பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

சர்வதேச விழாவில் தமிழ்ப் படங்கள்

ஆசியாவின் மிகப் பழைமையான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா 1952-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, கடந்த 22 வருடங்களாக கோவாவில் மட்டுமே நிரந்தரமாக நடைபெற்று வருகிறது.

Updated On :

ஆசியாவின் மிகப் பழைமையான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா 1952-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, கடந்த 22 வருடங்களாக கோவாவில் மட்டுமே நிரந்தரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் 57-ஆவது பதிப்பு நடைபெற உள்ளது. இதில் 137 நாடுகளைச் சேர்ந்த 1,900-க்கும் அதிகமான திரைப்படங்கள் கலந்துகொள்ள விண்ணப்பித்திருந்தன. விண்ணப்பிக்கப்பட்ட திரைப்படங்களில் , 86 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 திரைப்படங்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படங்களும், ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களும் அடங்குகின்றன .

இந்த ஆண்டு இந்திய திரைப்பட விழாவின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள அஷுதோஷ் கவாரிகர், இந்த விழா 'எல்லைகள் இல்லா கதைகள்' என்பதை மையமாகக் கொண்டது என்று அறிவித்துள்ளார். 'திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது நாடுகளின் மொழி, கலாசாரம், இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலம். ஒரு நாட்டில் உருவான கதை , உலகின் வேறொரு எல்லையில் இருக்கும் ஒரு பார்வையாளர் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகளே, சினிமாவின் வெற்றி' என்று அவர் கூறியுள்ளார்.

தொடக்கத் திரைப்படமாக போலந்து நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய 'ஃபாதர்லேண்ட்' திரைப்படம் திரையிடப்படுகிறது. விழாவின் நடுப்பகுதியில் 'ஐ மேட்டர்' என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இறுதி நாளன்று 'வி ஆர் ஆல் ஸ்டிரேஞ்சர்ஸ்' என்ற திரைப்படத்துடன் இந்தத் திரைப்பட விழா நிறைவடைகிறது.

இந்த விழாவில் பிரிக்ஸ் நாடுகளின் சார்பில் சில திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. இதில் தொடக்கத் திரைப்படமாக , அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுள்ள 'ராமாயணா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இந்தியக் கலாசாரம் மற்றும் புராணக் கதைகளை நவீனத் தொழில்நுட்பத்துடன் சர்வதேசத் தரத்தில் உலகுக்கு காட்சிப்படுத்துவதற்கு திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் 'இந்தியன் பனோரமா' பிரிவில் திரையிடப்பட உள்ளது. மேலும், மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்கள் இயக்கிய 'முதல் மரியாதை' மற்றும் 'முந்தானை முடிச்சு' படங்களும் திரையிடப்படவுள்ளன.

Story image

இந்தப் பிரிவின் தொடக்கத் திரைப்படமாக மாபெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' திரையிடப்படுகிறது. இறுதித் திரைப்படமாக 'பிகம்மிங்' திரையிடப்படவுள்ளது. மேலும் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 'சர்வம் மாயா' திரைப்படமும் இதே பிரிவில் திரையிடப்பட உள்ளது.

விழா இறுதியில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறப்பு நடுவர் விருது எனப் பல்வேறு பிரிவுகளில் 'வெள்ளி மயில்' விருதுகள் வழங்க உள்ளனர். மேலும் உயரிய விருதான தங்கமயில் விருதுக்கு 15 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் முழுவதும் பங்களித்த கலைஞருக்கு 'சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட உள்ளது.

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் இந்த விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் 'தாய்கிழவி' திரைப்படம் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ராதிகாவின் தாய் கிழவி

இந்தியன் பனோரமா பிரிவு, இந்தியத் திரைப்படங்களின் தரத்தையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் முக்கியப் பிரிவாகக் கருதப்படுகிறது. இதில் 25 ஃபீச்சர் படங்களும், 20 நான்-ஃபீச்சர் படங்களும் இடம்பெறும்.'தாய்கிழவி' அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசனின் முதல் படம். சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் ஆகியோரின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ராதிகா சரத்குமாரின் மைய நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Story image

கிராமப்புறப் பின்னணியில் அமைந்த இந்த நகைச்சுவை-நாடகம், பவுனுத்தாய் என்ற வயதான பெண்மணியைப் யின் பற்றியது. சுதந்திரமாக வாழும், பணம் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கும் இந்தப் பெண், தனது வாழ்க்கையை தனது விதிகளின்படி நடத்துகிறார். திடீரென நோய்வாய்ப்படும்போது, அவருடைய மூன்று மகன்கள் வீட்டுக்கு வருகிறார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் தாயின் நலன் அல்ல. அவள் மறைத்து வைத்திருக்கும் தங்கம் பற்றிய தகவல் அவர்களை ஈர்க்கிறது.

இந்தச் சூழலில் குடும்ப உறவுகள், பேராசை, பெண்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவை கலந்து வரும் கதை, நகைச்சுவையுடன் ஆழமான உணர்வுகளைக் கலந்து சொன்னது. ராதிகா சரத்குமார் பவுனுத்தாய் பாத்திரத்தில் வலுவான நடிப்பை வழங்கியிருந்தார். குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், வெளியான பிறகு வணிகரீதியாக பெரும் வெற்றியை அடைந்தது.

வெளியாவதற்கு முன்பே....

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட விஜய்குமார் நடித்த 'அறிவு' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'அறிவு' பெற்றுள்ளது.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், 'கழுகு' திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், 'உறியடி' விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Story image

கோவா திரைப்பட விழா கேன்ஸ், வெனிஸ், பெர்லின் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இணையான முக்கியத்துவத்தை இது பெற்றுள்ளது. உலக சினிமாக்களின் அம்சங்களை அறிந்து கொள்வதற்கு இந்தியர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

படம் வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருப்பது 'அறிவு' திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.