வாசனை
இது ஓர் இனிமையான சுதந்திர காலமாக சந்திரிகா உணர்ந்து வருகிறாள்.
ஷீலா ரமணன்
இது ஓர் இனிமையான சுதந்திர காலமாக சந்திரிகா உணர்ந்து வருகிறாள். எந்தவித குறுக்கீடலோ அவசரமோ இல்லாது வானத்தில் மிதக்கும் பருவமாக கற்பனை செய்து கொண்டாள்.
'சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திரத்தை பிறர் நமக்குக் கொடுக்க வேண்டுமா? நம் சுதந்திரம் எது என்று நமக்கே தெரியுமா? தெரியாதா?' இப்படி விவாத மேடை, நீயா-நானா போன்று வேறொரு களத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்.
சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி வித்தியாசப்படும் ஒன்று.
'பணம், காசு, சொத்து, நகைக் குவியல் இவை இருந்தால் போதும். என் மேல் யாரும் கை வைக்க முடியாது' என்போர் சிலர்.
'இவை போன்ற அசையும் சொத்துகள் எனக்குத் தேவையும் இல்லை; என்னிடமும் இல்லை. எனக்குப் படிப்பு இருக்கிறது. கல்வியே என் பெரும் சொத்து. அதனை வைத்து என் வாழ்க்கையை, என் குடும்பத்தை நன்கு முன்னேற்றி விடுவேன்' என்போர் பலர்.
'ஆளை விடுங்கடா சாமி... என்னை நிம்மதியா, கேள்வி கேட்காம இருந்தாலே போதும். இதுவே என் சுதந்திரம்' என்று விரும்புவோர் ஏராளம், ஏராளம்!
சந்திரிகாவுக்கு இப்படி எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அவள் கையில் இன்ஜினீயரிங் படிப்பும் சில கணினி சிறப்பு கோர்ஸ்களும் இருக்கிறது. பிறந்த வீட்டில் இருந்தது போலவே கணவர் வீடும் அமைந்து விட்டது.
இதோ தனியாக வெளிநாட்டுக்கு, அதுவும் தொலைவில் தென் அமெரிக்காவில் ஓர் ஊருக்கு கம்பெனி அனுப்பியதும் ஏற்றுக் கொண்டு வந்து விட்டாள். உண்மையைச் சொல்லப்போனால் குடும்பமே சற்று பயந்தார்கள். யோசித்தார்கள். வட அமெரிக்காவில் கூட உறவுக்காரர்களும் சில நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் மெக்ஸிகோவில் யாருமே இல்லை.
இதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் சந்திரிகா எப்போதுமே இருந்தது இல்லை. வாய்ப்புகளை சேலஞ்சாக எடுத்துக் கொள்வாள். எனக்கு வேலையே இல்லை, வேலையே கிடைக்க வில்லை என்று யாராவது புலம்பினால் சந்திரிகாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது.
அதென்ன உலகத்துல இது ஒன்னுதான் நிறுவனமா? ஏதேனும் ஓர் அலுவலகத்தில் நுழைந்து பணி அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு பின் அடுத்ததை நோக்கிச் செல்லலாமே என உடன் இருப்போருக்கு எடுத்துக் கூறுவாள்.
இவள் அறிவுரைகளை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் கேட்க ஆரம்பித்தனர் - 'குழந்தை எப்போது?' அதனை தவிர்த்து வேறு பேச்சை மாற்றினால் விட மாட்டார்கள். 'அதெல்லாம் லேட் பண்ணககூடாது. காலா காலத்துக்கு நடக்கணும்.'
மேலே சொன்ன மாதிரி இதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் சந்திரிகா இல்லை. ஆன் சைட் வேலைகள் எல்லோரும் ஆசைப்படும் ஒன்று. ஒரு வேளை கணவன் பிரதாப்புக்கு இந்த வாய்ப்பு வந்திருந்தாலும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வைத்திருப்பாள். ஏனென்றால் பிரதாப் சுகவாசி. எல்லாம் அக்கம் பக்கமே இருக்க வேண்டும்.
