பொ.ஜெயச்சந்திரன்
'யோகாவில் இதுவரை 101 சாதனைகள் செய்துள்ளேன். இவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதனைகள் கண்ணைக் கட்டிக் கொண்டு செய்தவைகள். தண்ணீர் ஆசனம், குட்டிக்கரணம், நீருக்கடியில் மூச்சை அடக்கி ஆசனங்களைச் செய்வேன். விளையாட்டு, கீ போர்டு வாசித்தல் எனது பொழுதுபோக்கு.
திருக்குறள், பெளதிகம், கணிதம் முதலியவற்றின் பார்முலாக்களை எழுதுவேன். இரு கைகளிலும் எழுதும் திறன் உண்டு. அடுத்தவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை உணர்தல், கண்களால் பார்த்து உடலில் உள்ள நோய்களைக் கண்டறிதல் போன்ற திறமைகளை யோகா-தியானம் வாயிலாகப் பெற்றுள்ளேன்' என்கிறார் பிளஸ் 2 மாணவி கா.பிரிஷா.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன்-வழக்குரைஞர் தேவிப்பிரியாவின் மகளான பிரிஷா, கே.டி.சி. நகரில் உள்ள மீனா சங்கர் வித்யாலயாவில் பிளஸ் 2 அறிவியல் பாடத்தை ஆங்கில வழியில் படித்து வருகிறார்.
இளம்வயதிலேயே சாதனைகள் படைத்தது குறித்து பிரிஷாவிடம் பேசியபோது:
'என்னைப் போலவே மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளிகள், பார்வையற்றோர் பள்ளிகள், முதியோர் இல்லங்கள், காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று 8 ஆண்டுகளாக இலவசமாக யோகா பயிற்சி அளிக்கிறேன். மாற்றுத்திறனாளி மாணவர் கணேஷ் குமார் என்பவர் உலகச் சாதனை படைக்கத் தூண்டுகோலாக இருந்துள்ளேன். துபை நாட்டில் 2025-ஆம் ஆண்டு மே 12 முதல் 22 வரை 10 நாள்கள் யோகா பயிற்சி வகுப்பு நடத்தி இருக்கிறேன்.
வாழ்க்கை முறை மாற்றம்
எனது பெற்றோர், பாட்டி ரவிசந்திரிகா உள்ளிட்டோரின் அறிவுரையின்படி, 'யோகா இன்றே செய்வோம் இன்பம் பெறுவோம்' என்ற தலைப்பில் நூலை எழுதியிருக்கிறேன்.
இந்த நூலில் யோகா பயிற்சியின் மருத்துவக் குறிப்புகளும் உள்ளன. 'பச்சி மோத்தாசனம்' செய்தால் சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்னை, இடுப்பு வலி, மூல நோய்கள் தீரும்.
'ஹலாசனம்' வயிற்றுப் பகுதிகள் அழுத்தப்படுவதால், உள்ளுறுப்புகள் ஊக்கம் பெறும். 'சர்வாங்காசனம்' தலைப்பகுதிக்கு அதிக ரத்தம் பாய்தல், ஞாபகச் சக்தியை அதிகரித்தல், மன ஒருமைப்பாடு, தைராய்டு சுரப்பி சீராக இயங்குதல் உள்ளிட்டவை தீரும்.
இன்றைய காலகட்டத்தில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, அதிக கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்டவற்றால் பலர் இறக்க நேரிடுகிறது. அதனால் நோயின் சிக்கல்களையும், இறப்புகளையும் தவிர்த்து, வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்த இந்த நூல் உதவும்.
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகமும், நேரு யுவகேந்திராவும் திருநெல்வேலியில் நடத்திய யோகா போட்டியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றது வாழ்க்கையில் மறக்க முடியாததாகும். போட்டித் தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையில் உள்ள புத்தகங்களில் என்னைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளேன். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 'குழந்தை மேதை-2025' என்ற விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, விசா கிடைக்காததால் விருதைப் பெற முடியவில்லை.
2018-ஆம் ஆண்டில் அனைத்து இந்திய யோகா மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் ஆறுபடை வீடு நிறுவனத்தில் நடைபெற்ற தேசிய சாம்பியன் ஷிப் போட்டியில் 'யோகா ராணி' , 2022-இல் துபை நாட்டில் 'குழந்தை மேதை' விருது, உலகில் இளம் வயதில் 'யோகா ஆச்சார்யா' , 'யோகாஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்' என்கிறார் கா.பிரிஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








