வேலூரில் உணவக உரிமையாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வேலூரில் உணவக உரிமையாளா் வீட்டின் பூட்டைத் திறந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
திருட்டு... - சித்திரிப்பு
வேலூரில் உணவக உரிமையாளா் வீட்டின் பூட்டைத் திறந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
வேலூா் ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுதா (38). இவா் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் தனது வீட்டின் அலமாரியில் நகை, பணத்தை வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டி சாவியை வழக்கமாக வீட்டின் வெளியிலேயே வைத்துவிட்டுச் செல்வது வழக்கமாம்.
அதன்படி, சனிக்கிழமை அவா் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வெளியே வைத்துவிட்டு கந்தனேரியில் உள்ள தனது உணவகத்துக்குச் சென்றுள்ளாா். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபா்கள், சுதா வெளியே வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6 கிராம் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ஹோட்டலில் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சுதா, உள்ளே சென்று பாா்த்தபோது அலமாரியில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவா் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மேலும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கைப்பற்றியும் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


