். அகன்ற சந்நிதி வீதியின் இரு மருங்கிலும் அடைத்தார் போன்ற ஏராளமான பட்டு ஜவுளிக்கடைகள். திருமணப் புடவைகளை வாங்குபவர்கள் நிறைந்த இந்த வீதியில் பரபரப்புக்கு எப்பொழுதும் பஞ்சமிருக்காது.

'திருப்புவனம் பட்டுப்புடவைகளின் சிறப்புகள்' என்ன என்பது குறித்து எஸ். மணியிடம் பேசியபோது:

'திருப்புவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கத்தின் (திகோ) மூலம் பெறப்படும் பட்டுத் தயாரிப்புகள் தரத்துக்குப் பெயர் போனவை. 'திருப்புவனம் என்றாலே பட்டு... பட்டு என்றாலே, திகோ' என்கிற அளவுக்கு மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. புவிசார் குறியீடு பெற்றுள்ளதும் சிறப்பு.

பதினைந்து ஆயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான புடவைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பட்டு, ஜரிகை தரத்தில் எந்தக் குறைவும் இருக்காது.

கலைநுணுக்கமான டிசைன்களும், விசிறி மடிப்பும் திருப்புவனம் புடவைகளுக்கே உரிய தனித்துவம். 'வசந்த மாளிகை', 'கிரகமாலிகா', 'தங்கத்தாரகை', 'சண்முகப் பிரியா', 'வனசிங்காரம்', 'கோகுலவர்த்தனி', 'துளசிமகுடம்' போன்ற பிரத்யேகமான டிசைன்கள் கண்களைக் கவரும். இந்த வடிவமைப்புகள் பாரம்பரிய நிறங்களின் சேர்க்கையில் அமைந்திருப்பதே ஸ்பெஷல். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்தும் தருகிறோம்.

பட்டுநூல், ஜரிகை, டிசைன்கள் முதலியவற்றை திகோ சங்கத்திடம் பெற்றுக் கொள்கிறோம். பிறகு நெய்த சேலைகளை அவர்களே நெசவாளர்களிடமிருந்து விலை நிர்ணயம் செய்து வாங்கிக் கொள்கிறார்கள். டிசைன், ஜரிகையைப் பொறுத்து புடவையின் விலை அமையும். தர உறுதி பரிசோதித்தவுடன் வாங்கிய புடவைகளையே அவர்கள் விற்பனை செய்கிறார்கள். மற்ற நகரங்களில் உள்ள திகோ சில்க்ஸ் கிளைகளுக்கு அனுப்பியும் வைக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தறிகளை நெசவாளர்கள் அவரவர் வீடுகளிலேயே சொந்தமாக வைத்திருப்பார்கள். ஒரு தறியை அமைப்பதற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். பெட்டி, மிதிப்பலகை, ரோல், பாவு என எல்லாம் சரியாக அமையுமானால், ஒரு புடவையைப் பத்து நாள்களில் தயாரித்து விடலாம். ஒரு ரோலில் லட்சக்கணக்கான பட்டு, ஜரிகை நூல்கள் ஓடியிருக்கும்.

சாதாரணமாக ஒரு புடவை என்பது ஆறரை மீட்டர். புடவையின் நீளத்தைப் பொருத்து ஒரு ரோலில் 4 முதல் 6 புடவைகளை அறுக்க முடியும். சாதாரண புடவைகள் என்றால் ஒரு புடவைக்கு இரண்டாயிரம் ரூபாய் என்கிற வீதத்தில் கூலி கிடைக்கும். புடவையின் விலையைப் பொருத்து கூலி கூடுதல் ஆகும்.

தூய பட்டு நூல்கள் வெண்மையாக இருக்கும். தேவையான நிறத்தை அதில் ஏற்றிக் கொள்வோம். சாயம் ஏற்றுவது தனிப்பிரிவு. தேவைப்படும் நிற நூல்களை திகோவிலேயே வாங்கிக் கொள்ளலாம்.

முன்பெல்லாம் டிசைன்களுக்கான அட்டைகள் கைகளாலேயே தயாரிக்கப்பட்டன. டிசைன்களுக்கு ஏற்றார்போல அட்டைகளில் புள்ளிகளாக இடப்பட்டு இருக்கும். இதை வைத்துதான் ஜரிகை, பட்டு நூல்களால் டிசைன்கள், புட்டாக்களை உருவாக்க முடியும். இந்த அட்டைகள் தற்காலத்தில் கணினியில் வடிவமைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் வேலை எளிது. மனதில் விரும்பிய டிசைனை எளிதில் அமைத்துவிட முடியும். திருமணப் பெண், மாப்பிள்ளை உருவங்களை அமைப்பது கூட இந்த நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான். ஆயினும், செலவு கூடுதல் என்பதால் இம்முறையை எல்லோராலும் பயன்படுத்த முடிவதில்லை.

ஜரிகை விற்கும் விலையில் எளியோரால் ஒரிஜினல் பட்டுகளை வாங்குவது சற்று சிரமம்தான். இதுபோன்றவர்களுக்காக சுத்தமான பட்டில் செயற்கை ஜரிகை போட்டு நெய்த சேலைகளையும் விற்பனை செய்கிறோம். 'திகோ' மூலமாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் கடைகளில் இதுபோல் வியாபாரம் செய்வதும் உண்டு. இருந்தாலும், அசல் பட்டுப் புடவைக்கென்று உள்ள மகத்துவம் தனிதான். அதனுடைய மிருதுத்தன்மை, நேர்த்தி, வடிவமைப்பு போன்ற சிறப்புகள் கலப்பட புடவையில் நிச்சயமாக இருக்காது.

அசல் பட்டில் கசகசவென்ற டிசைன்கள், ஜரிகை வேலைகள் இடம்பெறாது. அதிகப்படியான வண்ணங்களை வாரி இறைத்திருக்க மாட்டோம்.

பழங்காலத்தில் அரச குடும்பங்களுக்கு திருப்புவனத்தில் இருந்தே பட்டு தயாரித்து அனுப்பப் பெற்று இருக்கிறது. அதனுடைய நீட்சியே இப்பகுதியில் பட்டுத் தொழில் செழித்து வளர்வதற்குக் காரணம். என்னுடைய 12 வயதிலிருந்து இந்தத் தொழிலில் இருக்கிறேன். பிறகு தனியாக கடை தொடங்கி, வியாபாரம் செய்யத் துவங்கினேன். நெசவில் நாற்பது வருடங்களுக்கு மேலான அனுபவம். ராஜராஜ சோழன் முகம், தஞ்சை பெரிய கோயில், புலிக்கொடி மற்றும் அக்காலத்திய நடன பாணிகளை டிசைன்களாக அமைத்து புடவை நெய்ததை நிறைவான சாதனை அனுபவமாகக் கருதுகிறேன்.

முன்பெல்லாம் எத்தனை புடவைகள் நெய்தாலும் திகோ எடுத்துக் கொள்ளும். தற்பொழுது பட்டுப்புடவை ஆர்வலர்கள் குறைந்து வருகிறார்கள். பெருமளவு தேக்கம் ஏற்படுவதால் நெசவாளர்களிடமிருந்து புடவைகளை வாங்குவதில் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. இதனால் பலர் இந்தத் தொழிலை விட்டுவிட்டு வெவ்வேறு ஊர்களுக்கு வேலை தேடி நகர்ந்துவிட்டார்கள். அசல் பட்டு என்பது ஸ்பரிசித்து உணரக்கூடியது. தங்கத்துக்கு நிகரானது' என்கிறார் மணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com