ச. நாகராஜன்
பூமியில் இரண்டு இரும்புத் தகடுகளை ஒன்றுடன் ஒன்று உரசினால் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால், விண்வெளியில் வெற்றிடத்தில் இரு தகடுகளை ஒன்றுடன் ஒன்று வைத்தால், அவை உருகி ஒரே தகடாகும். இந்த நிகழ்வுக்கு 'கோல்ட் வெல்டிங்' என்று பெயர். விண்வெளியில் விண்கலங்களைச் செலுத்தி வந்த பொறியியல் வல்லுநர்களுக்கு இது எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய சவாலாக இருந்தது. இதற்கான காரணத்தைச் சுருக்கமாகச் சொன்னால், விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை என்பதாகும்.
தகடுகளில் அணுக்களின் அணிக் கோவையானது ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தாலும், வெளிப்புறத்தைப் பார்த்து இருக்கும் பக்கத்தில் ஒட்டி இருப்பதில்லை. ஒரு வாய்ப்பு மட்டும் கிடைத்தது என்றால், அவை இன்னொரு தகட்டின் எலக்ட்ரான்களுடன் சேரத் தயார். பூமியில் ஒவ்வொரு உலோகத் தகடும் ஆக்சிஜன் படலத்தால் பூசப்பட்டிருக்கிறது. இவை ஒரு ஆக்ஸைடு அடுக்கை உருவாக்குவதால், இன்னொரு தகடுடன் சேரும்போது இவை ஒன்றாக இணைவதில்லை.
விண்வெளியிலோ ஆக்சிஜனே இல்லை. அங்குள்ள குளிர்ச்சியும் கதிரியக்கமும் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. சூரிய மண்டலத்தில் ஏற்படும் வெடிப்புகளில் கதிரியக்கமும் தகடுகளைச் சுத்தப்படுத்துகின்றன. இதை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பணிபுரியும் விஞ்ஞானியான ஜூலியா க்ரீர், 'லைவ் சயின்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விளக்கினார்.
விண்வெளியில் அனைத்து உலோகமுமே 'கோல்ட் வெல்டிங்' என்ற முறைக்குத் தயார். இரண்டு உலோகத் தகடு துண்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டுமாறு வைத்தால் அல்லது தேய்த்தால் ஆக்சைடு லேயர் இல்லாததால், ஒன்றுடன் ஒன்றான இணைப்பு உடனடியாக ஏற்பட்டு விடுகிறது. இது விண்கலங்களைத் தயாரிக்கும் பொறியியல் வல்லுநர்களை கவலையுறச் செய்தது. ஒரு கதவானது திறக்காமலே போகலாம். எந்த ஒரு பொருளும் ஒட்டிக் கொண்டு இயங்காமல் போகலாம்.
உதாரணமாக, ஓர் உலோக ஆணியை வைத்து ஒரு கதவைப் பொருத்தினால், பின்னர் அதைக் கழற்றவே முடியாது. ஆணியானது கதவுடன் ஒட்டிக் கொள்ளும்.
1991-இல் ஒரு விண்கலத்தில் ஆண்டெனா திறக்கவே இல்லை. சில உலோகங்கள் 'போக்கிரி உலோகங்களாக' இருக்கின்றன. தங்கமும் பிளாட்டினமும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும். அவற்றில் ஆக்சைட் லேயர் பூமியில் கூட இல்லை. ஆகவே இவற்றுக்கு 'கோல்ட் வெல்டிங்' என்ற நிகழ்வே சாத்தியமில்லாததாகும். ஆனால், இவை மிகவும் மிருதுவானவை என்பதால், வெல்டிங் இல்லாமலேயே ஒன்றுடன் ஒன்று சேர்ந்துவிடக்கூடியவை.
இந்த கோல்ட் வெல்டிங்கை -விண்வெளி ஒட்டுதலைத் தவிர்க்க விஞ்ஞானிகள் சில உத்திகளைக் கண்டுபிடித்தனர். 'அனொடைஸிங்' எனும் வழிமுறையில் ஆக்சைட் படலத்தை முடக்கிவிடலாம். இன்னொரு முறையான உராய்வை நீக்கும் மசகு பொருள்களை உலோகத் தகடுகள் மீது பூசி விடுவதாகும். மாலிப்டெனம் டிசுல்ஃபைட் போன்ற லூப்ரிகண்ட் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இன்னொரு முறையாக ஒரே உலோகங்களைச் சேர்க்காமல் வெவ்வேறு உலோகங்களைச் சேர்ப்பதாகும். அதாவது தங்கத்தை மாலிப்டெனம் வகையுடன் சேர்ப்பது. இதனால் அணு அமைப்பானது வேறுபடுவதால் இவை ஒட்டிக் கொள்ளாது.
விண்கலத்தை ஏவும் முன்னர் அதிர்வால் ஏற்படும் பாதிப்புகளையும் சோதித்து சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தாலும் சில சமயம் உலோகம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கிறது.
விண்கலத்தை விண்வெளியில் ஏவிப் பறக்க விடுவது என்றால், எவ்வளவு சிரமம் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








