19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

நீதி தருவாள் நீலி!

பழையனூர் நீலி கதை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

நீலி

Updated On :

பெ.நாயகி

பழையனூர் நீலி கதை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டுக்குள்ளேயே கோயமுத்தூரில் ஒருவிதமாகவும், வடதமிழகப் பகுதிகளில் வேறுவிதமாகவும், திருநெல்வேலியில் மற்றொரு விதமாகவும் இந்தக் கதை நடமாடி வருகிறது.

'பழகைநல்லூர் நீலி அம்மன் கதை' என்கிற பெயரில் வில்லுப்பாட்டில் வரும் நீலியின் கதை இன்னும் கொஞ்சம் மாறுபட்டது. நாட்டுப்புற இலக்கிய வகைகளில் வருகின்ற கதைகள் பொதுவாக எப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கின்றன என்று கண்டறிய இயலாதவாறு, பழைமையின் கூறுகள் இருக்கும். வெவ்வேறு வடிவங்களில் உலா வந்தாலும், 'நீலிக்கு சக்களத்தி காசி நகரத்தைச் சேர்ந்த பெண்ணா? உள்ளூர் பாலியல் தொழிலாளியா?' என்பதில் முரண்பாடுகள் உள்ளன. இருந்தாலும், கதையின் அடிநாதம் ஒரு பெண் தன்னை ஏமாற்றிக் கொன்றவனை, ஜென்மம் மாறி வந்தாவது பழிவாங்கியே தீருவாள் என்பதாகும்.

நீலியின் கணவன் விலைமாதர்களுடன் தொடர்பில் இருக்கிறான். ஒரு விலைமாது அவனுடைய வீட்டுக்கு வர, நீலி கேவலமாகப் பேசி அனுப்புகிறாள். நீலியின் கணவன் அந்த விலைமாதுவிடம் மீண்டும் சென்றபோது, அவள், 'இனிமேல் என்னிடம் வருவதென்றால் உன் மனைவியின் தாலியை எடுத்து வா? இல்லையென்றால் வராதே!' என்று துரத்திவிடுகிறாள். பெண் மோகத்தில் மனைவியைக் கொன்று எரித்து விடுகிறான் கணவன்.

கதை அடுத்த ஜென்மத்துக்கு மாறுகிறது. நீலியின் கணவன் காஞ்சியில் ஒரு வியாபாரியின் மகன் தரிசனனாகப் பிறந்து வளர்கிறான். அவனைப் பழிவாங்கக் காத்திருக்கும் நீலி வனப்பகுதியில் அலைகிறாள்.

ஒருநாள் மாலை வியாபார நிமித்தமாக திருவாலங்காடு பக்கம் தனியாக வருகின்ற தரிசனன், அவளிடம் மாட்டிக் கொள்கிறான். அவள் அவனுடைய மனைவி போல் உருவம் எடுத்துக் கொண்டு ஒரு கொள்ளிக்கட்டையை குழந்தையாக மாற்றித் தன் இடுப்பில் ஏந்திக் கொண்டு, அவன் பின்னர் செல்கிறாள். அவனுக்கு அவளைத் தெரிந்துவிடுகிறது. எனவே, தப்பிச் செல்ல முயல்கிறான். விடாமல் துரத்திச் செல்லும் நீலி, திருவாலங்காட்டுக்கு வெகு அருகில் பழையனூர் கிராமத்தில் பெரியவர்களிடம் முறையிடுகிறாள்.

குழந்தையாக உருமாற்றியிருந்த கொள்ளிக்கட்டையை நீலி மிதித்துக் கொன்றதாகச் சொல்லப்படும் இடம்.

குழந்தையாக உருமாற்றியிருந்த கொள்ளிக்கட்டையை நீலி மிதித்துக் கொன்றதாகச் சொல்லப்படும் இடம்.

'தன்னைத் திருமணம் செய்து, ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டுச் செல்ல முயற்சிக்கிறான்' என்று குற்றம் சாட்டுகிறாள். இடுப்பில் கைக்குழந்தையை வைத்துள்ள ஒரு பெண்ணின் கண்ணீருக்கு முன்னால், தரிசனனுடைய எல்லா விளக்கங்களும் அடிபட்டன. (போலியான கண்ணீரை நீலிக் கண்ணீர் என்று குறிப்பிடும் வழக்கத்துக்கான காரணம் இதுதான்).

கிராமத்துப் பெரியவர்கள் எழுபது பேர் சாட்சி பூதேஸ்வர சுவாமி கோயிலின் மண்டபத்தில் வழக்கை விசாரித்து, 'அவள் உன்னுடைய மனைவி. அவளுடன் இன்று இரவு நீ தங்கவேண்டும்' என்று ஒரு வீட்டில் தங்க வைக்கின்றனர். அன்றிரவே அவனைக் கொன்றுவிட்டு நீலி மறைந்து விடுகிறாள்.

மறுநாள் காலை இறந்து கிடந்த தரிசனனைப் பார்த்துவிட்டு, எழுபது பெரியவர்களும், 'தங்களுடைய சத்திய வாக்கு தவறாகிவிட்டது' என்று மனதுக்குள் துடிதுடித்து, அங்கேயே ஒரு தீக்குண்டத்தை உருவாக்கினர். அதில் ஒருவர் பின் ஒருவராகக் குதித்து எரிந்து சாம்பலாகின்றனர்.

அதன்பிறகும் ஆத்திரம் அடங்காமல், நீலி அங்கே அநியாயம் செய்யும் ஆண்களை எல்லாம் கொன்ற வண்ணம் இருக்கிறாள். உள்ளூர் மக்கள் ஆலங்காட்டுக் காளிதேவியிடம் வேண்ட, காளிதேவி அவளைச் சாந்தப்படுத்தி, 'ஊருக்கு நல்லது செய்யும் இயக்கியாக இரு' என்று அருள்பாலித்தார்.

இன்றும் பெண்களுக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு ஓர் அச்சுறுத்தல் சின்னமாக பழையனூரில் கோயில் கொண்டுள்ளாள் நீலி.

திருஞானசம்பந்தரின் திருவாலங்காட்டு தேவாரப் பதிகத்தில் 'பழையனூர் நீலி' பற்றிய குறிப்பும், உமாபதி சிவாசாரியாரின் சேக்கிழார் புராணத்தில், 'நீலி மட்டுமின்றி அவள் கணவனுக்குத் தவறான நம்பிக்கை கொடுத்ததற்காக தீப்பாய்ந்து உயிர் நீத்த எழுபது பேர்' பற்றிய குறிப்பும் உள்ளன.

சேர, சோழ, பாண்டியர்கள் இங்கு வந்து வணங்கி தம் ராஜபரிபாலனம் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

'தன்னை வாழ்நாள் முழுவதும் கண்கலங்காமல் கண்ணின் இமையாகக் காப்பேன்' என்று உறுதியேற்று திருமணம் செய்தவன் ஏமாற்றியதைப் பொறுத்துக் கொள்ளாத நீலியும், தங்கள் வாக்கு பொய்த்துப் போனதற்காக தீப்பாய்ந்து உயிர்த் தியாகம் செய்த எழுபது பெரியவர்களும் இருந்த பழையனூர் தலம் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டுக்கு மிக அருகில்தான் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.