பொ.ஜெயச்சந்திரன்
அண்மையில் உத்தரபிரதேசம் மாநிலத்துக்கு உள்பட்ட மீரட்டில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, இந்திய கல்வியாளர் தீபக் ஷர்மாவின் அறிவியல்பூர்வமான ரியாலிட்டி ஷோவான விஞ்ஞான கர்-2026 நிகழ்ச்சி 10 நாள்கள் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்றிருந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களை ஒருங்கிணைத்து, அறிவியல் உபகரணங்களை வழங்கி, புதுப்புது அறிவியல் படைப்புகளை உருவாக்கும் சூழலை அமைத்துக் கொடுத்தனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஆ.பகீரதன் என்ற மாணவர் தேர்வு பெற்று, தன்னுடைய படைப்பைச் சமர்ப்பித்தார். அவரிடம் பேசியதிலிருந்து:
'நான் தற்போது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறேன். எனது பெற்றோர் ஆறுமுகராஜ் - அம்முலட்சுமி பிரியா. இந்த வருட விஞ்ஞான கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எனக்கு பல்வேறு வகையான புதிய அனுபவங்கள் கிடைத்தன. நிகழ்வு நேரலையாக அவர்களுடைய யுடியூப் சேனலில் ஒளிப்பரப்பானது.
எனக்கு ரோபாட்டிக்ஸ் மீது அதிக ஆர்வம். அதனால் ஒரு ரோபாட்டிக்ஸ் மாதிரி விமானம் உருவாக்கி பறக்கவிடவேண்டும் என்ற எண்ணம் மனதில் நிலை கொண்டிருந்தது. அதற்குத் தேவையான பொருள்களை கையில் வைத்துக்கொண்டேன்.
ரிமோட் விமானம் தயாரிப்பதற்கு முதலில் போம் போர்டு பயன்படுத்தி விமான பாகத்தையும், இறக்கைகளையும் உருவாக்கினேன். ப்ரஷ்லெஸ் மோட்டாரை விமானத்தின் முன் பகுதியில் பொருத்தினேன். அது சரியாக வேலை செய்ய எலக்ட்ரானிக் ஸ்பீடு கண்ட்ரோலர் இணைத்தேன். விமான இயக்கத்துக்காக 5அங்குல ப்ரொபெல்லர் பொருத்தினேன்.
இவை அனைத்தையும் எப்.எஸ்.ஐ.-6 டிரான்ஸ்மீட்டர்- ரிசீவருடன் இணைத்து ரிமோட்டால் கட்டுப்படுத்தினேன். இறுதியாக பேட்டரி பயன்படுத்தி பவர் சப்ளை கொடுத்தேன். இவ்வாறு எல்லாப் பாகங்களையும் சரியாக இணைத்ததால் ரிமோட் விமானம் நன்றாக வேலை செய்தது. வெற்றியும், சான்றிதழும் கிடைத்தது.
விஞ்ஞான கர்-2026 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைவர்கள், மாவட்ட ஆட்சியர், அறிவியலாளர்கள் வந்திருந்து மாணவர்களை ஊக்கப்படுத்தியதோடு பயிற்சியும் வழங்கினார்கள். யுபிஎஸ்ஸி தேர்வில் தேர்ச்சிபெற்ற வன்சிகா பகத் என்பவரும் எங்களைப் பாராட்டினார். அதைப் போல தீபக் ஷர்மா பல பயனுள்ள விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் நான் பல புதிய அனுபவங்களையும், அறிவுகளையும் பெற்றேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி எனக்கு உதவித் தொகையும், விமான டிக்கெட்டும் வழங்கினார். அவருக்கும், எனக்கு மிகவும் துணையாக இருந்த எனது பெற்றோர், தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, எங்கள் பள்ளி கணிப்பொறி ஆசிரியர் சுமித்ரா சத்தியமூர்த்தி ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
க.சுமித்ரா சத்திய மூர்த்தி கூறியது:
'இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அறிவியல் திறனில் சிறந்து விளங்கும் மாணவர்களை இணைய வழி தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்து விஞ்ஞான கர் ரியாலிட்டி ஷோ நடத்தினர். இது குறித்த அறிவிப்பை 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுகுமாரன் கட்செவி அஞ்சல் மூலமாகப் பகிர்ந்திருந்தார்.
எங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் இந்தத் தகவலை கொண்டு போய்ச் சேர்த்தேன். அதில், பல மாணவர்கள் துடிப்புடன் தாங்கள் கலந்து கொள்வதாகக் கூறினார்கள். ஏற்கெனவே பல அறிவியல் படைப்புகளை பகீரதன் படைத்து இருப்பதால் அவரை அப்போட்டியில் இணைத்தோம்.
நாடு முழுவதும் பல்வேறு மாணவர்களும் விண்ணப்பித்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்திலேயே இணைய வழியில் தொடங்கிய தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 3 கட்டங்களாக நடந்தது. அதில் சிறப்பான அறிவியல் படைப்புகளை உருவாக்கி அசத்தினார் இம்மாணவர்.
தமிழ்நாட்டில் இம்மாணவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார். கணிப்பொறி பயன்பாடுகள் சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, இந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார். இது எங்கள் பள்ளிக்குக் கிடைத்தப் பெருமை. தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், சக மாணவர்கள் இணைந்து மாணவர் ஆ.பகீரதனைப் பாராட்டினோம்' என்றார் சுமித்ரா சத்தியமூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிற்றூரில் பிறந்து கற்றோரில் சிறந்தவர்!

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!

ரிமோட் பொம்மை காா் மூலம் வெடிகுண்டு தாக்குதலுக்கு சதி: 4 போ் கைது

கோலிவுட் ஸ்டூடியோ!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
