19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

இந்தியாவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் வரை... அமெரிக்க அரசியலில் நித்யா ராமன்

அமெரிக்க அரசியலில், தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் முத்திரை பதித்ததைத் தொடர்ந்து, அரசியலில் காலடி எடுத்து வைத்திருப்பவர் நித்யா ராமன்.

Updated On :

அமெரிக்க அரசியலில், தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் முத்திரை பதித்ததைத் தொடர்ந்து, அரசியலில் காலடி எடுத்து வைத்திருப்பவர் நித்யா ராமன். லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயராகத் தேர்வு பெற்றுள்ளார். நித்யாவும் தமிழ்ப் பின்னணி கொண்டவர்தான். தில்லி, சென்னை, திருவனந்த

புரம், திருச்சூர் நித்யாவின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

1981-இல் திருவனந்தபுரத்தில் பிறந்த நித்யாவுக்கு, கோவளம் பீச்சுக்குச் செல்வதும், ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலில் வழிபாடு செய்வதும் மிகவும் பிடிக்கும். நித்யா படித்தது கேரளத்தின் இன்னொரு நகரமான திருச்சூரில். தனது ஆறாவது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்குச் சென்றார்.

தனது குழந்தைப் பருவம் மற்றும் மாணவர் பருவத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்தாலும், அவ்வப்போது பெற்றோருடன் கேரளாவுக்கு வந்து சென்று கொண்டிருந்தார். நித்யாவின் குடும்பம் தமிழ்ப் பிராமண சமூகத்தைச் சேர்ந்தது. பூர்விகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புலியூர்க்குறிச்சி.

நித்யாவின் தாத்தா கே. ராம ஐயர், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அஞ்சல் துறையில் பணியாற்றினார். அவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய பிறகு, திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தார். நித்யாவின் தந்தை ஆர். வெங்கட்ராமன் கேரளா அரசின் 'கெல்ட்ரான்' நிறுவனத்திலும், அவரது தாயார் சுதா 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி'யிலும் பணியாற்றினர். பின்னர், இந்தக் குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது. முதலில் மாசசூசெட்ஸில் குடியேறிய நித்யாவின் பெற்றோர், பிறகு பாஸ்டனுக்குச் சென்றனர்.

அமெரிக்க நகரம் ஒன்றுக்கு, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மேயராகப் பொறுப்பேற்பது, ஓராண்டுக்கு முன்பு வரை கூட, கற்பனைக்கு எட்டாத கனவாகவே இருந்தது. ஆனால், 2026 தொடக்கத்தில் ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயராகி, அமெரிக்க அரசியலில் புரட்சி செய்து காண்பித்தார்.

2026 முடிவில், நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணரும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமன்ற உறுப்பினருமான நித்யா ராமன், மேயர் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலஸை வழிநடத்தும் முதல் தெற்காசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நித்யா ராமனுக்கு 45 வயதாகிறது. ஜோஹ்ரான், நித்யா இருவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

நித்யா ராமனின் 'தென் இந்தியாவிலிருந்து அமெரிக்கப் பயணம்', ஒரு புலம்பெயர்ந்தவரின் முன்னேற்றம் என்பதைத் தாண்டி, அரசியலிலும் அவரை ஈடுபடச் செய்துள்ளது. உண்மையில், அமெரிக்க அரசியலுக்கான களப் பணிகளை நித்யா இந்தியாவில் தொடங்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

Story image

2003-இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக ஆய்வுகள் துறையில் பட்டம் பெற்ற பிறகு, இந்தியா திரும்பிய நித்யா, டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொண்டபோது, அவர்களுக்காக நித்யா களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அதன்பிறகு, அவர் சென்னைக்கு வந்தார்.

நகர்ப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்திய நித்யா, 2010 -இல் 'ட்ரான்ஸ் பரன்ட் சென்னை' என்ற அமைப்பைத் தொடங்கினார். இது தரவு வரைபடங்களைப் பயன்படுத்தி, குடியிருப்பாளர்களின் குறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாகும். நித்யா ராமனின் நோக்கம் வெறும் கோட்பாட்டு ரீதியான திட்டமிடல் மட்டுமல்ல; விளிம்புநிலை மக்களின் குரல் அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் செவிகளில் ஒலிக்க வேண்டும்..., சாதாரணர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே நித்யாவின் இலக்காக இருந்தது.

நித்யா 2013 -இல் லாஸ் ஏஞ்சல்ஸூக்குக் குடிபெயர்ந்தார். வீட்டுவசதி, வீடற்றோர் மற்றும் உள்ளூர் பிரச்னைகளில் நித்யா கவனம் செலுத்தினார். சில்வர் லேக், எக்கோ பார்க் மற்றும் ஹாலிவுட் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவும் குழுவான 'செலா நெய்பர்ஹுட் ஹோம்லெஸ்' அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். 'மீ டூ' இயக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அதிர்வுகளைப் பயன்படுத்தி, ஹாலிவுட்டில் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்தும் செயல்பட்டார்.

லாஸ் ஏஞ்சலஸ் அரசியலில் நுழைந்த நித்யா, 2020 -இல் மாநகர மன்ற உறுப்பினர் பதவிக்காக டேவிட் ரியூவை எதிர்த்துப் போட்டியிட்டு தனது அரசியல் மாநகர்வைத் தொடங்கினார். அடிமட்டத் தொண்டர்களும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளும் நித்யாவுக்குப் பின்னால் அணிதிரண்டனர். நகர் மன்றத்தில் முதல் தெற்காசியர் மற்றும் முதல் ஆசிய-

அமெரிக்கப் பெண் என்ற பெருமையுடன் வெற்றி பெற்றார். நித்யா 2024-இல் நகரத்தின் நான்காவது மாவட்டத்தைப் பிரதி

நிதித்துவப்படுத்தி இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது, லாஸ் ஏஞ்சலஸ் தனது முதல் தெற்காசிய மேயரைப் பெற்றுள்ளது.

மலிவு விலையில் வீடுகளை விரிவுபடுத்துவது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, வாடகைதாரர் பாதுகாப்பை வலுப்படுத்துவது, அரசாங்கச் செலவினங்களை வெளிப்படையானதாக மாற்றுவது ஆகியவை நித்யா அளித்திருக்கும் வாக்குறுதிகள்.

லாஸ் ஏஞ்சலஸ் மாநகரம் 2028 கோடை ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் நித்யா மேயராகப் பதவியேற்கிறார்.

நித்யா ராமன், கணவர் வாலி சந்திரசேகரன் இருவரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது சந்தித்தனர். பட்டப்படிப்பு முடிந்த பிறகு 2010-இல் திருமணம் செய்துகொண்டனர். நித்யா - வாலி தம்பதிக்கு, 'கர்ணா' என்ற மகனும், 'காவேரி' என்ற மகளும் உள்ளனர். இரட்டைக் குழந்தைகள் இருவருக்கும் பத்து வயதாகிறது.

வாலி சந்திரசேகரன், 'மாடர்ன் ஃபேமிலி', '30 ராக்', 'தி ஃபோர் சீசன்ஸ்' போன்ற வெற்றி பெற்ற நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எழுதி, நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். வாலி, ஸ்டீவ் ஹெலி என்பவருடன் இணைந்து 'தி ரிடிகுலஸ் ரேஸ்: 26,000 மைல்ஸ், டூ கைட்ஸ், ஒன் குளோப், நோ ஏர்பிளேன்ஸ்' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.