அலுவலகம் வீட்டிலேயே அமைத்துக் கொண்டான். எந்த சாமான்கள் வாங்க வேண்டி இருந்தாலும் இப்போது செளகரியமாக வந்து விட்டதே ஆன்லைன் ஷாப்பிங். உட்கார்ந்த இடத்திலேயே ஆர்டர் பண்ணி விடுவான்.
ஆனால், சந்திரிகா அவனுக்கு எதிர்மறை. எல்லாவற்றையும் அனுபவபூர்வமாகப் பார்க்க வேண்டும். டூ வீலரில் பறக்கப் பிடிக்கும். வீட்டுக்கு அத்தனையும் இவள் தான் நேரில் சென்று வாங்குவாள். துணைக்கு என்று யாரும் அவசியமில்லை இவளுக்கு.
இப்படிப்பட்ட குணம் உள்ள பெண்ணுக்கு இப்படி யாரும் அதிகம் செல்லாத தூர தேசத்துக்குச் சென்று பணி செய்ய வந்த வாய்ப்பை விடுவாளோ! தென்அமெரிக்கா ப்ராஜெக்ட், ஆறு மாதம் மெக்சிகோ சென்று ஆன் சைட்டில் வேலை செய்து திரும்ப வேண்டும் என இவளின் கம்பெனி கேட்ட போது, உடனே ஒத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டாள்.
அலுவலகம் பக்கத்திலேயே தங்கியிருக்கிறாள். அங்கிருந்து மினி பஸ்கள் அரை மணிக்கொரு முறை வந்து போகும். நேரம் கிடைக்கும் போது அருகருகே சுற்றிப் பார்த்து வருகிறாள்.
ஆறு மாத வேலை, ஒரு வருடமாக மாறியது மட்டுமல்லாமல் ஓய்வு எடுக்கவோ, வெகு தொலைவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று சுற்றிப் பார்க்கவோ நேரம் இன்றி வேலை பளு அதிகரித்தது. இன்னும் ஒரு மாதமே உள்ளது மெக்சிகோவை விட்டு இந்தியா திரும்பிச் செல்வதற்கு.
'வேலை வேலைனு இல்லாம கொஞ்சம் அந்த நாட்டை, அந்த மக்களைப் பார்த்துப் பழகிப் பேசு. போ, சுத்திப் பாரு, உனக்குத் தான் பிடிக்குமே' எனச் சொல்லிக் கொண்டே இருப்பான் பிரதாப்.
பிரதாப்பிடம் உள்ள நல்ல குணம், தான் 'செளகரிய விரும்பி'யாக இருந்தாலும், சதா சுறுசுறுப்பாக ஆக்டிவ் ஆக இருக்கும் சந்திரிகாவை, தான் கணவன் என்ற உரிமையினால் எந்த விதத்திலும் தடுக்கவோ நிறுத்தவோ மாட்டான். 'உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்' எனும் நட்பு அவனிடம் உண்டு.
விரைவில் இந்தியா திரும்புவதால் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு சனி, ஞாயிறும் பயணம் ஆரம்பித்தாள்.
இம்மாதிரி வார விடுமுறைகளில் வெளியே போகும் போது தான் சில நாள்களாக ஒரு பதினாறு, பதினேழு வயதுள்ள ஸ்பானிய சிறுமியை பஸ்ஸில் பார்க்கிறாள்.
பாட்டி அடிக்கடி சொல்லுவாள், 'நல்லா மூஞ்சி அலம்பி, தேச்சு வச்ச குத்துவிளக்குப் போலப் பளிச்சுனு இருக்கனும், இப்படியா தூங்குமூஞ்சியா இருப்ப' என.
இப்பெண் அது போலத்தான் இருக்கிறாள் பளிச்சென்று தேச்சு வச்ச குத்து விளக்கு போல! ஸ்பானியர்களுக்கே உரிய பால் வண்ண நிறம். துறு துறு என அலைபாயும் கண்கள், பல வண்ணங்கள் கொண்ட பாவாடை சட்டை போல உடை, கை நிறைய கலர்கலராய் வளையல்கள், பழுப்பு நிற முடி, முக்கியமாக சிரித்த முகம். இப்போதெல்லாம் ஏறியதும் அப்பெண்ணை தேடும் அளவுக்கு சந்திரிகாவை அவள் கவர்ந்து விட்டாள்.
