அமெரிக்க செனட்டில் முதல் இஸ்லாமியர்
அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலில், மிச்சிகன் தொகுதியிலிருந்து செனட்டுக்கு அப்துல் எல்-சையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலில், மிச்சிகன் தொகுதியிலிருந்து செனட்டுக்கு அப்துல் எல்-சையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'முதல் இஸ்லாமியர்' என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் இருந்தும், அவரது குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் எழுந்த இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகளையும், கொந்தளிப்பான தேர்தல் இறுதிக் கட்ட பிரசாரத்தையும் மீறி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சையத் வெற்றி பெற்றார். 1994 முதல் இந்த மாநிலத்தில் டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சியின் எந்த உறுப்பினரும் செனட் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. இந்த நிலைமையும் அப்துலுக்குச் சாதகமாக அமைந்தது.
அப்துலின் தேர்தல் பிரசாரம், 'அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, அரசியலில் பெருநிறுவனங்களின் பணபலத்தைக் குறைத்தல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவியை நிறுத்துதல்' ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது.
'மக்கள் செலுத்தும் வரிப்பணம், மற்ற நாட்டு மக்களின் மீதோ அல்லது அவர்களின் குழந்தைகளின் மீதோ குண்டுகளை வீசுவதற்குப் பயன்படுத்தப்படாமல், வரி செலுத்திய மக்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பயன்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லை' என்று அப்துல் பிரசாரம் செய்தது, புதிய தலைமுறையினரிடையே அவரை பிரபலமாக்கியது.
'மிச்சிகன் மாகாணத்துக்குச் சேவை செய்ய அமெரிக்க செனட்டுக்குச் செல்வது எனக்குக் கிடைத்த பெருமை, பாக்கியம். இப்போதுதான் உண்மையான மக்கள் பணி தொடங்குகிறது' என்று அப்துல் எல்-சையத் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்துல் எல்-சையத் (42) முன்னாள் பொது சுகாதார அதிகாரியாகப் பணியாற்றியவர். அப்துலின் மூதாதையர், எகிப்து நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், 2014-இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டத்தையும் முடித்தார்.
அப்துல், தனது கல்விப் பணியை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் உதவிப் பேராசிரியராகத் தொடங்கினார். 2015-இல், டெட்ராய்ட் சுகாதாரத் துறையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அந்தத் துறையில் நிதி நிலைமை திவால் ஆன நிலையில், அந்தத் துறையை மீட்டெடுத்து மீண்டும் கட்டமைக்கும் பொறுப்பு அப்துலிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், வெய்ன் கவுண்டியின் சுகாதாரம், மனித மற்றும் முன்னாள் படைவீரர் சேவைகள் துறை இயக்குநராகப் பணியாற்றினார்.
அப்துல், ஜனநாயகக் கட்சியின் முற்போக்குப் பிரிவுடன் தொடர்புடையவர். பிரசாரத்தின் போது அப்துலின் குடும்ப, மதப் பின்னணியும் அரசியல் நிலைப்பாடுகளும் பலத்த ஆய்வுக்கும் வெறுப்புப் பிரசாரத்துக்கும் உள்ளாயின.
'முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன்' தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அப்துல் மறுத்தார். அவரது பிரசாரத்துக்குத் தொழிற்சங்கங்கள், முற்போக்கு அமைப்புகளிடமிருந்து ஆதரவு கிடைத்தது. அப்துலின் வெற்றிக்கு அவரது முன்னைய நிர்வாகப் பணிகளும், தொழிற்சங்கங்கள், முற்போக்கு அமைப்புகளிடமிருந்து கிடைத்த ஆதரவு மட்டுமின்றி, அப்துலைக் குறி வைத்து அவிழ்த்துவிடப்பட்ட மத வெறுப்புப் பிரசாரமும்தான் காரணங்கள்.
'பண பலம் கொண்டவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையிலான போராட்டத்தில், சாதாரண மக்களால் வெற்றி பெற முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்' என்று கூறுகிறார் அப்துல்,.
அப்துலின் மனைவி ஸாரா ஜுகாகு. மனநல மருத்துவர். ஸாராவின் பெற்றோர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஸாராவின் பெற்றோர் கர்நாடக மாநிலத்தின் 'பட்கல்' பேரூரைச் சேர்ந்த மருத்துவர்கள். அப்துல் - ஸாரா தம்பதிக்கு இரண்டு மகள்கள். எம்மாலி , செரீன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

