'பாகுபலி' திரைப்படத்தை ரசிகர்களால் மறக்க முடியாது. இந்தப் பெயரைத் தாங்கி, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள 'சட்னி மாமி' என்ற உணவகத்தில் தயாராகும் பிரம்மாண்டமான 'பாகுபலி தோசை'யோ உணவுப் பிரியர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஓராண்டில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பாகுபலி தோசைகளைத் தயாரித்திருக்கிறார் 'சட்னி மாமி' உணவகத்தின் தலைமை சமையல் கலைஞர் சூரஜ்.
அவரிடம் பேசியபோது:
'திருவனந்தபுரத்தில் நல்ல சைவ உணவகம் ஒன்று நடத்த வேண்டும் என்று உணவக உரிமையாளர்கள் மகேஷ், மணீஷ் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக யோசித்துவந்தனர். அது கடந்த ஆண்டில் நனவானது. புதுமையாகவும், சுத்த சைவ உணவகம் என்பதை எடுத்துக் கூறவும் அவர்கள் வைத்ததே 'சட்னி மாமி' என்ற பெயராகும். இயற்கையோடு இணைந்த சுற்றுச் சூழலைக் கொண்டிருக்கும் இந்த உணவகத்தில் வழக்கமான உணவு வகைகள் கிடைக்கும்.
பாகுபலி தோசை:
பிரத்யேகமான வகையான பாகுபலி தோசையை 2025 மே மாதத்தில் அறிமுகப்படுத்தினோம். விளம்பரம் செய்யவில்லை என்றாலும், அந்தத் தோசையை சாப்பிட்ட வாடிக்கையாளர்களே விளம்பரத் தூதுவர்களாகிவிட்டனர். நெய் ரோஸ்ட்டின் பிரம்மாண்டமான வடிவம்தான் பாகுபலி தோசை. சாதாரண நெய் ரோஸ்ட்டுக்குத் தேவையானதைப் போல நான்கு மடங்கு தோசை மாவு பாகுபலி தோசை தயாரிப்பதற்குத் தேவை.
நான்கு அடி நீளமும், ஒன்றரை அடி அகலத்திலும் இருக்கும் இந்தத் தோசை தயாரிக்க சுமார் 15 நிமிடங்களாகும். தொட்டுக் கொள்ள நான்கைந்து விதமான சட்னி, சாம்பார் தரப்படும். பெரிய தோசை என்பதால் ஒவ்வொரு சட்னி, சாம்பாரும் தலா இரு கிண்ணங்கள் வீதம் மொத்தம் 12 கிண்ணங்களில் வழங்கப்படும். இந்தத் தோசையை மேஜையின் மீது வைத்து, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.
பாகுபலி தோசை தயாரிப்பதற்கென்றே உணவகத்தில் பெரியதாக இரண்டு தோசைக் கல் இருக்கிறது. ஒரு தோசைக்கல்லில் ஒரே சமயத்தில் இரண்டு பாகுபலி தோசைகள் தயாரிக்கிறோம். தினமும் மாலையில் தொடங்கி இரவு வரை பாகுபலி தோசை கிடைக்கும் என்றாலும், வார இறுதி நாள்களில் ஏராளமானவர்கள் வந்து அதனை விரும்பிச்சாப்பிடுகிறார்கள்.
சராசரியாக ஒரு மாதத்துக்கு ஆயிரம் பாகுபலி தோசைகள் நாங்கள் தயாரிக்கிறோம். கடந்த இரு ஆண்டுகளில் நாங்கள் விற்ற பாகுபலி தோசைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒரே நாளில் 120 பாகுபலி தோசைகள் தயாரித்தது சாதனை என்றும் சொல்லலாம். ஒன்றின் விலை ரூ.690.
பீமன் தோசை:
பாகுபலி தோசைக்கு முன்னர் நாங்கள் அறிமுகப்படுத்தியதுதான் நான்கு அடி நீள பீமன் தோசை. மைசூரு மசாலா தோசையின் பிரம்மாண்டமான வடிவம். அதில் முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ், மசாலா தடவி, மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.850'' என்கிறார் சூரஜ்.
'சட்னி மாமி' உணவக மேலாளர் ஜயன்: பாகுபலி, பீமன் தோசைகள் சமையலறைகளில் தயாராகி, எடுத்து வருவதில் தொடங்கி, மேஜையில் கொண்டு வந்து வைப்பது, அதைக் கண்டு மொத்த குடும்பமும் கண்கள் அகல ஆச்சரியப்படுவது, பின்னர் அதனை உண்பது என எல்லாவற்றையும் கைப்பேசியில் தவறாமல் படம்பிடித்து, தங்கள் உறவினர்களோடும், சமூக ஊடகங்களிலும் பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். தோசையைக் கொண்டுவரும்போது, 'பாகுபலி' பாடல் இசையும் ஒலிக்கச் செய்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