ஆனால், அப்பெண்ணை கவர்ந்ததென்னவோ ஒரு ஒடிசலான அதே வயதை ஒத்த ஒரு பையன்! அவனும் அழகாய் சிரிப்போடு கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே இப்பெண்ணை அடிக்கடி பார்த்துக் கொள்வான். அவனும் அதே பஸ்ஸில் வருவான்.
இருவரும் அருகில் எல்லாம் உட்கார மாட்டார்கள். ஆனால், பார்த்துப் பார்த்து சிரித்துக் கொண்டே போவார்கள், வருவார்கள். இவர்களை ரசித்து முடிக்கும் முன் சந்திரிகாவுக்கு இறங்க வேண்டிய இடம் வந்து விடும். அதன் பிறகு அவர்களை அடுத்த வாரம் தான் பார்க்க முடியும்.
அவ்வயசுப் பிள்ளைகளின் இக்காதல் மொழிகள் இவளைப் பெரிதும் ஈர்த்தன. ரசிப்பாள். ஆனால், ஒன்று மட்டும் கவனித்தாள். அந்தக் குட்டிப்பெண், பஸ்ஸில் இருக்கை இருந்தாலும் யார் பக்கத்திலும் அமர்ந்ததில்லை. சிரித்தபடி நின்று கொண்டே வருவாள். தோள்பட்டையில் கனமான ஜோல்னா பை இருக்கும்.
அவனும் சூட்கேசை போல ஒரு லெதர் பெட்டியும், ஜோல்னா பையும் வைத்திருப்பான். ஏதோ கைத்தொழில் பிசினஸ் பண்ணுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
இன்னொன்றும் உணர்ந்தாள் சந்திரிகா -வாசனை!
அப்பெண் மேல் ஒருவித வாசனை, அது பெயிண்ட் அல்லது ஏதோ ஆயில் சம்பந்தப்பட்ட வாசனை! காலையில் மட்டுமல்ல சில நாட்கள் இவள் சுற்றிப்பார்த்து விட்டு இரவு எட்டு மணி அளவில் திரும்பும் பஸ்சிலும் அப்பெண்ணைப் பார்க்கிறாள். அப்போதும் அதே வாசனை.
இன்னும் சில நாட்களே இருப்பதால் அப்பெண்ணிடம் பேசியே ஆகவேண்டும் என பெரும் ஆசை ஏற்பட்டது. கடவுளே, நாளை அவள் வரவேண்டும், அவனும் வரவேண்டும். தான் போய் பேச வேண்டும் என முடிவு செய்தாள்.
அன்று காலை இந்தியாவில் இருந்து கொண்டு வந்துள்ள சில அணிகலன்களை பரிசாக அவளுக்கு எடுத்துக்கொண்டு வரப்போகும் பஸ்ஸூக்காக நின்றாள் சந்திரிகா.
57- ஆம் நம்பர் பஸ்ஸில் தான் அப்பெண் பெரும்பாலும் வருவாள். அன்றுன்னு பார்த்து ஏனோ தாமதமானது. காதலனுடன் பேசப் போகும் நாள் போல என்னவோ ஓர் உணர்வு ஏற்பட சந்திரிகாவுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சிரித்துக் கொண்டாள்.
பஸ் வந்தாச்சு. ஏறிப் பார்த்தால் அவள் இல்லை. ஐயோ அவளை பார்க்காமல் பேசாமல் போகக் கூடாது என்று அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டாள். இது எந்த இடம் என்று கூடத் தெரியாது, அப்பெண்ணைப் பார்க்கணும் பேசணும் இது மட்டுமே நோக்கமாக இருந்தது இவளுக்கு.
அடுத்து எந்த பஸ்ஸூம் வரவில்லை. அதனால் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள். கொஞ்ச தூரத்தில் பெரிய பார்க் இருப்பது தெரிந்தது. குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் எல்லோரும் அதை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
இவளும் நடந்தாள். அது ஒரு பிரபலமான பொழுதுபோக்கு மைதானம், 'ஸபுல்தபெக்' எனப்பெயர். அங்குச் சென்ற பின் அந்த நுழைவாயிலில் தான் பெயரைப் பார்த்தாள். டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்,
அவ்விருவரும் கொண்டுவரும் ஜோல்னா பைகளைப் பார்த்திருக்கிறாள். ஒருவேளை கைவினைப் பொருள்கள் விற்க இதுபோன்ற பார்க்குகளுக்கு வருவார்களே என்று தேட ஆரம்பித்தாள்.
