வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனநலப் பிரச்னைதீர...

எனக்கு மூன்று அண்ணன்கள் உள்ளனர். மூத்தவர் வங்கி வேலை. நன்றாக செட்டில் ஆகிவிட்டார். இரண்டாவது அண்ணனுக்கு வயது 47.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:07 am IST

எனக்கு மூன்று அண்ணன்கள் உள்ளனர். மூத்தவர் வங்கி வேலை. நன்றாக செட்டில் ஆகிவிட்டார். இரண்டாவது அண்ணனுக்கு வயது 47. திருமணமாகவில்லை. படிப்பறிவு முற்றிலும் இல்லை. சற்று சித்த சுவாதீனம் இல்லாதவர். சரியான உம்மணாம்மூஞ்சி. ஒரே கடுகடுப்பு. சில நேரங்களில் பேயறைந்த மாதிரி ஒரு பாழுங்களையோடு பிரமைப் பிடித்த மாதிரி ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பார். வீட்டில் நிம்மதியே இல்லை. இவரைக் குணப்படுத்த முடியுமா?

- சுபலட்சுமி, கரூர்.

குடும்பத்தில் சிலர் திடீரெனக் கோபப்படுவது, யாருடனும் பேசாமல் தனியாக அமர்ந்திருப்பது, முகத்தில் சோகம் அல்லது வெறுமை தோற்றம் காணப்படுவது போன்ற மனநிலை மாற்றங்களை வெளிப்படுத்தலாம்.

பொதுமக்கள் இதைப் பேய் பிடித்தது, சூனியம், சித்தப்பிரமை, பைத்தியம் போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், ஆயுர்வேதமும் நவீன மருத்துவமும் இதனை மனநலப் பிரச்னையாகவே பார்க்கின்றன. இது போன்ற நிலைக்குச் சரியான பராமரிப்பு, அன்பு, மருத்துவ ஆலோசனை, நீண்ட கால கவனிப்பு மிகவும் அவசியம்.

வைமனஸ்யம், மனோ விகாரம் என்ற பரப்புக்குள் வரக்கூடிய மனநலக் குறைபாடுள்ள ஒருவரை, கீழ்க்கண்ட அறிகுறிகளால் அறியலாம்.

திடீர் கோபம், காரணமின்றிச் சண்டை போடுதல், தனியாக அமர்ந்திருப்பது, யாருடன் பேச விரும்பாமை, முகத்தில் சோகம் அல்லது வெறுமை, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம், சந்தேக மனப்பான்மை, வேலை செய்ய விருப்பமின்மை, சுத்தமின்மை, உணவுப் பழக்க மாற்றம், சிரித்துக் கொண்டே பேசுதல் அல்லது தனக்குத்தானே பேசுதல். ஆயுர்வேதத்தில் மன நோய்கள் உன்மாதம் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இது ஏற்படுவதற்கான காரணங்கள்: அதிக கவலை, பயம், மன உளைச்சல், ஏமாற்றம், தனிமை, தூக்கமின்மை, தவறான உணவு முறை, மது, போதைப் பழக்கம், உடல் சக்திக் குறைவு, குடும்ப அன்பின்மை. இவை உடல் தோஷங்களாகிய வாத-பித்த- கபங்களையும், மனோ தோஷங்களாகிய ரஜஸ்-தமஸையும் பாதித்து, மனநிலையை மாற்றுகின்றன.

ஆயுர்வேதத்தில் மன நோய்களுக்கு சத்துவாவஜய சிகிச்சை (மனநிலை மேம்பாட்டு முறை) கையாளப்படுகிறது. இதில் நல்ல பேச்சு, மன அமைதி, குடும்ப ஆதரவு, பக்தி, தியானம், யோகா முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மருந்து சிகிச்சைகள்: பிசு, பொதிச்சல், அப்யங்கம், விரேசனம், க்ருதபானம் போன்றவை.

பிசு என்றால் தலையில் மூலிகைத் தைலங்களாகிய பிருங்காமலக தைலம் அல்லது பிரம்மீ தைலம் போன்றவற்றில் ஒன்றைப் பஞ்சில் முக்கி, தலையில் போட்டு ஊற விடுதல் முறையாகும்.

பொதிச்சல் என்றால் முதலில் தலை மேல் இந்தத் தைலங்களில் ஒன்றைத் தடவி, பழைய நெல்லிமுள்ளியை விதைகளை நீக்கிவிட்டு, வடிகஞ்சியில் வேகவைத்து அரைத்து, தலை முழுவதும் அப்பி விடுவது. அரை அல்லது ஒரு அங்குல கனத்துக்குத் தடவிவிட வேண்டும். அப்பிய உடனே ஒரு துளிரான வாழையிலையால் மூடி, நெற்றியின் பரிவட்டத்தின் மேல் துணியால் பொருத்திக் கட்டிவிடவேண்டும்.

தலையின் உச்சிக்கு நேராக வாழையிலையை நறுக்கி, காலணா அளவில் இடையுண்டாக்கி, அங்குள்ள நெல்லிக்காய் பற்றில் ஒரு விரலளவில் குழித்து அதில் ஒன்றிரண்டு ஸ்பூன் இந்தத் தைலத்தை ஊற்றி வைக்க வேண்டும்.

தைலம் குறைய குறைய ஸ்பூன் அளவில் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். முதல் நாள் கால் மணி நேரம் வைத்திருந்து, தினமும் அதிகமாக்கி நான்காவது நாள் ஒரு மணி நேரம் இந்தப் பொதிச்சலை தலையில் வைத்திருக்க வேண்டும். மறுபடி குறைத்து குறைத்து ஏழாவது நாள் கால் மணி நேரம் மட்டும் வைத்திருந்து நீக்கிவிட வேண்டும்.

அப்யங்கம்: தலைக்கு எட்டாம் நாள் தைலத்தை மட்டும் தடவி, ஊறவைத்து தலைக்குக் குளிக்க வேண்டும்.

விரேசனம்: சுக்கு கஷாயத்தில் ஆமணக்கின் எண்ணெய் கலந்து பேதிக்குச் சாப்பிடுதல். குடல் நன்றாகச் சுத்தமாகும்.

க்ருதபானம்: ஜீரண சக்திக்குத் தகுந்தபடி பஞ்சகவ்ய கிருதம் எனும் மூலிகை நெய் மருந்தைச் சாப்பிடுதல் அல்லது குடித்தல். மூன்று வாரங்களுக்குப் பிறகு பிராம்ஹீகிருதம் சாப்பிடுதல்.

இவை அனைத்தையும் செய்வதற்கு நோயாளியின் முழு ஒத்துழைப்பும், அவரது குடும்பத்தாரின் அன்பு, பொறுமை, ஆதரவு, பராமரிப்பும் தேவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.