பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மணிமுடியை மறுதலித்த மாமனிதர்!

பெருந்தலைவர் காமராசர் மறைந்து 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:00 am IST

பெருந்தலைவர் காமராசர் மறைந்து 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரசு தொண்டர்களுக்குத் தலைமை ஏற்றுத் தியாகம், துன்பம், தொண்டு ஆகிய தாரக மந்திரங்களைப் போதித்து அவர்களுடனேயே சிறை புகுந்து 9 ஆண்டு காலம் வெஞ்சிறைகளில் வாடினார்.

நாடு விடுதலை பெற்ற பிறகு அவர் ஒருபோதும் அரசு பதவிகளை நாடிச் சென்றதில்லை. அவரால் கைகாட்டப்பட்டவர்கள்தான் முதல்வர்களாக, அமைச்சர்களாகப் பதவிகளில் வீற்றிருந்தார்கள். ஆனால், 1954-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த இராஜாஜி பதவி விலகியபோது, பெரியார் ஈ.வெ.ரா., சேலம் வரதராசுலு நாயுடு ஆகிய மூத்த தலைவர்களின் வற்புறுத்தலுக்கும், பெரும்பாலான சட்டப்பேரவை காங்கிரசு கட்சி உறுப்பினர்களுக்கும் இணங்க முதல்வர் பொறுப்பினை காமராசர் மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்.

எளிமை, நேர்மை, தூய்மை, திறமை ஆகிய நற்பண்புகள் நிறைந்த நல்லாட்சியைத் தமிழ்நாட்டுக்கு அளித்தார் என்பதும், அது பொற்கால ஆட்சியாகப் போற்றப்பட்டது என்பதும் மறைக்க முடியாத வரலாறாகும்.

அவரது ஆட்சியில் கல்வி, தொழில், வேளாண்மை, மின் உற்பத்தி ஆகிய துறைகளில் ஏற்பட்ட சாதனைகள் இன்றுவரை எந்த ஆட்சியாளராலும் விஞ்சப்படவில்லை. இவ்வளவுக்கும் அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, தமிழக அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் மொத்தத் தொகை ரூ. 47.18 கோடி மட்டுமே.

அவர் பதவி விலகிய போது வரவு- செலவுத் திட்டத்தின் மொத்தத் தொகை ரூ. 121.81கோடி மட்டுமே. இந்தச் சிறிய தொகையைக் கொண்டுதான் தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்திலும் அணைகளைக் கட்டினார். பள்ளிகள் இல்லாத கிராமம் இல்லை எனத் தமிழகத்தில் உள்ள கிராமங்கள் அனைத்திலும் பள்ளிகளைத் திறந்தார். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவளிக்கும் திட்டத்தைச் செயற்படுத்தினார். ஆனால், இப்போது தமிழக அரசின் மொத்த வரவு-செலவுத் திட்டம் ரூ. 4 இலட்சம் கோடிகளுக்கு மேலாகும். ஆனாலும், காமராசரின் சாதனையை விஞ்சமுடியவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நாடு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்ற வாக்குறுதியை மகாத்மா காந்தி காங்கிரசுக் கட்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு அளித்தார். அதற்கு முதற் படியாக நாடெங்கும் உள்ள மாநில காங்கிரசுக் குழுக்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட்டன. ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய காங்கிரசுக் குழுக்கள் மொழிவழியாகப் பிரித்தமைக்கப்பட்டன.

ஆனால், இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் உருவானதையொட்டி நாடெங்கும் மதக் கலவரங்களும் இலட்சக்கணக்கான அகதிகள் இருபுறமும் வெளியேறியதும், சுதேச சமஸ்தானங்கள் சில இந்தியாவுடன் இணைவதற்கு மறுத்து சுதந்திரக் கொடியை உயர்த்தியதும், இவ்வாறாக நாட்டின் ஒருமைப்பாட்டையே சீர்குலைக்கும் போக்கைக் கண்டு அஞ்சிய மத்திய அரசு மொழிவழியாக நாட்டைப் பிரிப்பதையே ஒத்தி வைத்தது. இதன் விளைவாக மொழிவழி மாநில அமைப்புக்கான போராட்டங்கள் இந்தியா நெடுகிலும் வெடித்தன.