வழிநெடுக விதவிதமான கடைகள். பெரும்பாலும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில்! அதனால் நல்ல கூட்டம் எங்கும்.
அரைமணி நேர நடைக்குப்பின் குதூகலமான சத்தங்களுடன் ஒரு கூட்டம். கூட்டத்தை விலக்கியபடி எட்டிப்பார்த்தால் பஸ்ஸில் பார்க்கும் அப்பையன் நான்கு நீள வளையங்கள் வைத்தபடி சுழன்று சுழன்று சர்க்கஸ் போல ஆடிக் கொண்டிருந்தான்.
ஆஹா... இவனைப் பார்த்தாச்சு. அப்படியெனில் அவளும் இங்கு தான் இருப்பாள் எனத் தீர்மானித்தாள் சந்திரிகா.
அந்தப் பையனின் சாகசங்கள் வியக்கும்படி இருந்தன. சாதாரணக் குச்சிகள் போன்ற கம்புகளை ஒன்றின்மேல் ஒன்றாக நிறுத்தி கிடுகிடுவென ஏற ஆரம்பித்தான் எவ்வித சப்போர்ட்டும் இல்லாமல் நடு மைதானத்தில்! அவனின் பேலன்ஸ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விசிலடிக்க வைத்தது. அவனின் இத்திறமையை ரசித்துவிட்டு அப்பெண்ணைத் தேடிக் கிளம்பினாள்.
அடுத்த பகுதியில் அதைவிடப் பெரும் கூட்டம். அங்கே ஒரே நெருப்பு புகை! அருகே சென்றாள். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து, அது உடம்பில் பரவாதபடி லாவகமாக ஆடிப்பாடி வித்தை காட்டிக் கொண்டிருந்தார். அதே வாசனை!
பஸ்சில் அச்சிறுமி ஏறினதும் வருமே அதே வாசனை!
சட்டென்று இங்கும் அங்கும் தேட ஆரம்பித்தாள். இங்கு தான் அவள் இருக்க வேண்டும்.
பார்த்தால் - அங்கே சுழன்று சுழன்று நெருப்பு நடனம் ஆடும் ஒரு ஆளின் மேல் கையில் பக்கெட் ஒன்றில் இருந்த எண்ணெய்யை வாரி வாரி ஊற்றிக் கொண்டிருந்தாள் அந்தக் குட்டிப்பெண் சிரித்தபடி. அவளும் அவர் ஓடி ஆடும் இடமெல்லாம் ஓடிக் கொண்டே!
அவளின் ஆடை முழுவதும் சொத சொதவென்று இருந்தது. ஏதோ தண்ணீர் அடித்து விளையாடுவது போல அவளின் முகத்தில் அத்தனை குஷி!
இவளுக்கு பகீர் என்றிருந்தது. இவர்கள் இது எவ்வளவு ஆபத்தானது எனத் தெரிந்து செய்கிறார்களா, இல்லை பிழைப்புக்காக உயிரை துச்சமென நினைக்கிறார்களா?
அவளைப் பார்த்து பேசியே ஆக வேண்டும் எனக் கட்டாயம் ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேர வித்தை முடிந்ததும் கூட்டம் களைய, அம்மனிதர் அருகே இருந்த குத்துக்கல்லில் அமர, இச்சிறுமி தண்ணீர் கொடுத்து ஒரு துண்டும் கொடுத்து விட்டு, பின்னர் அவ்விடத்தை சுத்தப்படுத்தத் தொடங்கினாள். ஒருவேளை அடுத்த வித்தை விரைவில் ஆரம்பிக்கும் போல.
