தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

உலக அதிசயம் எல்லோரா!

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உள்பட்ட ஒளரங்காபாத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள மிகப் பெரிய மலைத்தொடரான 'சரணந்திரி'யில் தெற்கிலிருந்து வடக்காக ஆறாம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை பல ஆட்சியாளர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்ட 34 குகைக்கோயில்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு உயர்ந்து நீண்டுள்ளன.

News image

ANI

Updated On :31 மே 2026, 10:57 am IST

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உள்பட்ட ஒளரங்காபாத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள மிகப் பெரிய மலைத்தொடரான 'சரணந்திரி'யில் தெற்கிலிருந்து வடக்காக ஆறாம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை பல ஆட்சியாளர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்ட 34 குகைக்கோயில்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு உயர்ந்து நீண்டுள்ளன. 'எல்லோரா குகைச் சிற்பங்கள்' என்று அழைக்கப்படும் இந்தக் கோயில்கள் இந்திய குடைவரை கட்டடக் கலையின் முன்னோடியாக விளங்குகின்றன. இவை செங்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள அரிய கருவூலம்தான்.

சைவம், வைணவம், சமணம், பெளத்தம் என சமயங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒற்றுமையோடு சமரசமாய் இங்கு குகைக் கோயில்கள் வரிசையாக அமைந்துள்ளன. இவை பக்தி, கலையுணர்வு, சிற்பக் கலை, ஓவியக்கலை மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லுகின்றன. யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் நாகரிக கலைச்சின்னமான இந்தக் குகைச் சிற்பங்களை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் கண்டு வியக்கின்றனர்.

பண்டைய காலங்களில் 'எலுரா', 'எலாபுரா' என்றெல்லாம் அழைக்கப்பட்ட பகுதியே இன்றைக்கு எல்லோரா என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒன்று முதல் 12 வரையிலான குகைகள் பெளத்தத்தின் பெருமைகளையும், 13 முதல் 29 வரையிலான குகைகள் சைவ, வைணவத்தின் பெருமைகளையும், 30 முதல் 34 வரை சமணத்தின் பெருமைகளையும் எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு ஐந்து குகைகளையும் பார்த்துவிட்டு பேட்டரி கார்களில் மாறி மாறி ஒரே கட்டணச் சீட்டில் பயணிக்கும் வசதி உள்ளது.

முதலாம் குகையே மிகவும் பழமையானது. ஒன்று, இரண்டாம் குகைகளில் புத்தர் சிலைகள் உள்ளன. மூன்றாவது குகையில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தில் நாகர் உருவத்தில் உள்ள சிம்மாசனத்தில் புத்தர் அமர்ந்துள்ளார். 17 மீ. அகலமும், 36 மீ. நீளமும் கொண்ட ஐந்தாம் எண் குகை மிகவும் பெரியது என்பதோடு, இருபுறமும் 24 தூண்களைக் கொண்டு விருந்தினர் தங்குமிடமாகவும், வகுப்பறையாகவும் இருந்துள்ளது. ஆறாவது குகையில், கல்விக்கு அதிதேவதையான சரஸ்வதியின் சிற்பம் உள்ளிட்ட பல சித்திரங்கள் உள்ளன.

Story image

விஸ்வகர்மா நினைவாக உள்ள பத்தாவது குகையில் புத்த தியான முறையான மஹாயாணம் விவரிக்கப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கட்டுகள் உள்ளன.

குகை எண் 11, 12-இல் உள்ள பிரமாண்டமும் கலை நேர்த்தியும் பார்ப்பவர்களை பிரமிக்கச் செய்யும். 12-இல் மிகப் பெரிய புத்தர் சிலை கைகளைக் கட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதர் கோயில்

16-ஆம் குகையில் உள்ள கைலாசநாதர் கோயில் இரண்டு அடுக்குகளைக் கொண்டு உலகின் மிகப் பெரிய குடைவரை சிவாலயம் என்ற பெருமையைத் தாங்கியுள்ளது. மிகப் பெரிய ஒற்றைக்கல் குடைவரைக் கோயிலும்கூட! ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாம் கிருஷ்ணர் (757- 773) ஆட்சியில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, இருநூறு ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு மன்னர்களால் பணி நடைபெற்று முழுமையாக நிறைவடையாமலே நின்றுள்ளது.

மேல் தளத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்பில் கலைநயத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. உள்சுற்று வடக்குப் புறத்தில் காணப்படும் சிற்பங்களில் ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கையாய் தருவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த 9 தலைகளையும் சிவன் மாலையாகக் கோர்த்து அணிந்திருப்பதைப் போலச் சிற்பமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Story image

அடியிலிருந்து மேல் வரை கட்டப்பட்ட தரைத்தளக் கோயில்களான காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், கர்நாடக மாநிலத்தின் பட்டடக்கல் விருப்பாட்சீஸ்வரர் கோயில்களைப் பார்த்தே எல்லோரா கைலாசநாதர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. எல்லோரா கைலாசநாதர் கோயில் பெரிய மலையை மேலிருந்து கீழாக குடைந்து கட்டப்பட்டது. மலையில் பாறை எவ்வளவு ஆழம் வரை இருக்கும், போகப் போக என்ன தன்மையில் இருக்கும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. இந்தக் கோயில்களில் மூலிகை வண்ண ஓவியங்களையும் தீட்டியுள்ளதால், பல நூற்றாண்டுகள் கடந்தும் மங்காமல் காணப்படுகின்றன.

சிவன்- பார்வதி திருமணத்தைக் காட்டும் கல்யாணசுந்தரர் சிற்பம், சிவன் தனது கால்களை விரித்து நின்றவாறு வில்லில் அம்பைப் பூட்டி மூன்று அசுரர்களின் தலைகளுக்கும் குறி வைப்பது போல் காட்சியில் தேருக்கு பிரம்மா சாரதியாகவும், நான்கு வேதங்களே சக்கரங்களாக இருப்பது... என்று ஒவ்வொரு சிற்பமும் உன்னதமான நேர்த்தியில் கலைப் படைப்பாகவே சிற்பிகள் உருவாக்கியுள்ளனர்.

சமணர்

30 முதல் 34 வரையிலான குகைகளில் உள்ள அற்புதப் படைப்புகளான சமணக்குடைவரைக் கோயில்களை யாதவ வம்சத்தினர் (1187-1317) நினைவுச் சின்னங்களாக அமைப்பதற்கு நிதியுதவி அளித்துள்ளனர். இவ்விரண்டும் இரண்டு அடுக்குமுறையில் பிரம்மாண்டாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கும் மூலிகை வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன.

அந்நியர் படையெடுப்பின்போது பல குகைகளில் உள்ள சிற்பங்கள் சிதிலமாக்கப்பட்டன.

- வெ. கணேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.