இதற்கு மாற்றாக பிரதமர் பண்டித நேரு திட்டம் ஒன்றை உருவாக்கினார். இரண்டு மூன்று மாநிலங்களை இணைத்து இந்தியாவை 5 மண்டலங்களாக்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். எடுத்துக்காட்டாக, தெற்கே தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்ற பெயரில் ஒரே மாநிலமாக்கலாம் என்பதே அத்திட்டமாகும். இதற்காக இம்மூன்று மாநிலங்களின் முதலமைச்சர்கள் பெங்களூரில் நேருவின் தலைமையில் கூடினர்.

கர்நாடகம், கேரளம் ஆகிய இரு மாநில முதல்வர்களும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டதுடன், உருவாகவிருக்கும் தட்சிணப் பிரதேசத்தின் முதல்வராக காமராசரை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தனர். ஆனால், இந்த வலையில் காமராசர் சிக்கவில்லை. மிக உறுதியாகத் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்த்ததுடன், மொழிவழியாக மாநிலங்களை உருவாக்கியே ஆக வேண்டுமென வலியுறுத்தினார்.

மாநில காங்கிரசு முதல்வர்களில் காமராசரே நேருவால் மிகவும் மதிக்கப்பட்டார். அவரே தனது திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, நேருவுக்கு வேறு வழியில்லை. தட்சிணப் பிரதேசத் திட்டத்தையும், பிற ஐந்து மண்டலங்களாக்கும் திட்டத்தையும் நேரு கைவிட்டார்.

காமராசர் உறுதியாக நின்று அன்று தட்சிணப் பிரதேசத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இல்லையேல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கும் கோரிக்கை குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். இந்தியா இன்று மொழிவழியாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களாக அமைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் காமராசரே.

1965-ஆம் ஆண்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். அப்போது தலைவர் காமராசர் பின்வரும் திட்டத்தை அறிவித்தார்:-

ஆங்கிலம் அகற்றப்படும் இடங்களிலெல்லாம் மாநில மொழிகள் விரைவில் அமர்த்தப்படவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளும் வளம்பெறச் செய்யும் திட்டம் ஒன்றினை மத்திய அரசு வகுத்து செயல்படுத்தவேண்டும். மத்திய அரசு தேர்வுகளை அவரவர்கள் தாய்மொழியில் எழுதுவதற்கு ஏற்ப அனைத்துத் தேசிய மொழிகளையும் மத்திய அரசு தேர்வு மொழிகளாக ஆக்கவேண்டும் என்று காமராசர் கூறிய யோசனைகளைக் காங்கிரசு செயற்குழு ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

இத்தீர்மானம் மூலம் ஹிந்திக்குச் சமமான தகுதி பிற மாநில மொழிகளுக்கும் கிடைத்தது. ஹிந்தி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் மொழிப் பிரச்சனைக்குக் காமராசர் தீர்வு கண்ட விதத்தை அனைவருமே பாராட்டினார்கள். பின்னர், இந்த தீர்மானத்துக்கு சட்ட வடிவம் அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் மத்திய அரசு பணிக்கான தேர்வுகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.

Story image

1964-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தாமாகவே முன்வந்து முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப் பணியில் ஈடுபட காமராசர் முன்வந்தபோது, பிரதமர் நேரு முதல் நாட்டு மக்கள் அனைவரும் வியந்து போற்றினர். காமராசர் காட்டிய வழியில் மேலும் பல முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் பதவிகளைத் துறந்தார்கள்.