சந்திரிகா அவளிடம் ஓடினாள். மிக அருகே சென்றதும் அந்த எண்ணெயின் வாசனை. இவளைக் கூர்ந்து பார்த்த அப்பெண் ஸ்பானிய மொழியில் என்ன என்று கேட்க, சந்திரிகா பதில் ஏதும் சொல்லாமல் தன் ஹேண்ட் பேக்கில் இருந்து அவளுக்குக் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைக் கொடுத்தாள்.
தயக்கத்துடன் வாங்கிய அந்த பளீர் குத்துவிளக்குப் பெண் இவளை வியப்புடன் பார்க்க, அவள் கையைப் பிடித்து தனியே அழைத்துப் போனாள்.
சந்திரிகா, பாதி செய்கையிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறிப் பேச ஆரம்பித்தாள் - வார விடுமுறையில் பஸ்ஸில் பார்ப்பது, அவளை ரசிப்பது, அவளின் இந்த வாசனை, அப்புறம் அந்தப் பையனைப் பற்றியும் பேசினாள்.
உடனே அந்தக் குட்டிப்பெண் அருகே கடை போட்டிருந்த இன்னொரு பெண்ணை அழைத்து வந்து சந்திரிகா முன் நிறுத்தினாள்.
புரிந்து கொண்ட சந்திரிகா அவளிடம் மீண்டும் இந்தக் குட்டிப்பெண்ணைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். அந்தப் புது பெண் ஆங்கிலம் ஓரளவு பேசுகிறாள். அதனால் இந்தக் குட்டி பெண்ணிடம் சந்திரிகாவின் அன்பு வார்த்தைகளை விளக்கவே, அவள் முகத்தில் அப்படியோர் வெட்கம்!
குட்டிப்பெண் கடகடவென ஸ்பானிஷில் ஏதோ சொல்ல, கடைக்காரப்பெண் விளக்கினாள்- 'உங்களையும் பார்ப்பாளாம், இவள் உடையில் இந்த கெமிக்கல் எண்ணெய் வாசனை வருவதால் உடன் பயணிப்பவர்களுக்குப் பிடிக்காதாம். இவள் பக்கத்தில் உட்கார்ந்தாலே எழுந்து போவார்களாம். அதனால் தான் இருக்கை கிடைத்தும் இவள் உட்கார மாட்டாள். நீங்கள் ஓரிரு முறை அழைத்தும் உட்காராததுக்கு இதுதான் காரணம், மன்னிக்கவும் என்று கூறுகிறாள்' என்றாள்.
'ஐயோ, பாவம்' எனப்பட்டது சந்திரிகாவுக்கு.
'அதுலாம் சரி, அந்தப் பையன் மேல் காதலா?' எனக் கண்ணடித்து கேட்கவும், அது மட்டும் எப்படிப் புரிந்ததோ, கடைக்காரப் பெண்ணின் பின்னால் ஓடிப்போய் நின்றாள்.
'ஆமாம், கொஞ்ச நாளாக இரண்டும் கொஞ்சிக்கிறாங்க! அவனுக்கு மூணு மணிக்கே இந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்று வித்தை காட்ட வேண்டிய கட்டாயம். ஆனாலும், இவளுக்காக கூடுதல் வாடகை கட்டி இங்கேயே தொடருகிறான். கிறுக்குப் பய...' எனக் கூறி சிரித்தாள் பக்கத்துக் கடைக்காரப் பெண்.
'காதல் எந்த ஊராக, எந்த நாடாக இருந்தாலும் எது வேணாலும் செய்யும்' எனச் சிரித்துக் கொண்டேன்.
'சரி, நான் விரைவில் இந்தியா போகிறேன். உன் பெயர் என்ன?' என்றாள்.
அதே வெட்கத்துடன் 'சியாரா ஜுவானி' என்றாள்.
'அடுத்தமுறை பஸ்சில் என் பக்கத்தில் உட்கார வேண்டும் பளிச் குத்துவிளக்கே' என்றாள்.
உடனே அவளோ, 'இல்லை, இல்லை, இந்த வாசனை உங்கள் உடையில் ஒட்டிக் கொள்ளும்' என்றாள்.
சந்திரிகா, 'எப்போவோ நீ என் மனசில் ஒட்டிக் கொண்டாய் இந்த வாசனையால்' எனக்கூறி, அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

