அலமாரியில் இருந்து...
தொழில்நுட்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், மனிதர்களின் அடிப்படைத் தேவை மட்டும் மாறவில்லை.
தொழில்நுட்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், மனிதர்களின் அடிப்படைத் தேவை மட்டும் மாறவில்லை. நினைவுகளைப் பாதுகாக்க வேண்டும். தகவல்களை இழக்கக்கூடாது. ஒரு காலத்தில் அலமாரியில் பாதுகாத்த புகைப்படம் இன்று மேகத்தில் (கிளவுட் ஸ்டோரேஜ்) இருக்கிறது. நாளை அது எங்கே இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.
'பழைய புகைப்படங்களை எங்கே வைத்திருக்கிறீர்கள்?' என்று இளம்தலைமுறையினரிடம் கேள்வியைக் கேட்டால், 'கைப்பேசியில்தான் இருக்கிறது' என்ற பதில் உடனே வந்துவிடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கேள்விக்கு, 'அலமாரியில் வைக்கப்பட்ட புகைப்பட ஆல்பம், ஒலிநாடா, குறுந்தகடு, நெகிழ்வட்டு...' என்று பதில்கள் வரும். இவ்வாறு நினைவுகளையும் தகவல்களையும் பாதுகாக்க மனிதர்கள் பயன்படுத்திய சாதனங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்துள்ளன.
ஒரு காலத்தில் கணினித் தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட நெகிழ்வட்டு (ஃப்ளாப்பி டிஸ்க்), பின்னர் வந்த வன்தட்டு நினைவகம் (ஹார்ட் டிஸ்க்) போன்றவை தொழில்நுட்ப உலகில் முக்கிய இடம் பிடித்திருந்தன. அதிலும், நெகிழ்வட்டுகள் சிறிய அளவிலான கணினித் தகவல்களை எடுத்துச் செல்லப் பயன்பட்டன. இன்று அவற்றைப் பார்ப்பதே பலருக்கு பழைய நினைவாகிவிட்டது. அதன்பின்னர், குறுந்தகடு (சி.டி.) பயன்பாடு பெருமளவில் வளர்ந்தது. பாடல்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ள குறுந்தகடுகள் பயன்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து அதிக அளவு தகவல்களைச் சேமிக்க உதவிய ஒளித்தட்டு (டி.வி.டி.) மக்களிடம் பரவலானது.
இதே காலகட்டத்தில் இசை உலகில் ஒலிநாடா (கேசட்) தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியது. தொழில்நுட்பம் வேகமெடுத்தபோது, தகவல்களைச் சேமிப்பது மட்டுமல்லாமல், அவற்றை எளிதாக எடுத்துச் செல்வதும் முக்கியமானதாகியது. அப்போது கையடக்க நினைவகம் (பென் டிரைவ்) ஒரு புதிய வசதியை வழங்கியது. கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை எளிதாக எடுத்துச் செல்ல முடிந்ததால், இது விரைவாகப் பிரபலமானது.
பின்னர் கைப்பேசி, ஒளிப்படக் கருவி போன்ற சாதனங்களின் வளர்ச்சியுடன் நினைவக அட்டை (மெமரி கார்டு) பயன்பாடு அதிகரித்தது.
இதற்கிடையில், தகவல் சேமிப்பு உலகில் மற்றொரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. சுழலும் பாகங்களைக் கொண்ட பழைய சேமிப்புச் சாதனங்களுக்கு மாற்றாக வேகமான திடநிலை நினைவகம் (எஸ்.எஸ்.டி.) பயன்பாட்டுக்கு வந்தது. குறைந்த அளவு இடத்தில் அதிக வேகத்துடன் தகவல்களைப் படிக்கவும், எழுதவும் உதவும் இந்தத் தொழில்நுட்பம், இன்று பல கணினிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் கடந்து, தகவல் சேமிப்பின் கருத்தையே மாற்றியமைத்தது மேகச் சேமிப்பகம் (கிளவுட் ஸ்டோரேஜ்).
இன்று ஒரு புகைப்படத்தை கைப்பேசியில் எடுத்தவுடன், அது நம் கையில் இருக்கும் சாதனத்தில் மட்டும் இருப்பதில்லை. இணையத்தின் உதவியுடன் தொலைவில் உள்ள தரவு மையங்களில் சேமிக்கப்படலாம். பின்னர், தேவையான நேரத்தில் வேறு ஒரு சாதனத்தின் மூலமாகவும் அதை அணுகமுடியும். முன்பு தகவல் நம் கையில் இருந்த ஒரு பொருளுக்குள் இருந்தது. இன்று அது நம் கண்களுக்குத் தெரியாத தொலைதூரக் கணினிகளில் சேமிக்கப்பட்டிருக்கலாம்.
அடுத்து என்ன?
விஞ்ஞானிகள் மரபணுத் தகவல் மூலக்கூறு (டி.என்.ஏ.) போன்ற உயிரியல் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி தகவல்களைச் சேமிப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த வகையான சேமிப்பு முறை மக்கள் பயன்படுத்தும் சாதனமாக மாறவில்லை என்றாலும், மிகக் குறைந்த இடத்தில் மிகப் பெரிய அளவு தகவல்களைச் சேமிக்கக்கூடிய எதிர்காலத் தொழில்நுட்பமாக இது ஆய்வு செய்யப்படுகிறது.
அதேபோல், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வளர்ச்சியால் தகவல்களைச் சேமிப்பது மட்டுமல்லாமல், அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் முறையும் மாறக்கூடும். 'கடந்த ஆண்டு எடுத்த மழைக்காலப் புகைப்படங்களைக் காட்டு' என்று கேட்டால், கோப்புகளின் பெயர்களைத் தேடாமல், அவற்றின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டு தகவல்களைத் தேடும் வசதிகள் மேலும் வளர வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

