இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

மோகனூரில் பிறந்த 'மாணிக்கம்'

'டாடா' குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் வாரியக் குழுமத் தலைவராக அறுபத்து மூன்று வயதான என். சந்திரசேகரனின் பதவிக் காலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

என். சந்திரசேகர்

Published On :

உப்பு, மென்பொருள், கார்கள், லாரி வணிகம் என்று பரந்து விரிந்த 180 பில்லியன் டாலர் மதிப்புள்ள மாபெரும் 'டாடா' குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் வாரியக் குழுமத் தலைவராக அறுபத்து மூன்று வயதான என். சந்திரசேகரனின் பதவிக் காலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

'மறுநியமனம் கோரப் போவதில்லை' என்று என். சந்திரசேகரன் அறிவித்திருந்த நிலையில், இந்த ஆச்சரியமான முடிவால் அந்தக் குழுமப் பங்குகளின் விலை உயர்ந்துள்ளன. கார்ப்பரேட் உலகில் புருவங்களை உயர்த்தியுள்ள இந்த முடிவை டாடா குழுமத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஒருபுறம் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் கட்டாயமும், மறுபுறம் டாடா குழுமத்தின் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்ற டிரஸ்ட்டின் நிலைபாடும், இதோடு நிறுவனத் தலைவர் பதவிக்காக நடக்கும் அதிகாரப் போரும் டாடா குழுமத்தில் மீண்டும் ஒரு நீண்ட சட்டப் போராட்டம் தொடங்கும் என்ற முன்னறிப்பை முன்வைத்துள்ளன. கடந்த ஆண்டு டாடா நிறுவனத்தில் சுமார் ரூ.159 கோடி சம்பளம் பெற்றிருக்கும் சந்திரசேகரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

மோகனூரில் இருந்து...

அந்த மூன்று சகோதரர்கள், மோகனூரிலிருந்து மூன்று கி. மீ. தினமும் நாமக்கல் நடந்து சென்று தமிழ் வழியில் பள்ளிக் கல்வி படித்து வந்தனர்.

35 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சகோதரர்கள் சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாகக் குடியிருந்து வேலை பார்த்தனர். அப்போது அவர்களிடத்தில் இருந்தது ஒரே ஒரு ஸ்கூட்டர் மட்டும்தான். கடைசி சகோதரரான நடராஜன் சந்திரசேகரன், டாடா குழுமத் தலைவராக உயர்ந்தது கார்ப்பரேட் உலகத்தில் மாபெரும் சாதனையாகக் கருதப்பட்டது.

கல்லூரிப் படிப்பு முடித்தவுடன், தந்தை சொன்னதன்பேரில் ஆறு மாதம் வயல், வரப்பு, பயிர் என்று வேளாண்மை செய்து வந்தாலும், கணினி படிப்பின் மீதிருந்த மோகம், அவரை மோகனூரிலிருந்து திருச்சி, கோவை என்று மேற்படிப்புக்காக அழைத்துச் சென்றது.

டி.சி.எஸ். நிறுவனத்தில் 1987-இல் இணைந்து, நிறுவனத்தை வளர்த்த சந்திரசேகரன் உழைப்பால் 2009-ஆம் ஆண்டில் டி.சி.எஸ். தலைவர் பொறுப்பில் அமர்ந்தார். டாடா குழுமத்தின் நம்பிக்கையைப் பெற்ற சந்திரசேகரன் அதன் தலைவரானார். இப்போது நீட்டிப்பையையும் பெற்றுள்ளார். முதல் முறையாக டாடா குடும்பத்தைச் சேராத, பார்சி இனத்தவர் அல்லாத சந்திரசேகரனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவரை 'சந்திரா..' என்றுதான் டாடா குழும நிறுவனங்களில் அழைப்பார்கள். சிறந்த புகைப்படக் கலைஞரான இவர், ஓய்வு நேரத்தில் காமிராவில் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கிவிடுவார். மராத்தான் ஓட்டப்பந்தைய வீரருமான இவர், டோக்கியோ, நியூயார்க், பெர்லின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற மராத்தான் பந்தயங்களில் பங்கேற்று முழு தூரத்தை ஓடி முடித்துள்ளார். பழைய தமிழ்ப் படங்களின் பாடல்களைக் கேட்பது இவரது பொழுதுபோக்கு.

சந்திரசேகரன் காலை ஓட்டத்துக்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி ஊறவைத்த சியா விதைகளுடன் நாளைத் தொடங்குவார். இவருக்குப் பிடித்தமான உணவுகள் கீரை, கொத்துமல்லி, செலரி, வெள்ளரிக்காய், பாறை உப்புடன் கூடிய ஜூஸ் போன்றவையாகும்.

சந்திரசேகரனுக்கு பிரணவ் சந்திரசேகரன் என்ற ஒரு மகன் உள்ளார். மனைவி லலிதா.

மும்பையின் பெடர் சாலையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில், 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட 'டூப்ளக்ஸ்' (இரு தளங்களைக் கொண்ட) வீட்டை 2020-ஆம் ஆண்டில் ரூ. 98 கோடிக்கு சந்திரசேகரன் வாங்கி, அங்கு வசித்து வருகிறார்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.