சபர்மதி ஆசிரமத்தில் இருந்த சிறார்கள் 1930-இல் சிறையில் இருந்த மகாத்மா காந்திக்கு வாரம் ஒருமுறை கடிதங்களை எழுதுவார்கள். அவரும் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு சுருக்கமாகப் பதில்களை எழுதி அனுப்புவார். அவரின் பதில்கள் சிறார்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் விரிவான பதில்களையே எதிர்பார்த்தனர்.
'அர்ச்சுனன் விடுத்த சிறு வினாக்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அத்தியாயம் அத்தியாயமாக விடை அளித்தார். ஆனால், உங்கள் பதில்களில் சுருக்கமாக ஓரிரண்டு வார்த்தைகளே உள்ளன' என்று சிறார்கள் காந்திக்கு கடிதம் அனுப்பினர்.
இதற்கு அவர், 'என் அன்புக் குழந்தைகளே! ஸ்ரீ கிருஷ்ணனுக்கு இருந்தது ஒரேயொரு அர்ச்சுனன் மட்டும்தான். எனக்கே ஒரு கூட்டம் இருக்கிறதே! என்ன செய்வது?' என்று கூறினார்.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது, தனது வரவேற்பு அறையில் பார்வையாளர்களுக்காக ஷோபா செட், மேசை, நாற்காலிகளை 'ஸ்பென்ஸர் அன்ட் கம்பெனி'யில் இருந்து வாடகைக்கு எடுத்திருந்தார். இதற்காக, அவர் மாதம்தோறும் அறுபது ரூபாய் வாடகையை தனது ஊதியத்தில் இருந்து அனுப்பி வைப்பார். அதுபோலவே தனது காருக்கான பெட்ரோல், பழுது, ஓட்டுநர் ஊதியத்தை தானே ஏற்றுக்கொண்டார்.
('அரசியல் தலைவர்களின் சுவையான சம்பவங்கள்' என்ற நூலில் இருந்து)
-உ.இராசமாணிக்கம், கடலூர்.
ஒருமுறை மகாத்மா காந்தி பீகாரில் பயணம் செய்தபோது, அவர் பயன்படுத்தும் பென்சில் சிறியதாகிவிட்டிருந்ததால், புதிய பென்சிலை உதவியாளர் மனுபென் வைத்தார். இதையறிந்த காந்தி நள்ளிரவில் மனுவை எழுப்பி, 'எனது சிறிய பென்சிலைக் கொண்டு வா!' என்றார்.
தூக்கக் கலக்கத்தில் தேடிய மனுபென்னுக்கு அந்தச் சிறிய பென்சில் கிடைக்கவில்லை. இதையறிந்த காந்தி, 'சரி... காலையில் தேடு. இப்போது தூங்கு!' என்றார்.
விடியற்காலை மூன்றரை மணிக்கு காந்தி பிரார்த்தனை முடிந்தவுடன் மனுவிடம் பென்சிலை நினைவூட்டினார்.
அதிக நேரம் தேடி ஒருவழியாக அந்தப் பென்சிலைக் கண்டுபிடித்து எடுத்து வந்த மனுவிடம், 'கிடைத்துவிட்டதா? பத்திரமாக எடுத்துவை!' என்று காந்தி கூறியதும், மனுவும் அப்படியே செய்தார்.
தில்லி திரும்பியதும் இரு வாரங்கள் கழித்து அந்தப் பென்சிலை காந்தி கேட்டதும், மனுவும் எடுத்து வந்து அளித்தார்.
'மகளே, நீ எனது சோதனையில் தேறிவிட்டாய். நமது நாட்டின் ஏழ்மையை நீ அறிவாய். பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்தச் சிறிய பென்சில் கூட இல்லை. இதைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஒரு துண்டு பென்சில் ஒரு துண்டு தூக்கத்துக்குச் சமம்' என்றார் காந்தி.
'நான் முன்னேறினால் தொடர்ந்து வா. நான் சரணடைந்தால், என்னைச் சுட்டுவிடு. நான் இறந்தால் விட்டுச் சென்றுவிடு' என்று இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, பஞ்சாப்பைச் சேர்ந்த இளைஞர் வைத் தனது நாள்குறிப்பில் எழுதியிருந்தார்.
எழுத்தாளர் கல்கியிடம் நண்பர் ஒருவர், 'உங்கள் பெயருக்கு ஜாதகம் பார்ப்பதுதானே...' என்று கேட்டார்.
அதற்கு கல்கி, 'தம்பி... ஜாதகம் பார்க்கிற பைத்தியம் எனக்குப் பிடிக்காது. காலில் நகம் முளைத்த காலத்தில் இருந்து எத்தனையோ இடத்தில் அடிபட்டு, மிதிபட்டு கஷ்டப்பட்டு நான் ஒவ்வொரு படியாக முன்னேறியது என் சொந்த உழைப்பில்தான். ஆனால், ஜோசியரிடம் போய்க் கேட்டால் ஏதோ செவ்வாய், சுக்கிரன், சூரியன்தான் காரணம் என்று சொல்வார். இதை எப்படிச் சகித்துக் கொள்வது?' என்றார்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










