பாரதிராஜா - நான் சந்தித்த பிரபலங்கள் - 41

பாரதிராஜா பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
பாரதிராஜா
பாரதிராஜா
Updated on
2 min read

இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்படும் சின்னசாமி என்ற பெயர் கொண்ட பாரதிராஜாவின் குரல் காடு, கழனி என்று ஈர நிலங்களில் எல்லாம் என்றும் எதிரொலிக்கும். என் இனிய தமிழ் மக்களே என்பது தமிழ்த் திரையுலகின் திருக்குறள் எனலாம்.

1941 ஜூலை 17 இல் தேனி அருகே அல்லிநகரத்தில் பெரிய மாயத்தேவர் கருத்தம்மா தம்பதிக்குப் பெயர் சொல்லும் பிள்ளையாகப் பிறந்தார். 1974இல் சந்திரலீவாவை மணந்தார். மனோஜ், ஜனனி என்று இரண்டு செல்வங்களின் தந்தையானார்.

இவர் 1977இல் 16 வயதினிலே என்ற பரட்டைக் காவியத்தைப் படைத்தார். கோமானாக நடிக்க வேண்டிய கமலை கோவணம் கட்டிக் குதூகலிக்க வைத்தார். இவருக்கு முதல் மரியாதை தந்த காவியங்கள் ஒன்றா?, இரண்டா?... அத்தனையும் பசும்பொன். எத்தனையோ புதுக் கலைஞர்களை உளியால் செதுக்கி சிற்பங்களாக்கினார்.

6 தேசிய விருதுகள், 4 பிலிம் பேர் விருதுகள் , 6 தமிழ்நாடு விருதுகள், நந்தி விருது, சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் என்றும், எல்லாவற்றுக்கும் மேல் பெருமைக்குரிய மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.

நான் 1974இல் தேன் சிந்துதே வானம் என்ற படத்துக்கு வசனம் எழுதியபோது, இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. இதன் இயக்குநர் என் மதிப்புக்குரிய ரா.சங்கரன். இவருடன் பாரதிராஜா இருளும் ஒளியும் படத்தில் கன்னட உலகின் கவித்துவ இயக்குநர் புட்டண்ணா கனகலுடன் பணிபுரிந்தார். இந்தத் தொடர்பில் என் படத்தில் பணிபுரிந்தபோது, திரைக்கதை, வசனத்தில் திருப்தி ஏற்படாமல் கோபித்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் ஊட்டியிலிருந்து சென்னைக்குப் போய் விட்டார்.

இதன் பிறகு நானும் அவரும் ஒரே வீட்டில் கீழேயும் மாடியிலுமாக 425 ரூபாய் வாடகைக்கு இருந்தோம். இருவரும் இயக்குநராகி, தயாரிப்பாளரான நிலையில் எல்லையம்மன் காலனியில் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் இருந்தோம். அந்த 1970இல் தொலைபேசி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. என்னிடம் இருந்த தொலைபேசியில் அவருக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தேன். ஒரு போனை சுழற்றினால் இரண்டு இயக்குநர்களுடன் பேசலாம் என்று குமுதம் இதழ் எழுதியது.

அவர் குடும்பமும், அவர் தம்பி ஜெயராஜ் குடும்பமும், என் குடும்பமும் ஒற்றெழுத்தும் உயிரெழுத்துமாக வாழ்ந்தோம். என் மகள் சிறுமியாக சர்ச் பார்க்கிலும், அவர் மகன் மனோஜ் டான்பாஸ்கோவிலும் படித்தபோது, ஒருவருக்கொருவர் எங்கள் கார்களில் கொண்டு போய் விட்டு வரச் செல்லுவோம். என் வீட்டு வாசலில் என் 50 ஆண்டு கால நண்பர் இயக்குநர் மகேந்திரன் கார் நின்றால், மாடியிலிருந்து பார்த்துவிட்டு பாரதிராஜா உடனே கீழே வருவார். இருவரும் அவரது படங்களைப் பற்றி விசாரணை செய்து கொள்வார்கள்.

நான் அன்பே சங்கீதா படம் எடுத்தபோது, பெங்களூரிலிருந்து எனக்கு போன் செய்து, அவர் மகன் சிறுவன் மனோஜ் கையில் பூங்கொத்தைக் கொடுத்து, ஓட வைத்து அதைத்தான் மனோஜ் கிரியேஷன்ஸ் பேனராக வைத்துப் படங்களை எடுத்தார்.

அந்த மனோஜ் மரணத்துக்கு நான் துக்கம் விசாரிக்க மயானத்துக்குப் போனபோது, அவர் மைத்துனர் தனபால் என்னிடம் வந்து, நீங்கதானே சார் சின்னப் பிள்ளையில் ஓட விட்டு முதன் முதலாக காமிராவுல எடுத்தீங்க. இப்போ ஓரேயடியா ஓடிட்டானே! என்று சொன்னபோது, என் இதயத்தை மட்டும் வெளியே எடுத்துப் போட்டுக் காலால் மிதித்தது போல இருந்தது. என்னை மயானத்துக்கு காரில் அழைத்துச் சென்ற அவர் மாணவர் பாக்யராஜுவிடமும் , இயக்குநர் ரங்கநாதனிடமும் என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.

நான் ஊரிலில்லாதபோது இசையமைப்பாளர் இளையராஜா, பாரதிராஜா வீட்டில் சாவியைக் கொடுத்துட்டுப் போங்கள். நான் மெட்டும் பாட்டும் தயாராக வைத்திருக்கிறேன் என்று சொல்லி, நான் இல்லாமலேயே எனக்கு நல்ல பாடல்களை அமைத்துக் கொடுக்க பாலமாக எங்கள் நட்பு இருந்தது.

நான் எடுத்த நல்லது நடந்தே தீரும் என்ற படத்துக்கு வாக்குக் கொடுத்த நிதி நிறுவன உரிமையாளர், என்னுடன் இருந்த சிலர் செய்த துரோகத்தால் கையை விரித்து நட்டாற்றில் விட்ட நிலையில், பாரதிராஜா தேனியில் எனக்கு வேண்டிய வெளிப்புறப் படப்பிடிப்புக்கான வசதிகளை, பத்து நாள்களுக்கான செலவுகளைச் செய்து என்னை ஏமாற்றத்திலிருந்து மீட்டதை நான் மறக்க முடியுமா? அவர் உறவினர் சிகாமணி அந்தப் படத்தில் எடுத்துக் கொண்ட ஈடுபாடு ஒன்றா?, இரண்டா?

எந்த ரா. சங்கரனுடன் என் படத்தில் கோபப்பட்டு வந்தாரோ? அதே ரா. சங்கரனை ஏவி.எம்.மின் புதுமைப் பெண் படத்தில் ரேவதியின் அப்பாவாக அடையாளம் காட்டினார். கோபமுள்ள இடத்தில் குணமிருக்கும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு.

எத்தனையோ சாதனை செய்தவருக்கு அவர் மகன் மனோஜுக்குக் கட்டிய தாஜ் மஹால் மண்ணில் புதைந்ததிலிருந்து அவர் மனம் மரக்கட்டையானது என்பதுதான் நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாத விபரீத விதியாகிவிட்டது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com