மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

புதிய மலை!

உலகின் பெரிய மலைத் தொடரான இமயமலைத் தொடருக்குப் போட்டியாக மிக உயரமான மலை உலகில் தோன்றப் போகிறது.

News image
Updated On :28 மார்ச் 2026, 10:38 pm

பிஸ்மி பரிணாமன்

உலகின் பெரிய மலைத் தொடரான இமயமலைத் தொடருக்குப் போட்டியாக மிக உயரமான மலை உலகில் தோன்றப் போகிறது. இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில், ஆப்பிரிக்க கண்டத்தில் விரிவடைந்துவரும் பிளவு இந்தியாவுடன் இணைந்து இமயமலையைவிட உயரமான மலைகளை உருவாக்கக் கூடும் என்று நிலவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

எதிர்காலத்தில் நில அடுக்குகள் மோதலின் விளைவாக இந்தப் புதிய மலை தோன்றும். புதிய மலை உருவாக்கத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. அதன் 'உச்சகட்டம்' இன்னும் 20 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிகழ இருந்தாலும், அது இறுதியில் கடற்கரைகளை மாற்றி அமைத்து, உலகளாவிய காலநிலைகளையும் மாற்றியமைக்கும்.

கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும், பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு உருவாகிவருகிறது. இங்குதான் ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாகப் பிரிந்து, எதிர்கால நிலத் தட்டுகளின் மோதலைத் தொடங்கி வைக்கப் போகிறது. இந்த நிலப் பிளவின் அமைப்பு காலப் போக்கில் எவ்வாறு உருவாகக் கூடும் என்பதைக் கண்டறிந்துள்ளார் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டூவே ஜே. ஜே. வான் ஹின்ஸ்பெர்கன். ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலம் பிரிவது எதிர்காலத்தில் எவ்வாறு ஒரு மாபெரும் புதிய மலைத் தொடராக உருவாகும் என்பதை அவர் இப்போதே கணித்துவிட்டார்.

தற்போது பூமியில் ஏற்பட்டிருக்கும் பிளவின் பல கி.மீ. கீழே வெப்பமும் நகரும் பாறைகளும் உள்ளன. ஆழ்கடல் வெப்பமானது பூமியின் வெளித்தட்டை திடமாக அழுத்துகிறது. அந்த அழுத்தமானது நிலத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு மேலும் வளர உதவுகிறது. பூமியின் கீழே இருக்கும், வெப்பப் பாறைகளை வெப்பச் சலனம் மேல்நோக்கி நகர்த்துகிறது. இந்த மாற்றங்கள் ஆப்பிரிக்க கண்டத்தையே பிரிக்கும். அதனால் பூமியின் நில அமைப்பும் மாறும். கடல் நிலம் நோக்கிப் பாயும். பிளவின் வழியாக மேலே எழும் உருகிய பாறை குளிர்ந்து, மலையாக மாறும்.

இந்தக் காலகட்டத்தில், சோமாலியா ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து விடுபடும். இதைத் தொடர்ந்து புதிய வர்த்தகப் பாதைகளும், மீன்பிடித் தொழில்களும் உருவாகும்.

காலப்போக்கில் பெருங்கடல்களில் புதிய அகழிகள் உருவாகி, புவித் தட்டுகளை மீண்டும் ஒன்றாக இணைக்க இழுக்கத் தொடங்கும். ஒரு புவித் தட்டு மற்றொன்றின் கீழ் செல்லும் நிகழ்வில், உருவாகும் 'உள்செருகல்' மண்டலத்தில், மூழ்கும் தட்டு தனக்குப் பின்னால் உள்ள அனைத்தையும் இழுக்கிறது. இந்த நடவடிக்கைகள் உலகெங்கிலும் பெரிய நிலநடுக்கங்களை ஏற்படுத்தும். இதன் பக்க விளைவாக ஏற்படும் அழுத்தமும் வெப்பமும் பாறைகளை உருக்கும். இத்தகைய நிகழ்வுகள் சோமாலியாவையும் மடகாஸ்கரையும் இந்தியாவை நோக்கி நகர்த்தும்.

சோமாலியா ஆப்பிரிக்காவின் கிழக்கு முனை, மடகாஸ்கர் அதன் கடலோரத்திலும் அமைந்துள்ள புவித்தட்டு எல்லைகள் மறுசீரமைக்கப்படும். இந்தியப் பெருங்கடல் குறுகி, இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான தூரம் குறையக்கூடும். 40 மில்லியன் முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா யூரேசியாவுடன் மோதியபோது இமயமலை உயரத் தொடங்கியது.

இந்த நில மோதல்கள் இன்றும் உயரமான சிகரங்களை உருவாக்குகின்றன. எதிர்காலத்தில் சோமாலியா-இந்தியா மலைத்தொடர் ஒன்று இந்தியாவின் மேற்குப் பகுதியில் தோன்றி, காலநிலையையும், நிலமைப்பையும் மாற்றி அமைக்கும். காஷ்மீர் காலநிலை, பனிப் பொழிவு மேற்குக் கடற்கரை பகுதியிலும் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.