நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புரோஸ்டேட் பிரச்னை தீர...

எனக்கு வயது 76. இரண்டு சிறுநீரகங்களிலும் நீர்க்கட்டிகள் இருப்பதாகவும், புரோஸ்டேட் சுரப்பி பெரிதாக இருப்பதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Updated On :

எனக்கு வயது 76. இரண்டு சிறுநீரகங்களிலும் நீர்க்கட்டிகள் இருப்பதாகவும், புரோஸ்டேட் சுரப்பி பெரிதாக இருப்பதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சுரப்பியில் சிறிய அளவில் கால்சியம் படிவங்களும் காணப்படுகின்றன. இடது விதைப்பையில் சிறிய அளவில் நீர்தேங்கியுள்ளது. இப்பிரச்னைகள் தீர என்ன ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடலாம்?

-அன்பழகன், சென்னை.

புரோஸ்டேட் என்பது ஆண்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறிய சுரப்பி. இது சிறுநீர்ப் பையின் அடிப்பகுதியில், சிறுநீர்க் குழாயைச் சுற்றி அமைந்துள்ளது. வயது அதிகரிக்கும்போது, இந்தச் சுரப்பி பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் பின்வரும் பிரச்னைகள் ஏற்படலாம்.

சிறுநீர் மெதுவாக வெளியேறுதல், சிறுநீர்க் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளுதல், கழித்த பின்னரும் முழுமையாக வெளியேறாத உணர்வு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுதல், முற்றிலும் வெளியேறாமல் தேங்கிவிடுதல்.

உங்களுடைய வலது சிறுநீரகத்தில் நீர்க்கட்டி உள்ளது. வயோதிகத்தில் இது இயல்பாக ஏற்படக் கூடியதுதான். பெரும்பாலும் ஆபத்தற்றவை. இடது சிறுநீரகத்தில் நடுப்பகுதியில் நீர்க்கட்டி உள்ளது. அதன் வெளிப்புறத்தில் கால்சியம் படிவம் காணப்படுகிறது. சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள கொழுப்புப் பகுதியில் வீக்கம் காணப்படுகிறது. இது சில சமயங்களில் சிறுநீரக அழற்சி அல்லது தொற்றை உருவாக்கலாம்.

அடிவயிற்றுப் பகுதியானது அபான வாயுவின் இருப்பிடமாக இருப்பதால், அதன் இயற்கைக் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு போன்றவை வலுப்பெற்று புரோஸ்டேட் சுரப்பியைப் பாதிப்பதால், இந்த வாயுவை அதன் குணம் மற்றும் செயல்களிலிருந்து கீழடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாயுவின் மறைமுகத் தாக்கத்தினால்தான் சிறுநீரகங்களின் பாதிப்பும் தென்படுகின்றன.

உங்களுக்குப் பசி நன்றாக இருக்கும்பட்சத்தில், ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளாகிய சுகுமாரம், வஸ்தியாமாயந்தகம், இந்துகாந்தம் போன்றவற்றில் உடல்நிலைக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுத்து, காலை, இரவு உணவுக்கு முன் மற்றும் பின்னர் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நலம்.

மருந்தின் அளவு, நேரம் போன்றவை உடல்வாகுக்கு ஏற்றாற்போல் தீர்மானிக்க வேண்டியிருப்பதால், அந்த வேலையை மருத்துவரிடம் விட்டுவிடலாம்.

வெளிப்புறமாகவும் அபான வாயுவின் குணம் மற்றும் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதற்கு மூலிகைத் தைலங்களாகிய மஹா மாஷம், பலாஅஸ்வகந்தாதி, ஹிங்குதிரி குணம், கார்ப்பாஸாஸ்த்யாதி போன்றவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இளஞ்சூடாக முதுகு, அடிவயிற்றில் தடவித் தேய்த்து, அரை - முக்கால் மணிநேரம் ஊறியபிறகு, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, சூடான தண்ணீரால் கழுவிவிட்டுக்கொள்ள வேண்டும். காலை உணவுக்கு முன் இதைச்செய்துகொள்வது நலம். தினமும் செய்யலாம்.

உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகள் பொதுவாகவே வாயுவை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அவற்றை முடிந்தவரை குறைத்து, இனிப்பு, புளிப்புச் சுவைகளை சற்று தூக்கலாகச் சாப்பிடலாம். பருப்பு வகைகள், வேர்க்

கடலை, கொடிக்காய்கள் வாயுவின் சீற்றத்தை அதிகப்படுத்துபவை. அதனால் அவை சமைக்கப்பட்டு, சூடாக இருக்கும்போதே சாப்பிட்டு விடுவது நல்லது.

ஆறிப்போன உணவுகளை மறுபடியும் சூடாக்கிச் சாப்பிடுவது நல்லதல்ல. இரவில் குளிர்காற்று உடலில்படும்படி படுத்திருப்பதும் தவறாகும்.

சித்தரத்தை, சுக்கு, தனியா, சீரகம் போன்றவை தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வெந்நீராகப் பருகுவது வாயுவின் சீற்றத்தைக் கட்டுப்படுத்தும். நடப்பது நல்ல பயிற்சிதான் என்றாலும், தன் சக்திக்கு மீறிய நடையினால் வாயு வளர்ந்து நரம்புகளையும் தசைநாருகளையும் பலவீனமடையச்செய்யலாம் என்பதால் அதிக நடையைத் தவிர்க்கலாம்.

தசமூலம், விதார்யாதி கஷாயம், தான்வந்திரம், வாயுகுளிகை, அஸ்வகந்தாரிஷ்டம், தசமூலாரிஷ்டம் போன்ற மருந்துகள் வயோதிகத்தில் அதிகம் பயன்படுத்தவேண்டிய சிறந்த ஆயுர்வேத மருந்துகளாகும். இவை அனைத்தும் விற்பனையில் உள்ள மருந்துகளே.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.