காமராசரின் தொண்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே தேவை என்பதை அனைவரும் உணர்ந்தனர். அதன் விளைவாக புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார். பத்திரமான கரங்களில் நாட்டை ஒப்படைத்துவிட்டோம் என்ற மனநிறைவுடன் சில மாதங்களில் நேரு பெருமகனும் மறைந்தார். இமயம் போன்ற தலைவர் நேருவின் மறைவுக்குப் பிறகு அவருக்குப் பின் யார்? என்ற உரிமைப் போரில் இந்தியா சிதறுண்டுப் போகும்; சனநாயகம் சீரழியும்; சர்வாதிகாரம் தலைதூக்கும் எனப் பலர் ஆரூடம் கூறியதுண்டு. நாடு ஒரு மாபெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நின்றது.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக ஜவாஹர்லால் நேருவை மகாத்மா காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். நேருவைவிட வயதாலும் அனுபவத்தாலும் மூத்த தலைவர்களான வல்லபாய் படேல், இராசேந்திர பிரசாத், மெளலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரைவிட, வயதில் இளையவரான நேருவை மகாத்மா காந்தி தேர்ந்தெடுத்தார். சுதந்திர இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்பவர் குறைந்தது 15 ஆண்டுகளாவது அப்பதவியில் இருந்தாலொழிய நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது என மகாத்மா காந்தி கருதியதே இதற்குக் காரணம். அவரின் இந்த முடிவை மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், நாடு விடுதலைப் பெற்ற ஓராண்டுக் காலத்திலேயே மகாத்மா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் தேசமும், காங்கிரசுக் கட்சியும் பண்டித நேருவையே மிகப் பெருந்தலைவராகக் கருதினார்கள். பதவியேற்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு மறைந்தபோது அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு காந்திய சீடரான காமராசர் மீது சுமத்தப்பட்டது.

நேருவுக்குப் பிறகு, அடுத்த இரு பிரதமர்களை காலா காந்தியான காமராசர் தேர்ந்தெடுத்தார். இதைக் கண்டு உலகம் வியந்தது. நேருவின் மறைவுக்குப் பின்னர் நாட்டையும் காங்கிரசையும் காப்பாற்றும் திறன் தனக்கு உண்டு என்பதை காமராசர் நிரூபித்துக் காட்டினார்.

இன்னும் சரியாகச் சொல்லப் போனால், உலகத்தின் மிகப் பெரிய சனநாயக நாடான இந்தியாவில் சனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமை காமராசரை மட்டுமே சாரும். நேருவின் மறைவுக்குப் பின்னர் தங்களின் எதிர்காலத்தைச் சனநாயக ரீதியில் முடிவு செய்யும் தகுதி இந்திய மக்களுக்கு உண்டு என்பதைக் காமராசர் தன் செயலின் மூலம் உணர்த்தினார்.

எதிர்பாராத வகையில் மற்றொரு சோதனையைக் காமராசர் ஏற்கவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. பிரதமர் பொறுப்பை ஏற்ற லால்பகதூர், சிறிது காலத்தில் திடீரென மரணம் அடைந்தபோது, இந்திய அரசியலில் புதிய சிக்கல் உருவாயிற்று. தில்லியில் பலரும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தபோது, பெரும் குழப்பம் உருவாகிவிட்டது. இடைக்கால பிரதமர் பதவி வகித்த குல்சாரிலால் நந்தா, தன்னையே பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். தனக்கு ஆதரவாக இந்திரா காந்தியின் ஒப்புதலையும் பெற்றிருந்தார்.

மொரார்ஜி தேசாயோ சென்ற தடவைபோல கருத்தறியும் முறை இந்த தடவை கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தித்தான் முடிவு காண வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இவர்களைத் தவிர, ஒய்.பி. சவான், ஜெகஜீவன்ராம், சஞ்சீவி ரெட்டி ஆகியோர் பெயர்களும் அடிபட தொடங்கின. பலரும் போட்டியிடும் சூழ்நிலை உருவாகிவிட்ட காரணத்தால், வங்கத் தலைவரான அதுல்யா கோஷ், காங்கிரசுத் தலைவரான காமராசரே பிரதமராக வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். இந்த அறிவிப்பு போட்டியிடும் வேட்பாளர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கிற்று.

காமராசர் பிரதமராக ஒப்புக்கொண்டால், தான் போட்டியிலிருந்து விலகத் தயார் என்று முதலில் மொரார்ஜி தேசாய் அறிவித்தார். அதைப்போலவே நந்தாவும் மற்றவர்களும் பகிரங்கமாக அறிவித்தார்கள். இதற்கிடையில் பிரதமர் போட்டியில் ஜெகசீவன்ராம் குதித்தார். அதற்குப் பிறகு, காங்கிரசு முதல்வர்கள் ஒன்றுகூடி பேசி பிரதமராக காமராசர் ஒப்புக்கொண்டால், அவரை ஆதரிப்பது என முடிவு செய்தார்கள்.

Story image

அதன்பிறகு, ராஜஸ்தான் முதல்வர் சுகாதியா, மத்திய பிரதேச முதல்வர் டி.பி. மிஸ்ரா, மகாராஷ்டிர முதல்வர் வி.பி. நாயக், பிகார் முதல்வர் கே.பி. சகாய் ஆகிய நால்வரும் தலைவர் காமராசரைச் சந்தித்து பிரதமருக்கான போட்டியைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரே வழிதான் உண்டு. நீங்கள் பிரதமராக சம்மதித்தால் அனைவரும் போட்டியிலிருந்து விலகுவார்கள். எனவே, அந்தப் பதவியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பெரும்பாலான காங்கிரசுக்காரர்களின் விருப்பம் அதுவே என்பதை அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

இந்த நான்கு பேரும் மூத்த முதலமைச்சர்கள் நேருவிடமே பெரும் செல்வாக்குப் பெற்றவர்கள். ஆனாலும், அதற்குக் காமராசர் மசியவில்லை. பிரதமர் பதவி மீது விருப்பமோ ஊசலாட்டமோ ஏற்படவில்லை. அவர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டார்.

அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. காங்கிரசு கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் காமராசரே பிரதமராக வேண்டும் என்று விரும்பினார்கள் என்று கூறியது.

அன்றைய தினமே செயற்குழு கூடியது. பிரதமரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் செய்வதற்கான அனைத்து அதிகாரத்தையும் செயற்குழு அவரிடம் ஒப்படைத்தது.

காமராசர் அன்று நினைத்திருந்தால், நாட்டின் பிரதமராக முடிசூட்டிக் கொண்டிருக்க முடியும். இந்த நிகழ்ச்சி குறித்து பிளிட்ஸ் பத்திரிகையின் தில்லி செய்தியாளர் ஏ. இராகவன் பின்வருமாறு எழுதினார்:-

Story image

நேருவுக்குப் பிந்திய காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய பதவியை அடைவதிலிருந்து அன்று காமராசரை எந்தச் சக்தியும் தடுத்திருக்க முடியாது. தில்லி அரசியல் களத்தில் அவர் மாபெரும் மனிதராக உலா வந்தார். அந்தத் கொந்தளிப்பு மிகுந்த நாட்களையும் எனது குறிப்பு புத்தகத்தின் ஏடுகளையும் புரட்டி அன்றிரவு அவரோடு நடத்திய உரையாடலை எண்ணிப் பார்க்கிறேன். சிறந்த காந்திய நெறியாளராகப் பற்றற்ற நிலையில் அவர் மேற்கொண்ட முடிவுகள் மற்றவரிடமிருந்து அவரை தனிமைப்படுத்திக்காட்டுகின்றன. அதனால்தான் பலகோடி மக்களின் அன்பைப் பெற்ற உன்னதமான மனிதராக அவர் இன்றளவும் காட்சி தந்து வருகிறார்.

தலைவர் காமராசரின் காலடியில் மணிமகுடம் வைக்கப்பட்டது. ஆனால், அவர் அதை எடுத்துச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. தேசமெங்கும் உள்ள காங்கிரசுத் தலைவர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட காமராசர் பிரதமராவதற்கு ஆதரவுத் தெரிவித்தார்கள். அவர் விரும்பியிருப்பாரேயானால் அப்படி ஆகியிருக்க முடியும். ஒரு தமிழன் இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்க முடியும்.

காமராசர் அந்தப் பதவியை ஒப்புக்கொண்டிருந்தால், குல்சாரிலால் நந்தா, மொரார்ஜி, ஒய்.பி. சவான், ஜெகஜீவன்ராம், சஞ்சீவி ரெட்டி, இந்திரா காந்தி போன்றவர்கள் அவர் தலைமையில் பணிபுரியக் காத்திருந்தார்கள். பிரதமர் பதவி அவர் காலடியில் வைக்கப்பட்ட போதுகூட அதை உதறித் தள்ளிய தியாக மூர்த்தியாக அவர் திகழ்ந்தார்.

ஜூலை -15: காமராஜர் பிறந்த நாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.